இன்று தமிழ் முரசின் பிறந்தநாள்

மாணவர்களுக்கும் தமிழ் முரசுக்கும் உள்ள உறவு சென்ற நூற்றாண்டு முதல் தொடர்ந்து வருகிறது.

தமிழ் முரசுக்கு இன்று 85வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

1935ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் தேதி தமிழ் முரசு நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் முரசைத் தோற்றுவித்தவர் தமிழவேள் கோ.சாரங்கபாணி.

மன்னர் காலத்தில் மக்களுக்குச் செய்தி சொல்ல வேண்டும் என்றால், ஓர் இடத்தில் பெரிய முரசை வேகமாக அடிப்பார்கள். மக்கள் அங்கே கூடுவார்கள். மன்னரின் அறிவிப்புகள் அறிவிக்கப்படும்.

அதேபோல, தமிழில் மக்களுக்குச் செய்தி சொல்லும் இதழ் என்பதால் இதற்கு தமிழ் முரசு என்று இதழின் ஆசிரியர் கோ.சாரங்கபாணி பெயர் வைத்தார். எத்தனை பொருத்தமான அழகான பெயர்!

தமிழ் முரசு பிறந்த காலத்தில் இணையம் இல்லை. கைத்தொலைபேசியும் இல்லை. தொலைக்காட்சி கூட நடைமுறையில் இல்லை.

உலகத்தில், நாட்டில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள நாளிதழ்களைத்தான் மக்கள் அதிகம் நாட வேண்டும்.

காலையில் பத்திரிகை எடுத்துப் படித்தால்தான் செய்திகளைத் தெரிந்துகொள்ள முடியும்.

அதனால், மக்களுக்கு நாட்டு நடப்புகளையும் செய்திகளையும் தெரிவிப்பதற்காக தமிழ் முரசு தொடங்கப்பட்டது.

பிறந்தபோது அது சின்னக் குழந்தை. தவழ்ந்து தவழ்ந்து ஒரே ஆண்டில் அது பெரிதாக வளர்ந்து விட்டது. அதன் பிறகு, உசேன் ஃபோல்ட் போல படுவேகமான ஓட்டம்தான்.

சிங்கப்பூரிலிருந்து மலேசியா வரை எல்லா இடங்களிலும் தமிழ் முரசு வேகமாக ஒலித்தது.

செய்தி சொல்வதோடு, தமிழ் சமூகம் வளர்ச்சி பெற தேவையானவற்றை எடுத்துச் சொன்னது. மக்கள் படிக்கவும், முன்னேறவும் வழிகாட்டியது.

தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் வளர்க்க தமிழ் முரசு முயற்சி எடுத்தது.

மாணவர்கள் தமிழ் படிக்கவும் தமிழில் எழுதவும் மாணவர் முரசை 2.5.1952 தொடங்கியது. தொடங்கியபோது அதன் பெயர் மாணவர் மணி மன்றம். உங்கள் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, ஆசிரியர் எல்லாரும் மாணவர் முரசைப் படித்து வளர்ந்தவர்கள்.

படிக்கும் பிள்ளைகள் முதல், வேலைக்குச் செல்வோர், வீட்டில் இருப்பவர்கள், முதியவர்கள் என்று எல்லாருக்கும் தேவையான செய்திகளையும் தகவல்களையும் தமிழ் முரசு வழங்கி வருகிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தமிழ் முரசும் மாறி வந்துள்ளது.

இப்போது மின் இறக்கை கொண்டு உங்களது தொலைபேசி, கணினி, ஐபேட் என்று எல்லா இடங்களிலும் பறக்கிறது தமிழ் முரசு. இனிமேல் வரும் மாற்றங்களையும் தமிழ் முரசு உள்வாங்கி, தன்னை மாற்றிக்கொள்ளும். உங்களோடு சேர்ந்து மொழியைப் பேணி வளர்க்கும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!