கொரோனா கிருமித்தொற்று: சிங்கப்பூரில் 524 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

சிங்கப்பூரில் நேற்றிரவு (பிப்ரவரி 2) நிலவரப்படி 524 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

புதிய நோவல் கொரோனா கிருமித் தொற்று பரவுவதைக் கையாளும் அமைச்சர்கள் நிலை பணிக்குழுவின் தலைவர்களுள் ஒருவரான திரு வோங், நாடாளுமன்றத்தில் இன்று இந்த விவரத்தைத் தெரிவித்தார்.

அவர்களில் 222 பேர் அரசாங்கத்தின் தனிமைப்படுத்தப்படும் இடங்களிலும் 302 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காலகட்டத்தில் இருக்க வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதே வளாகத்தில் இருக்கும் மற்றவர்களுடன் தொடர்புகொள்ள முடியாது,” என்றார் அவர்.

வீட்டில் இருப்பவர்கள் காணொளி அழைப்பு வழியாக அவர்களது சுகாதார நிலவரம் குறித்து தெரிவிக்க வேண்டும். அவர்கள் வீடுகளிலேயே இருப்பதை உறுதி செய்ய சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விதிமுறைகளை மீறினால் அவர்களுக்கு சிறைத் தண்டனையோ, அபராதமோ விதிக்கப்படலாம்.

பாதிப்புக்குள்ளானவர்களையும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களையும் கண்டுபிடித்து, தனிமைப்படுத்துவது  கிருமித்தொற்றுக்கு எதிரான இரண்டாம் நிலை தற்காப்பு என்றார் அமைச்சர்.

சீனாவில் 17,000க்கும் அதிகமானோர் நோவல் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 361க்கு உயர்ந்திருப்பதாக அமைச்சர் சுட்டினார்.

பயம் காரணமாக சிங்கப்பூரர்களிடையே பிரிவினை, சந்தேகம் ஏற்படக்கூடாது என்று குறிப்பிட்ட திரு வோங், “நிலைமை எவ்வாறு  மாறும் என்றோ, எவ்வளவு காலத்துக்கு இது நீடிக்கும் என்றோ யாராலும் சொல்ல இயலாது. திறன் மிகுந்த அரசாங்கமாக, ஒற்றுமையான மக்களாக, உறுதிபெற்ற தேசமாக இருந்தால் நாம்  இந்தப் போராட்டத்தில் வெற்றிபெறுவோம்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

#தமிழ்முரசு #வூஹான் #கொரோனா #கிருமித்தொற்றுசிங்கப்பூர்