அதிக இந்திய குடும்பங்களுக்கு உதவியளிக்க சிண்டா அறிவித்த புதிய மாற்றம்

குறைந்த வருமானம் ஈட்டும் இந்திய குடும்பங்கள் மட்டுமின்றி நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கும் ஆதரவுக்கரம் நீட்டும் வகையில் சிண்டாவின் உதவி பெறும் இந்திய குடும்பங்களின் தனிநபர் வருமான வரம்பை, அந்த அமைப்பு 1,000 வெள்ளியிலிருந்து 1,600 வெள்ளியாக உயர்த்தியுள்ளது.

உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவினம், விலைவாசி ஏற்றம் ஆகியவற்றைச் சமாளிக்கும் விதமாக இந்த உதவி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்தப் புதிய மாற்றம் மூலம் கூடுதலாக 11,000 இந்திய குடும்பங்கள் பயனடைவார்கள். மேலும், இந்திய சமுதாயத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சிண்டா கூடுதலாக இவ்வாண்டு $5 மில்லியன் செலவு செய்யவுள்ளது,” என்று பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி மற்றும் தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா அறிவித்தார்.

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் தலைவருமான குமாரி இந்திராணி ராஜா, ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 21) கரையோரப் பூந்தோட்டத்தில் சிண்டா ஏற்பாடு செய்திருந்த பாராட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

சிண்டாவுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் தொண்டூழியர்கள், பங்காளி நிறுவனங்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தனிபர் வருமான வரம்பு ஆறாண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டது. மேலும், தகுதியுடைய குடும்பங்கள் இனி $10 கட்டணம் செலுத்துவதற்குப் பதிலாக இலவசமாகவே அவர்களின் பிள்ளைகளை சிண்டாவின் ‘ஸ்டெப்’ துணைப்பாட வகுப்புகளுக்குப் பதிவு செய்யலாம்.

அதோடு, பிள்ளைகளுக்குக் கல்வி உதவித்தொகை, பற்றுச்சீட்டுகள் போன்ற உதவிகளும் உண்டு.

புதிய மாற்றம் பற்றி கருத்துரைத்த சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன், “சிண்டாவை குறைந்த வருமான குடும்பங்களுக்கு உதவியளிக்கும் அமைப்பாக மட்டும் பார்க்கக்கூடாது.

“பணவீக்கத்தால் நடுத்தர வருமானக் குடும்பங்களிலேயே கீழடுக்குப் பிரிவில் இருப்பவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டனர். உதவி நாடி சிண்டாவுக்கு வரும்போது, அவர்கள் நிராகரிக்கப்பட மாட்டார்கள். சிண்டா அனைத்து இந்தியர்களையும் அரவணைத்து ஆதரவு வழங்கும்,” என்று நம்பிக்கை அளித்தார்.

புதிய மாற்றத்தால் பயன்பெறும் பயனாளிகளில் ஒருவர், திருமதி பவித்ரா ராஜேந்திரன், 31. மூன்று பிள்ளைகளுக்குத் தாயான பவித்ரா, “என் பிள்ளைகளில் ஒருவருக்கு மதியிறுக்கப் பிரச்சினை உள்ளது. கடந்த மூன்றாண்டுகளாக நாங்கள் சிண்டாவின் உதவியைப் பெற்று வருகிறோம்.

“சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுக்கு உதவிகள் இருந்தாலும் சிண்டா தெரிவித்துள்ள இந்தப் புதிய மாற்றத்தால் எனக்கும் என் கணவருக்கும் நிதிச் சுமை வெகுவாகக் குறையும். என் ஏழு மாதக் குழந்தை பிறந்தபோது சிண்டா எங்களுக்கு அன்புப் பரிசுப் பொட்டலத்தையும் வழங்கியது,” என்று கூறினார் பவித்ரா.

தகுதியுடைய அனைத்து இந்திய சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் இதனால் பயன் பெறலாம். $1,600க்கு மேல் தனிநபர் வருமானம் கொண்ட குடும்பங்கள், $10 கட்டணம் செலுத்தி சிண்டாவின் இதர திட்டங்களில் பங்குகொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!