பரோட்டா கடைக்காரரைத் தாக்கிய ஆடவருக்குச் சிறை, பிரம்படி 

இலவசமாக பரோட்டா தருமாறு கேட்டுக்கொண்டே இருந்த முருகன் ஜோசஃப், அது கிடைக்காததால் ஆத்திரத்தில் கத்தியால் கடைக்காரரைத் தாக்கித் தலையில் நான்கு சென்டிமீட்டர் காயத்தை விளைவித்தார். இக்குற்றத்திற்காக நேற்று நீதிமன்றத்தில் 45 வயது முருகனுக்கு பத்து மாதங்கள், இரண்டு வாரங்கள் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் $3,000 அபராதமும் விதிக்கப்பட்டன.
வேலையில்லாத முருகன் இரு நண்பர்களுடன் கிளமெண்டியில் உள்ள ‘ஹபிப்ஸ் எக்ஸ்பிரஸ்’ உணவுக்கடைக்குச் சென்ற ஆண்டு ஜூலை 29ஆம் தேதியன்று மாலை 5.15 மணியளவில் சென்றிருந்தார். அங்கு பரோட்டா வேண்டும் என்று கேட்டபின் அது தயாரானதும் பணமில்லை என்று கூறிய முருகனுக்குக் கடை உதவியாளர் பரோட்டா தர மறுத்துவிட்டார். அதனால் கடைக்காரரைத் தகாத சொற்களில் திட்டி, அங்கிருந்து போனவர்கள் மறுபடியும் கடைக்கு வந்து பரோட்டா வேண்டுமென்று மிரட்டினர். மூன்றாவது முறையாக மறுக்கப்பட்டபோது முருகன் கத்தியால் சமையல்காரரைத் தாக்கினார். மூவரும் கைது செய்யப்பட்டனர். தாக்குதல் நடந்த சமயத்தில் முருகன் குடிபோதையில் இருந்ததாகவும் ரத்த பரிசோதனை உறுதிப்படுத்தியது. மற்ற இருவர் மீதுள்ள வழக்குகள் விசாரணையில் உள்ளன.