தேசிய சேவையாளர்களுக்கு கல்வி, வேலையில் மேலும் உதவி

தங்களுடைய சேவையை முடிக்கவிருக்கும் தேசிய சேவையாளர்கள் வேலை தேடவும் கல்வியில் மேம்படவும் இப்போது மேலும் உதவி கிடைக்க இருக்கிறது.

வேலைக்கு அல்லது மேல்படிப்புக்கு அவர்களை ஆயத்தப்படுத்த உதவியாக முக்கிய தொழில்துறைகளை உள்ளடக்கிய காலாண்டுச் சந்தை நேற்று நடந்தது.

அந்தச் சந்தையில் ஒவ்வொரு துறைக்கும் தேவைப்படும் ஆற்றல்களைப் பற்றியும் பல துறைகளைச் சேர்ந்த வேலை வாய்ப்புகள் குறித்தும் தேசிய சேவையாளர்கள் தெரிந்துகொண்டனர்.

மேம்பட்ட வாழ்க்கைத் தொழில் மற்றும் கல்விச் சந்தை எனப்படும் அந்தச் சந்தையில் புதிய அம்சமாக இந்த உதவிகள் இடம்பெற்றன.

சன்டெக் சிட்டி மாநாட்டு மையத்தில் நடந்த இந்தச் சந்தைக்கு சுமார் 4,000 தேசிய சேவையாளர்கள் சென்றனர். 

தற்காப்பு அமைச்சும் உள்துறை அமைச்சும் 2015 முதல் இந்த ஒரு நாள் சந்தைக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏற்பாடு செய்து வருகின்றன. இப்போது 16வது தடவையாக இந்தச் சந்தை நடந்தது. 

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஆலோசனை பயிலரங்குகளும் இடம்பெற்றன. 

தேசிய சேவையாளர்கள் வேலை தேடும்போது அவர்களுக்கு உதவுவதற்காக தேவையான வளங்களை உள்ளடக்கிய இணையத் திட்டம் ஒன்றும் நேற்று தொடங்கப்பட்டது.

நேற்றைய சந்தையில் பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த 57 நிறுவனங்களும் 15 உயர்கல்வி நிலையங்களும் கலந்துகொண்டன.

தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் நேற்று சந்தைக்கு வருகை அளித்தார். 

தேசிய சேவையாளர்களுக்கு மிகவும் பொருத்தமான வாய்ப்புகளை வழங்கக்கூடிய கல்வி நிறுவனங்க ளோடும் முதலாளிகளோடும் சேர்ந்து பாடுபட தற்காப்பு அமைச்சு உறுதிபூண்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

“தேசிய சேவையை முடிப்போரில் பலர் மேலும் படிக்க விரும்பலாம். சிலர் வேலைக்குச் செல்ல ஆசைப்படலாம்.  இதுபோன்ற சந்தை மூலமாக நாம் அவர்களுடன் சேர்ந்து செயல்பட்டு அவர்களிடம் முதலீடு செய்து சிறப்பான எதிர்காலத்தைச் சாதிக்கிறோம்,” என்று அமைச்சர் கூறினார்.