வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய நடைமுறை குறித்து மாறுபட்ட கருத்து

வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய நடைமுறை குறித்து பலரும் தமிழ் முரசிடம் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்கள் அதிகம் கூடும் லிட்டில் இந்தியா, கேலாங் சிராய், சைனாடவுன், ஜூரோங் ஈஸ்ட் ஆகிய இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும், பொது விடுமுறை நாள்களிலும் செல்லும் முன்னர் தங்குவிடுதியில் வசிப்போர் சிறப்பு அனுமதிச்சீட்டுக்கு விண்ணப்பிக்கவேண்டும் என்ற புதிய நடைமுறை செயல்படுத்தப்பட்டது குறித்து அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

புதிய நடைமுறை ஜூன் மாதம் 24ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரும் என்று மனிதவள அமைச்சு அறிவித்தது.

கொவிட்-19 கிருமித்தொற்றின் பாதிப்பைக் கட்டுப்படுத்துவது இதன் நோக்கம்.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை தேக்கா செல்லும் தன்னைப் போன்றவர்களுக்கு இத்திட்டம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றார் கட்டுமான ஊழியரான சிவக்குமார்.

முக்கியமான வேலைகளுக்காக மட்டுமே தேக்கா செல்லும் அவர், தேவையான பெரும்பாலான பொருள்கள், சேவைகள், வசதிகள் அனைத்தும் தங்குவிடுதியிலேயே கிடைத்துவிடுவதாகக் குறிப்பிட்டார்.

தங்குவிடுதிகளின் மேலாளர்கள் அனுமதிச்சீட்டுக்கு விண்ணப்பித்து உதவுவதாக அவர் கூறினார்.

விடுதியில் தங்களுக்கு அனுமதிச்சீட்டைப் பற்றியும் அதற்கு எவ்வாறு விண்ணப்பிக்கவேண்டும் என்பதைப் பற்றியும் விளக்கப்பட்டதாகக் கூறினார் கட்டுமானத் துறையில் பணிபுரியும் பெயர் குறிப்பிட விரும்பாத வெளிநாட்டு ஊழியர் ஒருவர்.

அதனால், இனி தானும் தன் நண்பர்களும் இந்த அனுமதிச்சீட்டைப் பெற்ற பிறகே தேக்கா செல்லமுடியும் என்றார் அவர்.

ஆனால் செம்பவாங்கில் உள்ள தங்குவிடுதி ஒன்றில் வசிக்கும் ராஜா, தனக்கு இதுவரை இந்த அனுமதிச்சீட்டைப் பற்றி எதுவும் தெரியாது என்று சொன்னார்.

தேக்காவிற்கு எப்போதாவது நண்பர்களைச் சந்திக்க மட்டும் செல்லும் அவர், இத்திட்டத்தினால் தன்னைப் போன்றவர்கள் தேக்காவிற்கு செல்வது பெரிதும் குறைந்துவிடும் என எண்ணுகிறார்.

அனுமதிச்சீட்டுக்கு எவ்வாறு பதிவுசெய்யவேண்டும் என்று இதுவரை தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று மற்றொரு வெளிநாட்டு ஊழியரான சரண்ராஜ் கூறினார்.

நடைமுறை தெரிந்த பிறகு நிச்சயம் அனுமதி பெற்ற பிறகே தேக்காவிற்குச் செல்லப் போவதாக அவர் தெரிவித்தார்.

தங்குவிடுதிகளும் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களும் இந்த அனுமதிச்சீட்டைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால் சிறப்பாக இருக்கும் எனக் கருதுகிறார் திரு விஜயகுமார்.

ஆனால், இத்திட்டத்தினால் கடை உரிமையாளர்கள் தங்களது வியாபாரம் மந்தமடையும் என அச்சம் கொண்டுள்ளனர்.

“கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகள் தளர்த்தப்பட்டபின், கடந்த சில வாரங்களாகத்தான் வியாபாரம் நன்றாக நடந்துவருகிறது. ஆனால், இத்தகைய திட்டத்தால் வெளிநாட்டு ஊழியர்கள் தேக்கா வருவது பெருமளவு குறைந்து விடும். இதனால், எங்களது வியாபாரமும் பாதிப்படையும்,” என்று கேம்பல் லேனில் அமைந்துள்ள டிஷோன் மொத்த விற்பனைக் கடையின் உரிமையாளரான திரு சந்துரு கூறினார்.

தங்குவிடுதிகளிலேயே மளிகைப் பொருள்கள், காய்கறிகள் போன்றவற்றை விற்கும் சிறிய கடைகள் இருப்பதால் வெளிநாட்டு ஊழியர்கள் தேக்கா வருவதற்கான தேவை பெரிதும் குறைந்துவிட்டது.

ஆனால், இச்சிறு கடைகள் தேக்காவிலிருக்கும் மொத்த விற்பனைக் கடைகளிலிருந்து பொருளை வாங்கி, லாப நோக்கத்துடன் விலையை அதிகரித்து விற்க வாய்ப்புள்ளது என்றார் அவர்.

இந்தத் திட்டம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் வாய்ப்பை அதிகரித்தாலும் வியாபார வேகத்தைக் குறைத்துவிடும் என்பதால் சற்று வருத்தமளிப்பதாகக் கூறினார் ரசூல் மளிகைக் கடையில் பணிபுரியும் செல்வகுமார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!