அன்றுபோல் இன்றும் மன உறுதியுடன் ஜெயமணி

முகத்தில் சுருக்கங்கள். முடி நரைத்து, முதுமை மெல்ல எட்டிப்பார்க்கத் தொடங்கியுள்ளது. ஆனால் கண்களிலும் பேச்சிலும் மின்னும் அதீத உற்சாகம், முதுமையிலும் திருவாட்டி கே. ஜெயமணி சிங்கப்பூரின் தலைசிறந்த வீராங்கனைகளில் ஒருவர் என்பதைப் பறைசாற்றுகிறது.

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள், உலகக் கிண்ணம், காமன்வெல்த் போட்டி பலவற்றில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து தங்கப் பதக்கம் உட்பட பல சிறப்புகளைச் சேர்த்த திடல் தட சாதனையாளரான திருவாட்டி ஜெயமணி, போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றாலும் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவரைப் பராமரித்து வருகிறார். விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றபோதும் திருவாட்டி ஜெயமணியின் வாழ்க்கையின் வேகம் ஓயவில்லை. திருமணமே செய்யாதிருந்த திருவாட்டி ஜெயமணி 2004ஆம் ஆண்டில் தமது நாற்பத்தெட்டு வயதில் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள ஏழு வயது சினோவினை இன்றுவரை பராமரித்து வருகிறார்.

“ஆரம்பத்தில் அறவே பேசாத சினோவின் இப்போது ஓரளவு பேசி பிறருடன் பழகுகிறான்,” என்று அவர் கூறினார். விளையாட்டாளராக இருந்து பெற்ற மனஉறுதி, அந்தச் சிறுவனைப் பராமரிக்க கைகொடுத்ததாக திருவாட்டி ஜெயமணி கூறினார்.

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நெடுந்தொலைவு ஓட்டத்தில் தங்கம் வென்ற ஒரே சிங்கப்பூர் வீராங்கனை என்ற சாதனையை திருவாட்டி ஜெயமணிதான் இன்றுவரை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். 1,500 மீட்டர் ஓட்டத்திற்கும் (4:31.2) 3,000 மீட்டர் ஓட்டத்திற்கும் (9:56.6) அவர் செய்துள்ள சாதனைகள் இதுவரை முறியடிக்கப்படவில்லை.

திருவாட்டி ஜெயமணியின் ஓட்டப்பந்தயப் பயணம், சிங்கப்பூரின் ஒப்பற்ற சமூகத் தலைவராக இப்போதுவரை கொண்டாடப்படும் தமிழவேள் கோ. சாரங்கபாணி 1950களில் முன்னெடுத்த தமிழர் திருநாள் விளையாட்டுப் போட்டிகளில் தொடங்கியது. இவரது தந்தை எம். கந்தசாமியும் அவரது நெருங்கிய நண்பர் திரு டி. கிருஷ்ணசாமியும் திருவாட்டி ஜெயமணியையும் அவரது உடன்பிறந்தவர்களையும் கிட்டத்தட்ட ஒரு மாதம் நீடிக்கும் தமிழர் சங்கத்தின் விளையாட்டு நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்வர்.

புக்கிட் தீமாவில் இருந்த முன்னாள் சிங்கப்பூர் பல்கலைக் கழக வளாகத்தில் தோட்டக் கலைஞராக பணிபுரிந்த இவரது தந்தைக்கு தமிழ்ச் சமூகம் மீதான பற்று வலுவாக இருந்தது. 1935ஆம் ஆண்டில் இவரது அப்பா 13 வயதில் மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தார். அம்மா எல். முத்தம்மாள் மலேசியாவில் பிறந்தவர். இவர்கள் 1941ல் திருமணம் புரிந்தார். குடும்பத்தின் ஆறு பெண் குழந்தைகளில் நான்காவது பெண்ணான திருவாட்டி ஜெயமணி 1955ஆம் ஆண்டில் பிறந்தவர். “பெரும்பாலான இந்தியர்கள் பெண்கள் விளையாட்டில் ஈடுபடுவதை அப்போது ஊக்குவித்தனர்,” என்ற திருவாட்டி ஜெயமணி பெற்றோர்கள் ஊக்கம் கொடுத்தபோதும் அவரைக் கட்டாயப்படுத்தவில்லை என்றார்.

