அனுபவம் புதுமை நிறைந்த கல்விப்பயணம்

கல்வி ஒரு பக்கம், சேவை மறுபக்கம்

தொழில்நுட்பம் எவ்வாறு பின்தங்கிய மக்களையும் அரவணைக்கலாம் என்பது மிர்தினியின் நீண்டநாள் எண்ணம். தொடக்கக் கல்லூரியில் தற்காப்பு அறிவியல் அமைப்பின் (டிஎஸ்ஓ) வழிகாட்டுதலில் ஆய்வு நடத்தும் வாய்ப்புப் பெற்ற இவர், அதன்மூலம் பேச்சுத்தடை, செவிக்குறைபாடு இருப்போரின் தேவைகளைக் கண்டறிய முயன்றார். 

கணினி, மின் அமைப்புகள் குரல் வளம் ஏற்படுத்தும் முறை பேச்சொலியாக்கம் என அறியப்படுகிறது. இத்தொழில்நுட்பம் எவ்வாறு கேட்டல், பேச்சுத் தடைகள் உள்ளோருக்கு உதவுமாறு வடிவமைக்கப்படலாம் என்பதில் ஆழமாக ஆய்வு மேற்கொண்டனர் மிர்தினியும் அவரின் சக மாணவ ஆய்வாளரும். 

“அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சி சிங்கப்பூரின் முன்னுரிமையாக உள்ளது. இவ்வளர்ச்சியில் உடற்குறையுள்ளவர்கள் முதலியோர் பின்தங்கி உள்ள நிலையை எவ்வாறு மேம்படுத்தலாம் என்ற எண்ணத்தை தொடக்கக் கல்லூரி அனுபவங்கள் விதைத்துள்ளன,” என்றார் ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தில் பயின்ற 18 வயது மிர்தினி ஶ்ரீ ராஜாராம். 

சிங்கப்பூர் அறிவியல், பொறியியல் சந்தையில் (Singapore Science and Engineering Fair) தங்க விருது பெற்றதோடு அனைத்துலக அறிவியல், பொறியியல் சந்தைக்குத் தேர்வான உலகளவில் மொத்தம் 6 குழுக்களில் அவரும் இடம்பெற்றார். அமெரிக்காவின் டாலஸ் மாநிலத்தில் இச்சந்தையில் கலந்துகொண்ட அவர், வகுப்பறையைத் தாண்டிய இத்தகைய அனுபவங்கள் தமது வாழ்க்கைப் பாதையை நிர்ணயிப்பதில் பங்கு வகித்துள்ளதைக் குறிப்பிட்டார். மருத்துவம் அல்லது பொறியியல் வழியில் சென்று மருத்துவத் தொழில்நுட்பத்தில் புரட்சி எழுப்பும் முனைப்பில் இருக்கிறார் அவர். 

ஆண்டர்சன்-சிராங்கூன் தொடக்கக்கல்லூரியைச் சேர்ந்த சையது சுஃப்யானுக்கோ, மனநல விழிப்புணர்வில் ஈடுபாடு அதிகம். மனநலக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டோருடன் உறவாடும் சேவை வாய்ப்பு அவரின் பார்வையை விரிவாக்க உள்ளதாக அவர் உணர்ந்தார். 

முதன்முறை மனநலக் கழக வார்டுக்குச் சென்றபோது அங்கிருந்தோர் தங்களின் லட்சியங்களை எல்லாம் எழுதியிருந்த பலகை ஒன்றைக் கவனித்தார் சுஃப்யான்.

“துப்புரவு பணியாளராக வேண்டும், அல்லது காசாளராக வேண்டும் என்றெல்லாம் அவர்கள் எழுதியிருந்தது நெகிழச் செய்தது. நான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கிறேன் என்றும் தோன்றியது,” என்றார் 18 வயது சுஃப்யான். 

பள்ளியிலும் மனநல விழிப்புணர்வைப் பரப்புவதில் சக மாணவத் தலைவராக முன்னணி பங்காற்றினார் சுஃப்யான். மன உளைச்சல் மிகுந்த தொடக்கக் கல்லூரி பயணத்தில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் கலாசாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர், சிங்கப்பூர் சமூகத்திலும் அத்தகைய உணர்வை ஏற்படுத்துவதன் சாத்தியத்தை ஆராய்ந்து வருகிறார். பல்கலைக்கழகத்தில் உயிரறிவியல் கல்வியை மேற்கொள்வதோடு, மனநலம் தொடர்பான சேவையைக் கைவிடாமல் தொடரும் எண்ணமும் அவர் கொண்டுள்ளார். 

