மசெக வெற்றி; பால் தம்பையா தோல்வி

பொதுத் தேர்தலில் புக்கிட் பாஞ்சாங் தனித் தொகுதியின் முடிவு நேற்று முதலில் அறிவிக்கப்பட்டது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் 56 வயது திரு லியாங் எங் ஹுவா 18,070 (53.74%) வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைவரான 55 வயது டாக்டர் பால் தம்பையா 15,566 (46.26%) வாக்குகளைப் பெற்றார்.

திரு லியாங் எங் ஹுவா கடந்த 2015 பொதுத் தேர்தலில் ஹாலந்து புக்கிட் தீமா குழுத் தொகுதிக்கு உட்பட்ட ஸெங்ஹுவா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.

புக்கிட் பாஞ்சாங் தனித் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பல ஆண்டுகள் செயல்பட்ட டாக்டர் டியோ ஹோ பின் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் இங்கு திரு லியாங்

களமிறக்கப்பட்டார்.

நேற்று பின்னிரவு தேர்தல் முடிவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பால் தம்மையா, எங்களுக்கு ஆதரவு அளித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. எங்களுடைய குழு கடுமையான போட்டி கொடுத்தற்கு உறுதுணையாக இருந்த எங்கள் கட்சித் தொண்டர்களுக்கும் நன்றி கூறுகிறேன்,” என்றார். அப்போது அவருடன் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான் இருந்தார்.