சுவிஸ் காட்டெஜ் தொடக்கப்பள்ளியிலும் டன்னர்ன் உயர்நிலைப்பள்ளியிலும் பயின்ற திருவாட்டி ஜெயமணி, பள்ளியின் திடல்தடப் போட்டி மன்றங்களுடன் சிங்கப்பூரின், நீண்ட வரலாற்றைக்கொண்ட ஓட்டப்பந்தய மன்றமான ‘சுவிஃப்ட் கிளப்’, மன்றத்திலும் சேர்ந்தார். நெடுந்தூர நடைப் போட்டிக்காக தொடக்கத்தில் பயிற்சி பெற்ற இவர், பிறகு தமது பயிற்றுவிப்பாளர் மோரிஸ் நிக்கலஸ் பரிந்துரையின் பேரில் ஓட்டத்திற்கு மாறினார்.

சிங்கப்பூர் மற்றும் ஆசிய அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் பங்கெடுத்த பிறகு இவர் 1983ஆம் ஆண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டார். 1,500 மீட்டர் மற்றும் 3,000 மீட்டர் பிரிவுகளில் பங்கேற்ற திருவாட்டி ஜெயமணி, 3,000 மீட்டர் போட்டியில் வெண்கலம் வென்றார்.
ஆயினும், நெடுந்தொலைவு போட்டியில் எப்படியும் தங்கப் பதக்கம் வெல்லும் இலட்சிய வேட்கையுடன் இருந்ததாகக் கூறினார்.
பயிற்றுவிப்பாளர் எம். சிவலிங்கத்தின் வழிகாட்டுதலுடன் திருவாட்டி ஜெயமணி நெடுந்தொலைவு ஓட்டத்தை 3 மணி நேரம் 2 நிமிடங்களுக்குள் முடித்துக்கொண்டு தங்கம் வென்றார்.

இத்தகைய வெற்றிக்குக் கடின உழைப்பு, உத்திபூர்வ செயல்பாடு மட்டுமின்றி சிறிதளவு அதிர்ஷ்டமும் தேவைப்படும் என்றார் திருவாட்டி ஜெயமணி.
“அதுவே அந்த ஆண்டுக்கான திடல்தடப் போட்டியில் சிங்கப்பூருக்குக் கிடைத்த ஒரே தங்கப் பதக்கமாகும்,” என்றார் திருவாட்டி ஜெயமணி.
இவருடன் சில விளையாட்டாளர்கள் சிங்கப்பூரின் அப்போதைய அதிபர் சி.வி. தேவன் நாயரால் இஸ்தானாவில் கௌரவிக்கப்பட்டனர்.
விளையாட்டாளர்களுக்கு அவ்வளவு அரசு ஆதரவு இல்லாத காலகட்டத்தில் சொந்தக் காலில் முழுமையாக நிற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் திருவாட்டி ஜெயமணி. 1975 ஆம் ஆண்டு முதல் 1979 வரை ‘பிஎஸ்ஏ’இல் பொது ஊழியராகப் பகுதி நேரமாகப் பணியாற்றிய பின்னர் 1979 முதல் 1983 வரை ஏஷியன் அமெச்சர் திடல்தட சங்கத்தில் பணிபுரிந்தார். அதன் பிறகு அவர் 2000ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் பிரெஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் விநியோகப் பிரிவில் பணியாற்றினார்.

தற்போது இவர் தமது நண்பரின் பாலர் பள்ளி மற்றும் தொடக்கநிலை பள்ளி மாணவர்களுக்கு உடற்பயிற்சித் திட்டங்களை வகுக்கவும் நடத்தவும் உதவுகிறார். வயதைக் காரணமாகக் கொண்டு முதியவர்கள் தங்களை முடக்கிக்கொள்ளாமல் முடிந்தவரை செயல்படுங்கள் என்று அவர் ஊக்கம் தருகிறார்.
மற்ற விளையாட்டுகளைப் போல ஒட்டப் பந்தயங்களிலும் முழுமனதோடு ஈடுபடும்போதுதான் அதற்குத் தேவையான திறன்கள் மேம்பட்டு போட்டிகளில் வெற்றியடைய வழிவகுக்கும் என்று திருவாட்டி ஜெயமணி தெரிவித்தார்.

இன்றைய காலகட்டத்தில் அதிக இந்தியப் பெண்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை என்றபோதிலும் அவர்கள் வெற்றி பெற வேறு பல துறைகள் இருப்பதாக திருவாட்டி ஜெயமணி தெரிவித்தார்.“விளையாட்டு வீரர் அல்லது வீராங்கனை ஆக வேண்டும் என்ற விருப்பம் இருந்தால்தான் ஒருவரால் அதில் சாதிக்க முடியும். விருப்பம் இல்லாது பெற்றோர் அல்லது மற்றவர்களின் வற்புறுத்தலால் யாராலும் விளையாட்டுப் போட்டிகளில் சிகரத்தை எட்ட முடியாது,” என்றார் திருவாட்டி ஜெயமணி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!