பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டியவருக்கு சீர்திருத்த பயிற்சி

போதைப் புழங்கியான முகம்மது ஃபஸுல்லா முகம்மது கான், ‘ரோலெக்ஸ்’ கைக்கடிகாரம் ஒன்றைத் திருடிவிட்டு போலிசிடமிருந்து தலைமறைவாக இருக்க முற்பட்டார். அதையடுத்து, முன்பின் தெரியாத பெண் ஒருவரது வீட்டிற்குள் அத்துமீறி புகுந்த அந்த 36 வயது ஆடவர், கத்தியைக் காட்டி அந்தப் பெண்ணை மிரட்டினார்.
பாசிர் ரிஸ் இல்லத்தில் 2016ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தில் வீட்டின் கழிவறையில் அந்தப் பெண்ணை பலவந்தமாக அடைத்து வைத்த துப்புரவுப் பணியாளரான ஃபஸுல்லா, பின்னர் ஒன்றரை மணிநேரம் கழித்து அவரை விடுவித்தார். அதே நாள் இரவு 7.20 மணியளவில் ஃபஸுல்லா போலிசிடம் சரணடைந்தார்.

முன்னதாக போதைப்பொருள் குற்றங்கள் புரிந்த அவருக்கு இன்று ஐந்து ஆண்டுகள் சீர்திருத்த பயிற்சியும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

மீண்டும் மீண்டும் குற்றம் புரிபவர்கள் சீர்திருத்த பயிற்சிக்கு உட்படுத்தப்படுவர். பொதுவாக, குற்றவாளிகள் தண்டனைக்காலத்தின்போது நன்னடத்தையை வெளிப்படுத்தினால் தண்டனைக்காலம் குறைக்கப்படலாம். ஆனால், மறுபடியும் குற்றம் புரிபவர்களுக்கு தண்டனைக்காலம் குறைக்கப்படாது.

திருட்டு, போதைப் புழக்கம் உள்ளிட்ட குற்றங்கள் புரிந்ததன் தொடர்பில் இவ்வாண்டு தொடக்கத்தில் ஃபஸுல்லா ஒன்பது குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் ஃபஸுல்லாவைப் பிரதிநிதித்து வாதிட்ட இரு வழக்கறிஞர்கள், தங்களது கட்சிக்காரருக்கு மனநலப் பிரச்சினை இருப்பதால் அவரால் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க முடியவில்லை என்று நீதிபதியிடம் கூறினர்.