சுயவிழிப்புணர்வை ஊக்குவிக்கும் இளம் தலைமுறை சோதிடர்கள்

சோதி­டத்தை ஓர் ஆய்­வாக

மேற்­கொள்­ளும் தினேஷ்

சோதிடம் மீது முன்பு நம்பிக்கையில்லாதவர் தினேஷ் சேரம், 32. ஒரு சமயம், அவரின் மூத்த சகோதரர் கத்தாரில் வேறொரு சமயத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்யவிருந்தபோது சோதிடர் ஒருவரிடம் அந்தச் சகோதரரின் ஜாதகம் காட்டப்பட்டது.

சகோதரரைப் பற்றி அதற்குமுன் அறிந்திராத அந்த சோதிடர், இவர் மரபுக்கு வெளியே திருமணம் செய்வார் என்று மிகத் துல்லியமாகக் கூறியது தம்மை வியப்பில் ஆழ்த்தியதாகக் கூறினார் தினேஷ். அந்தச் சகோதரர் வெளிநாட்டில் தங்கிவிடுவார் என்பதையும் சோதிடர் சரியாகக் கணித்தார். இதனால் சோதிடம் பற்றி மேலும் அறிந்திட தினேஷுக்கு ஆர்வம் ஏற்பட்டது. தமது 21வது வயதில் வைதீக சோதிடத்தைப் பற்றி சுயமாக புத்தகங்களிலிருந்து கற்றுக்கொண்டார். பிறகு அனுபவமுள்ள சோதிடர்களிடமிருந்தும் கற்றுக்கொண்டார்.

இப்போது பகுதிநேரமாக வைதீக சோதிடராக பிறருக்குப் பலன் கூறுகிறார் இவர். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் துறையில் பயின்ற தினேஷ், மருந்தக நிறுவனம் ஒன்றில் உயிரியல் தொழில் நுட்பராகப் பணிபுரிகிறார்.

கோள்களின் அசைவுகள், கடலையும் பருவநிலையையும் பாதிக்கின்றன. அதேவேளை மனித உணர்வுகள் மீதும் மனித வாழ்க்கை மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்னும் நோக்கில் சோதிடத்தை ஓர் ஆய்வாகவே தினேஷ் கருதுகிறார்.

“வாகனமோட்டிகளின் சுமுகமான பயணத்திற்குப் போக்குவரத்து விளக்குகளும் எச்சரிக்கைப் பலகைகளும் துணையாக இருப்பதுபோல்தான் மனித வாழ்க்கைக்கு சோதிடம்,” என்றார்.

திருமண ஜாதகப் பொருத்தம் பார்க்கும் தினேஷ், உறவு மேலும் எவ்வாறு மேம்படலாம் என்ற ஆக்கபூர்வமான வழிகாட்டுதலை தாம் வழங்குவதாகத் தெரிவித்தார். சோதிடத்தின் மீது வைக்கப்படும் நம்பிக்கை, ஒருவரை அச்சுறுத்தவோ பேராசை காட்டுவதாகவோ மாறுவதை மக்கள் தவிர்ப்பது நல்லது என்றார்.

சுயமுன்­னேற்­றத்தை சோதி­டம் வழி ஊக்­கு­விக்­கும் நாரா­யணி

ஆறு ஆண்டுகளாக ‘டெரட்’ (Tarot) அட்டைகள் கொண்ட சோதிட முறையைப் பயன்படுத்தி வருகிறார் நாராயணி சிங்காரம்.

விதவிதமான உருவங்களைக் கொண்ட அட்டைகளை ஒருவர் முன் பரப்பி, அவர் தேர்ந்தெடுக்கும் சில அட்டைகளைக் கொண்டு பலன் கூறும் இந்தச் சோதிட முறை, 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொடங்கியதாக நம்பப்படுகிறது.

ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி முன்னுரைப்பது, அவர் இறக்கும் தேதியைக் குறிப்பது போன்றவற்றைத் தாம் கூறுவது இல்லை எனக் குறிப்பிட்ட நாராயணி, தம்மிடம் வருபவர்களுக்கு வழிகாட்டுவதாகத் தெரிவித்தார்.

