மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான தேதி குறிப்பதில் பாகுபாடு என குற்றச்சாட்டு: உள்துறை அமைச்சு மறுப்பு

போதைப்பொருள் கடத்தலில் குற்றம் நிரூபிக்கப்பட்ட தமது கட்சிக்காரருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைத் தள்ளிப்போடும் முயற்சியாக, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக வழக்கறிஞர் எம்.ரவி நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வாதிட்டார்.

மரண தண்டனைகள் விதிக்கப்பட்ட அதே கால வரிசையில் அவை நிறைவேற்றப்படுவதில்லை என்று அவர் கூறினார். சிங்கப்பூரரான தமது கட்சிக்காரர் 44 வயது சையது சுஹைல் சையது ஸின்னுக்கு முன்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு முன்னதாகவே சுஹைலுக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்ததைச் சுட்டிக் காட்டினார் வழக்கறிஞர் ரவி.

கொவிட்-19 சூழலில் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக திரு ரவி சொன்னார்.

நாட்டு எல்லைகள் மீண்டும் திறக்கப்படும் வரை வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படாது எனத் தமது கட்சிக்காரர் நம்புவதாக திரு ரவி குறிப்பிட்டார்.

எல்லைகள் மூடப்பட்டிருப்பதால் வெளிநாடுகள் உள்ள குடும்ப உறுப்பினர்களை அவர்களால் சந்திக்க முடியாதது, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவுடன் உடலை சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்புவதில் சிக்கல் ஏற்படுவது போன்றவற்றை அவர் சுட்டினார்.

சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம் எனக் கூறும் அரசியல் சாசனப் பிரிவு 12க்கு எதிரானது இது என்று திரு ரவி வாதிட்டார்.

அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி சார்பில் இதற்குப் பதிலளித்த அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் ஃபிரான்சில் இங், மரண தண்டனைகள் விதிக்கப்படும் அதே கால வரிசையில் அவற்றை நிறைவேற்றுவதற்கு விதிமுறை இல்லை என்று கூறினார்.

தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், மேல்முறையீட்டு நீதிபதிகள் ஆன்ட்ரூ பாங், ஜுடித் பிரகா‌ஷ் ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து கூடுதல் வாதங்களைச் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டது.

குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான கால அட்டவணையை நிர்ணயிப்பதில் பாகுபாடு காட்டுவதோ முறைகேடான நடைமுறையைக் கடைப்பிடிப்பதோ போன்றவையெல்லாம் கிடையாது என்று உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

குற்றவாளி சிங்கப்பூரராக இருந்தாலும் சரி, வெளிநாட்டவராக இருந்தாலும் சரி, தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது, கருணை மனு சமர்ப்பிப்பது தொடர்பில் அனைத்துவித சட்ட நடைமுறைகளும் பலனளிக்காத பட்சத்தில்தான் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான தேதி குறிக்கப்படும் என்று அமைச்சு கூறியது.

இந்த வழக்கு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள “ஆதாரமற்ற” குற்றச்சாட்டுகளுக்கு தான் அளித்த பதில் அடுத்த நீதிமன்ற விசாரணைக்கு முன்னர் பதிவு செய்யப்படும் என்றும் அமைச்சு சொன்னது.

38.84 கிராம் ‘ஹெராயின்’ போதைப்பொருள் கடத்தியதற்காக 2015ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி உயர் நீதிமன்றம் சுஹைலுக்கு மரண தண்டனை விதித்திருந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!