சதீஷ்: வேலைச் சூழலில் மாற்றம் ஒன்றே மாறாதது

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் கடந்தாண்டு ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பை முடித்த பிறகு வாழ்க்கைத்தொழிலைத் தொடங்க சதீ‌ஷ் முருகையா ஆவலுடன் இருந்தார். இறுதியாண்டு தேர்வுகளை எழுதுவதற்கு முன்னரே சதீ‌ஷுக்கு ஆட்சேர்ப்பு ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துவிட்டது. விற்பனை தொடர்பான அந்த வேலை அவருக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட வேலையைச் செய்ய வேண்டும் என இவர் விரும்பினார். கிடைத்த வேலையைக் கைவிடாமல் தொழில்நுட்பத் துறையில் இவர் வேலை தேடினார்.

கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரத்தால் பல துறைகள் பாதிப்புக்குள்ளாக, வேலை தேடுவது சதீஷுக்கு சிரமமாக இருந்தது.

சில மாதங்களாக எத்தனையோ வேலைகளுக்கு விண்ணப்பித்தும் பயனளிக்காததால் சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பின் ‘மை கரியர்ஸ் ஃபியூச்சர்’ எனும் இணையப் பக்கத்தில் இவர் வேலை வாய்ப்புகளைத் தேடினார். அதன் இணையப் பக்கத்தில் தமக்கு விருப்பமான தொழில்நுட்ப வேலைக்கு விண்ணப்பித்த சதீஷ், நேர்முகத் தேர்வுக்குச் சென்று கடந்த மாதம் ‘என்சிஎஸ்’ எனும் நிறுவனத்தில் வர்த்தக ஆய்வாளராக வேலையில் சேர்ந்தார்.

வேலையில் சேர்ந்தவுடன் 12 மாதங்களுக்கு ‘எஸ்ஜி யுனைடெட் வேலைப் பயிற்சி திட்டத்தில் சதீ‌ஷ் சேர்ந்தார். தமது வேலைக்கு தேவையான திறன்களை இவர் முறையாக கற்றுக்கொள்ள இது உதவுவதாக இவர் கூறுகிறார். இவரது நிறுவனம் வழங்கும் தொழில்நுட்பச் சேவையைப் பயன்படுத்துவோர் ஏதாவது சிக்கலைச் சந்தித்தால் அதற்குத் தீர்வு காணும் பொறுப்பு இவருக்கு உள்ளது.

“முந்தைய வேலைக்கும் தற்போது செய்யும் பணிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. குறுகிய நேரத்திற்குள் தொழில்நுட்ப நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள முயன்று வருகிறேன். திறந்த மனப்பான்மையுடன் எந்நேரத்திலும் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையை இந்தப் பயிற்சித் திட்டம் கொடுக்கிறது,” என்று தெரிவித்தார் சதீ‌ஷ், 26.

தற்போதைய வேலைச் சூழலில் ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என கருதும் சதீ‌ஷ், சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்ளும் தன்மை முக்கியம் என அறிவுறுத்தினார்.

“இளம் பட்டதாரிகள் வேலை தேடுவதற்கு இது சிரமமான காலகட்டம் என்பதை அறிவேன். எதிர்பார்ப்புகளை சரிப்படுத்திக்கொண்டு உங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்வதுடன் மேலும் வளர்ச்சி காண்பதற்கு வாய்ப்புகளைத் தொடர்ந்து தேடுங்கள். விரும்பும் வேலையில் சேர கால அவகாசம் எடுக்கலாம். ஆனால் மனம் தளர வேண்டாம்,” என்று அறிவுறுத்துகிறார் சதீ‌ஷ்.

செய்தி: ப. பாலசுப்பிரமணியம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!