“நமது ஆழ்மனதே நமக்குச் சிறந்த வழிகாட்டி. ஒருவரின் ஆழ்மனது விருப்பங்களை அவர் அறிய வைத்து முடிவெடுக்க உதவுவதே என் பணி,” என்று ஜூரோங் பறவைப் பூங்காவில் விலங்கு பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றும் நாராயணி கூறினார்.

சோதிடம் மூலம் தெரியவரும் தகவல்களை ஆக்கபூர்வமான முறையில் விளக்கும் உத்திகளை அறிந்திருப்பது நல்லது என்று கருதும் நாராயணி, இதற்காக ஓராண்டு காலம் மனோவியல் கல்வியை மேற்கொள்ள திட்டமிடுவதாகக் கூறினார்.

‘டெரட்’ அட்டைகளைக் கொண்டு சோதிடம் கூறும் கலையில் தாம் பணம் ஈட்டுவதற்காக ஈடுபடவில்லை என்று தெரிவித்தார். தங்களின் காதல் கைகூடுமா என்பதை அறியத் தம்மை நாடி வரும் பெண்களின் மனப்போக்கை மாற்றி, சுய வளர்ச்சி மீது கவனம் செலுத்தச் சொல்வதாகக் கூறுகிறார் நாராயணி, 32.

“நமக்குள் உறைந்து கிடக்கும் திறமைகளை வளர்த்து நம்மை நாமே உயர்த்தும்போது பொருத்தமான வாழ்க்கைத்துணை, வேலை வாய்ப்புகள் நம்மைத் தேடி வருவது நிச்சயம்,” என்றார்.

“பணத்தின் மீது குறியாக இருப்பவர்கள், பிறருக்கு உதவ விரும்புபவர்கள் என்ற இரு பிரிவினரின் வெளிப்பாடுகள் வேறுபட்டு இருக்கும். நுணுக்கமாகக் கவனித்தால் அதை நாம் உணரலாம்,” என்று தெரிவித்தார் நாராயணி.

புது நம்­பிக்­கைக்கு சோதி­டம்

என்­கி­றார் லெஸ்­டர்

ராசிக்கற்கள் பற்றி தெரியாமல் இருந்தவர்தான் சுகாதாரத் துறை பணியாளர் லெஸ்டர் பெரேரா, 33.

சில ஆண்டுகளுக்கு முன் ராசிக்கல் நிபுணராக இருக்கும் தம்முடைய வருங்கால மாமனாரைச் சந்தித்தபோது இதுகுறித்து லெஸ்டருக்கு ஆர்வம் வளரத் தொடங்கியது.

“ராசிக்கற்கள் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. பின்னர் ராசிக்கற்கள் தொடர்பில் பலரும் அறிந்திருக்கும் ஒருவரான என் மாமனாரைச் சந்தித்தேன். அவரது விளக்கங்கள் என்னை வியக்க வைத்தன. நானும் அவரிடம் ராசிக்கற்கள் பற்றி கற்றுக்கொள்ளத் தொடங்கினேன்,” என்று லெஸ்டர் கூறினார்.

பொருத்தமான ராசிக்கற்களை மோதிரமாக, கழுத்தணியாக உடலில் அணிவதன் மூலம் ஒருவருக்குப் புத்துணர்வும் புது நம்பிக்கையும் தோன்றுகிறது என்று லெஸ்டர் குறிப்பிட்டார்.

“சோதிடம் வேறு, அறிவியல் வேறு என்றாலும் அறிவியலுக்கு மிகவும் நெருக்கமான தொடர்பை இந்த ராசிக்கல் முறை ஏற்படுத்துகிறது என்பது என் கருத்து,” என்றார்.

ராசிக்கற்களை இளையர்கள் பலர் விரும்பி வாங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 11 ஆண்டுகளாக இத்துறையில் உள்ள லெஸ்டரின் மாமனார் திரு ‘வீ.எம்’ எனப்படும் வேலும் மயிலும், அறிவியல் கண்ணோட்டத்துடன் ராசிக்கல் அணிதலைத் தாம் காண்பதாகத் தெரிவித்தார்.

