சுடச் சுடச் செய்திகள்

பெற்றோர்களுக்குக் கல்வி அமைச்சு ஆலோசனை: பிள்ளைகள் சுயமாகக் கற்றுக்கொள்ள உதவுங்கள்

கொரோனா தொற்று எதிரொலியாக இன்று (ஏப்ரல் 1) முதல் வாரம் ஒருநாள் மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களைக் கற்கும் நடவடிக்கை இடம்பெறவிருக்கிறது.

புதன்கிழமைகளில் தொடக்கப் பள்ளிகள், வியாழக்கிழமைகளில் உயர்நிலைப் பள்ளிகள், வெள்ளிக்கிழமைகளில் தொடக்கக் கல்லூரிகள் மற்றும் மில்லெனியா கல்வி நிலையம் என வாரம் ஒருநாள் வீட்டிலிருந்து கற்கும் நடவடிக்கை இடம்பெறும் என கல்வி அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது.

இந்நிலையில், பெற்றோர்களின் சில கவலைகளைப் போக்கும்விதமாக, வீட்டிலிருந்து கற்றல் முறை எப்படி இடம்பெறும், இந்தக் காலகட்டத்தில் தங்கள் பிள்ளைகளின் கற்றலுக்குப் பெற்றோர்கள் எப்படி உறுதுணையாக இருக்கலாம் என்பது பற்றி விளக்கும் வகையில் கல்வி அமைச்சு, ஆலோசனைக் குறிப்பு ஒன்றைத் தொகுத்துள்ளது. அந்தத் தொகுப்பு, ‘பேரன்ட்ஸ் கேட்வே’ எனப்படும் மின்னிலக்கத் தளம் வழியாக பெற்றோர்களுக்கு அனுப்பப்படும்.

தங்கள் பிள்ளைகள் வீட்டில் இருந்து கற்கும் நாளில் பெற்றோர்கள் ஆசிரியப் பணியை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்றும் மாறாக பிள்ளைகள் சுயமாகக் கற்றுக்கொள்ள உதவலாம் என்றும் அமைச்சு ஆலோசனை தெரிவித்துள்ளது.

வீட்டிலிருந்து கற்கும் நாளில் தொடக்கப் பள்ளி மாணவர்கள் நான்கு மணி நேரமும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஐந்து மணி நேரமும் தொடக்கக் கல்லூரி மற்றும் மில்லெனியா கல்வி நிலைய மாணவர்கள் ஆறு மணி நேரமும் கற்பர். அதில் இரண்டு மணி நேரத்தை மின்னிலக்கச் சாதனங்கள் வழி கற்றலுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இணைய ஒப்படைப்புகள், மின்னஞ்சல் வழியாக பாடக்குறிப்புகள் அல்லது பயிற்சித் தாட்களைப் பெறுவது போன்ற இணையவழிக் கற்றலும் பாடப்புத்தகங்கள் போன்ற வழக்கமான ஒப்படைப்புகளும் இருக்கும் என்று பெற்றோர்களுக்கான ஆலோசனைத் தொகுப்பில் அமைச்சு  விளக்கியுள்ளது.

மாணவர்களின் தேவைக்கேற்றபடி பள்ளிகள் வெவ்வேறு திட்டங்களைக் கொண்டிருக்கும் என்றும் அதனால் ஒன்றுடன் ஒன்று ஒப்புநோக்க வேண்டாம் என்றும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், படிக்க, உண்ண, ஓய்வெடுக்க தனித்தனி நேரத்தை ஒதுக்கி, பிள்ளைகளை அதற்குப் பழக்கப்படுத்தலாம் என்றும் உணவு மேசை அல்லது கற்றல் மேசை என படிப்பதற்கு உகந்த இடத்தை, சூழலை அமைத்துத் தரலாம் என்றும் பெற்றோர்களை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

பிள்ளைகள் வீட்டில் இருந்து கற்கும் நாட்கள் அதிகப்படுத்தப்படும் பட்சத்தில், வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்ய இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சு அறிவுறுத்தி இருக்கிறது.

#சிங்கப்பூர் #பள்ளி #மாணவர் #வீட்டிலிருந்து கல்வி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon