2 வயது குழந்தை உட்பட ஐவரைக் காயப்படுத்திய ஓட்டுநர் கைது

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி இரண்டு வயது பெண் குழந்தை உட்பட ஐவரைக் காயப்படுத்தியதற்காக 34 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆடவர் மீது சந்தேகத்தின் பேரில் போதைப்பொருள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை இரவு தெம்பனிஸ் அவென்யூ 10ஐ நோக்கிச் செல்லும் பிடோக் நார்த் ரோட்டில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு லாரி விபத்துக்குள்ளான செய்தி குறித்து இரவு 8.53 மணியளவில் போலிசாருக்குத் தகவல் கிடைத்தது.

சமூக ஊடகங்களில் பரவலாக வலம் வரும் 43 வினாடி காணொளி ஒன்றில், லாரியின் ஓட்டுநர் பக்கத்தை ஒரு சிவப்பு நிற கார் இடிப்பது போல் உள்ளது.

சாலை நடுவே உள்ள தடுப்பின் மேல் சிவப்பு நிற கார் சென்றதுடன் இடிக்கப்பட்ட லாரி தடுப்பைத் தாண்டி எதிர்புறச் சாலைக்குச் சென்றுவிட்டது.

இந்த விபத்தில் காயமடைந்த அந்த இரண்டு வயது குழந்தை கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

31, 55 மற்றும் 69 வயதுகளுடைய மூன்று ஆண் ஓட்டுநர்களுடன் 31 வயது பெண் பயணி ஒருவரும் சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online