ராசிக்கற்களை அணிவதைச் சமய நம்பிக்கையுடன் அதிகம் தொடர்புபடுத்துவது மூடநம்பிக்கைகளின் உருவாக்கத்திற்கு வித்திடுவதாகவும் கூறினார் திரு ‘வீ.எம்’.

“ராசிக்கற்களை அணிவதால் ஏற்படும் புத்துணர்வு வெற்றிக்கான ஊக்கத்தைக் கொடுத்துவிடும்,” என்று அவர் கூறினார்.

உடல் ஆரோக்கியம், செல்வச் செழிப்பு, அதிர்ஷ்டம் உள்ளிட்டவை ராசிக்கற்களின் நற்பலனாகக் கூறப்படுவதற்கு இந்த நல்ல அதிர்வலைகளால் ஏற்படும் மன அமைதியே காரணம் என்றார்.

இந்தச் சித்தாந்தம் இளையர்களைக் கவரக்கூடிய விதத்தில் இருப்பதாகக் கருதுகிறார் லெஸ்டர்.

மனோவியல் பாதிப்பை சோதிடம்

மூலம் தவிர்க்கும் ராஜலெட்சுமி

ஒருவரது ஆழ்மனதுடன் தொடர்புகொண்டு அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் பற்றி அறிய உதவும் சோதிட முறையைக் கையாள்பவர் ராஜலெட்சுமி ஜெயபாலன். தமது சேவையால் பிறருக்கு உதவி செய்வதுடன் எதிர்காலத்தில் ஒருவருக்கு ஏற்படக்கூடிய இடர்பாடுகளைத் தவிர்க்க உதவுவதாகவும் கூறுகிறார் இவர்.

சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த ராஜலெட்சுமி, தற்போது ஆஸ்திரேலியாவில் சமூகப் பணியாளராகப் பணியாற்றுகிறார். தமது ஓய்வு நேரங்களில் இந்தச் சேவையை வழங்குகிறார்.

மூதாதையர் மற்றும் சந்ததியினரின் உயிரியல் கூறுகளை உடலின் மரபணு கூறுகிறது. அதேபோல் ஒவ்வொருவர் மனதிலும் புதைந்து கிடக்கும் ‘ஆகாஷிக்’ பதிவுகள், முந்தைய தலைமுறையினரின் மனப்போக்கும் உணர்ச்சிகளும் நமக்குள் இருப்பதையும் காட்டுவதாக 39 வயது திருவாட்டி ராஜலெட்சுமி கூறினார்.

தலைமுறை தலைமுறையாக சில குடும்பங்களில் மணவிலக்கு, அச்ச உணர்வு, நிதி நிர்வாகமின்மை போன்ற வழக்கங்கள் நிலவுவதை ஆகாஷிக் பதிவுகள் காட்டும் என்று தெரிவித்த அவர், இதே நிலை நீடிக்காமல் அதிலிருந்து விடுபட தாம் உதவுவதாகத் தெரிவித்தார். இதன்மூலம் மனோவியல் பாதிப்புகளிலிருந்து பலரைத் தம்மால் விடுவிக்க முடிந்ததாகவும் அவர் கூறினார்.

பின்னர் ஆகாஷிக் பதிவுகளைப் பற்றி மேலும் ஆழமாகக் கற்றுக்கொள்ள முறையான வகுப்பில் கடந்தாண்டு சேர்ந்தார்.

“நம்மை நாமே நன்கு நிர்வகித்து கொள்வது, நம்மைச் சுற்றியிருப்போருக்கு நாம் செய்யும் தொண்டாகும். சுய நிர்வாகத்திற்கு பிரபஞ்ச அதிர்வுகளை அறிந்திருப்பது பேருதவியாக இருக்கும்,” என்று அவர் கூறினார். பிரபஞ்சத்தின் அதிர்வுகளால் ஏற்படும் பாதிப்பை ஒருவர் புரிந்துகொண்டு அதை எதிர்கொள்ள விவேகத்துடன் செயல்படுவதற்கு இந்த ‘ஆகாஷிக்’ முறை பயன்படுத்தப்படுகிறது என்றார் அவர்.

தகவல் திரட்டு: கி. ஜனார்த்தனன்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!