கல்வியைத் தவிர்த்து இணைப்பாடம் மூலம் சேவையில் காலடி எடுத்து வைத்தவர் திவ்யேஷ் பாலகிருஷ்ணன், 18. தாம் பயின்ற ஆங்கிலோ-சீன தொடக்கக் கல்லூரியின் ஓவியக்கலை இணைப்பாட நடவடிக்கையிலும் செய்தித்துறை இணைப்பாட நடவடிக்கையிலும் தலைமைத்துவ பொறுப்புகளை ஏற்றார் திவ்யேஷ். அவற்றின்மூலம் சிறுவர்களுக்கு இலவசமாக பாடம் கற்றுத்தருவது, முதியோரிடத்தில் கலையைக் கொண்டு சேர்ப்பது, கடலோரப் பகுதிகளைத் தூய்மைப்படுத்துவது என பலதரப்பட்ட சேவை நடவடிக்கைகளைத் திட்டமிடுவதிலும் அவர் முனைப்பாக இயங்கி வந்தார். கல்வியிலேயே மூழ்கிவிடாமல், இந்நடவடிக்கைகளில் அர்த்தம் கண்டது தமக்கு ஊக்கமளித்தை வலியுறுத்தினார் திவ்யேஷ். 

அதே சமயம், அவர் அதீத பற்றுக் கொண்டுள்ள பொறியியலிலும் இயற்பியலிலும் சிறப்பாக விளங்கி வருகிறார். அறிவியல் பின்னணி கொண்ட அப்பாவுடன் சிறுவயதில் ஸ்டார்டிரெக் தொலைகாட்சி நிகழ்ச்சி பார்த்த நினைவுகள் அவரின் ஆர்வத்தை தூண்டின. அதனைக் கைவிடாமல் உழைத்த அவருக்கு, மைக்ரோன் நிறுவனத்தில் வேலை பயிற்சியும் வழங்கப்பட்டது. விருப்பப்பட்டு எடுத்த குறைகடத்திகள் சார்ந்த ‘எச்3’ இயற்பியல் பாடத்தில் அவர் உயர்தேர்ச்சியும் பெற்றுள்ளார். 

‘பழக்கங்களே வாழ்க்கை’

மன உளைச்சலிலிருந்து விடுபட மின்னிலக்க விளையாட்டுகள், சமூக ஊடகம், யூடியூப் ஆகியவற்றுக்குத் கொவிட் காலத்தில் திரும்பிய நித்திஷ் இப்பழக்கங்களால் அலைக்கழிக்கப்பட்டார். கிட்டத்தட்ட நாள்தோறும் ஆறிலிருந்து ஏழு மணி நேரத்தை அவரின் இப்பழக்கங்கள் விழுங்கிக்கொண்டன. படிப்பில் ஆர்வம் இழந்த அவரை விழிக்கச் செய்தது, தொடக்கக் கல்லூரி இரண்டாம் ஆண்டில் ஏற்பட்ட தோல்வி. 

மில்லெனியா கல்விக்கழகத்தில் அடுத்த கல்வி ஆண்டுக்கு தகுதிபெறாத நித்திஷ், 2022ல் மீண்டும் தமது இரண்டாம் ஆண்டினை முடிக்க வேண்டி வந்தது. மூன்றில் இரு பாடங்களில் அவர் தேர்ச்சியடைவில்லை. அப்போது அவருக்கு முழு ஆதரவளித்தனர் பெற்றோர். 

பகுதிநேர பாலர் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்த அவரின் அம்மா, நித்திஷைப் பார்த்துகொள்ள வேலையைக் கைவிட்டார். முழுநேரப் பொறியியலாளரான அப்பாவோ, கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களை நித்திஷுக்குக் கற்பிக்க உதவினார். தான் படிப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்கி கொடுக்க பல வசதிகளை வீட்டில் அப்பா செய்து கொடுத்ததையும் நித்திஷ் நினைவுகூர்ந்தார். 

“நான் தோல்வியடைந்த சமயத்தில் என் பெற்றோர் என்மீது கோபப்படாமல் நண்பர்கள் போல எனக்கு அறிவுறுத்தினர். இப்பழக்கங்களிலிருந்து மீண்டு வரவேண்டும், கல்வி லட்சியங்களை அடையவேண்டும் என்ற ஊக்கம் எனக்கு வந்தது. எனது வேறு திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புகளில் கூடுதல் நேரம் செலவழிக்க தொடங்கினேன்,” என்றார் 20 வயது ஜீவரத்தினம் தனசேகர் நித்திஷ் ராமன். 

2022ஆம் ஆண்டை தன்வசப்படுத்த திடமாய் இருந்தார் நித்திஷ். அவ்வாண்டு மில்லெனியா கல்விக்கழகத்தின் இசைக்குழுவின் தலைவரானார். டிரோம்போன் வாசிக்கும் அவர், அதற்கு கூடுதலாக பயிற்சி மேற்கொண்டார். டிரான்செண்டன்ஸ் எனும் பள்ளி இசைநிகழ்ச்சியிலும் பங்கு வகித்தார். அவரின் தலைமைத்துவ திறன்களின் அங்கீகாரமாய் கல்வி அமைச்சின் ‘ஈகல்ஸ்’ விருது அவருக்கு வழங்கப்பட்டது. 

தமது சாதனங்களோடு வீட்டிலேயே அடைந்துகிடக்காமல் தனது தனித்திறமைகளை வளர்த்துக்கொண்டதே அவரின் பயணத்தை செழுமையாக்கியது என்றார், கணினி அறிவியலில் நாட்டம் கொண்டுள்ள நித்திஷ். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!