அங் மோ கியோ நகைக்கடையில் கொள்ளை

அங் மோ கியோவில் உள்ள ஒரு நகைக் கடை நேற்று கொள்ளையடிக்கப்பட்டது, குற்றவாளி சுமார், $100,000 மதிப்புள்ள பொருட்களுடன் தப்பினார்.

அங் மோ கியோ அவென்யூ 10, புளோக் 574ல் உள்ள ஹாக் சியோங் ஜேட் & ஜூவல்லரி நகைக்கடைக்கு வெளியே, நேற்று மாலை 4 மணியளவில் 30 வயது தோற்றமுடைய, கருப்பு ஆடைகள் அணிந்த ஆடவர் ஒருவரைப் பார்த்ததாக சிகையலங்கார நிபுணர் ஹெங் டியோ 'தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்' நாளிதழிடம் தெரிவித்திருந்தார். 

திருட்டு நடந்த நகைக்கடைக்குப் பக்கத்து கடையான 'எலிகன்ஸ் ஜென்ட்ஸ் ஹேர்டிரஸ்ஸிங்' உரிமையாளர் திரு ஹெங், 65, நகைக்கடையில் ஒரு சலசலப்பைக் கேட்டதாகவும், பின்னர் கடை உரிமையாளர்களில் ஒருவர்  “தோலோங், தோலோங் (உதவுங்கள், உதவுங்கள்), எங்கள் பொருட்களை எடுத்துக் கொள்ளாதீர்கள்”  என்று மன்றாடியதைக் கேட்டதாகவும் கூறினார்.

அங் மோ கியோ அவென்யூ 10, புளோக் 574ல் உள்ள ஹாக் சியோங் ஜேட் & ஜூவல்லரி நகைக்கடை
அங் மோ கியோ அவென்யூ 10, புளோக் 574ல் உள்ள ஹாக் சியோங் ஜேட் & ஜூவல்லரி நகைக்கடை

தாம் கடையிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது, முன்பு கண்ட ஆடவர் நகைக்கடையிலிருந்து வெளியே ஓடிச்சென்றதைக் கண்டதாகவும் திரு ஹெங் கூறினார்.

கருப்பு ஹெல்மெட் அணிந்திருந்த அந்த சந்தேக நபர்,  நீல நிற ஜாக்கெட், கருப்பு கால்சட்டை அணிந்து கையில் கருப்பு பை ஒன்றையும் ஏந்தியிருந்தார்.

கொள்ளையரிடம் மன்றாடியவர் கடை உரிமையாளர்களான இரு வயதான சகோதரர்களில் இளையவர் என்றும் அவர் கூறினார்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் எந்த ஆயுதமும் பயன்படுத்தப்படவில்லை, யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மாலை 4.10 மணிக்கு போலிசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. கொள்ளைச் சம்பவம் குறித்து மேல் விவரங்களோ தகவலோ கொடுக்க விரும்பினால் பொதுமக்கள் 1800-255-0000 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் அல்லது  www.police.gov.sg/iwitness இணையத்தளத்துக்குச் செல்லலாம்.