மேல்நிலைத் தேர்வு முடிவுகள்

கடும் உழைப்பால் மேன்மை கண்ட மாணவர்கள்

எதிர்பாரா முறையில் மாணவர் ஆகாஷின் வாழ்வைப் புரட்டிப்போட்டது அவர் தந்தையின் திடீர் மறைவு.

‘ஸ்க்லெரோடெர்மா’ எனும் தன்னெதிர்ப்பு நோயால் நான்காண்டுகளாக பாதிக்கப்பட்ட அவர், இந்தியாவில் சிகிச்சை பலனின்றி கடந்தாண்டு செப்டம்பரில் உயிரிழந்தபோது செய்வதறியாது தவித்தார் ஆகாஷ்.

அச்சமயம் நடந்துகொண்டிருந்த ஆகாஷின் முன்னோட்ட மேல்நிலைத் தேர்வுகளில் சிலவற்றை முடிக்க முடியாமல் இந்தியாவுக்கு விரையவேண்டிய சூழல். 

“இந்தியாவுக்குச் சென்ற பிறகுதான் அப்பாவின் மறைவுபற்றி தெரிய வந்தது. தனிமையாக உணர்ந்தேன். ஒரு வாரம் மிகச் சோர்வாகவும் எதையும் செய்ய சக்தியில்லாமலும் இருந்தேன்,” என்று நினைவுகூர்ந்தார் ஜூரோங் பைனியர் தொடக்கக் கல்லூரியைச் சேர்ந்த ஆகாஷ் ஆஷிக், 19.

ஆண்டிறுதியில் அப்பா தன்னோடு பல்கலைக்கழக படிப்பு தெரிவுகளை ஆலோசிக்க இருந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார். அவரின் வழிகாட்டுதல் இல்லாதது ஆகாஷை பெரிதும் பாதித்தது. 

மேல்நிலைத் தேர்வுகள் தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்னர் வரை இந்தியாவில் தந்தையின் ஈமச்சடங்குகளில் ஈடுபட்டிருந்த ஆகாஷ், ஸூம் வழி பள்ளிப் பாடங்களைக் கவனித்தார்.

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இரண்டரை மணி நேர கால வித்தியாசத்தால் காலை 5.30 மணிக்கெல்லாம் ஆகாஷின் நாள் தொடங்கிவிடும். முடிந்த வரை அவரின் சுமையைக் குறைக்கவும் பாடங்களில் உதவவும் ஆகாஷின் ஆசிரியர்கள் முன்வந்தனர். 

சவால்களைக் கடந்து எதிர்நீச்சலிட்ட அவர், வெள்ளிக்கிழமை மேல்நிலைத் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்ட 10,899 மாணவர்களில் ஒருவர்.

அவர்களில் 10,238 மாணவர்கள், அதாவது 93.9 விழுக்காட்டினர், குறைந்தபட்சம் மூன்று ‘எச்2’ பாடங்களில் தேர்ச்சியும் பொதுத்­தாள் அல்­லது அறி­வு­சார் ஆய்­வி­யல் பாடத்­தில் தேர்ச்­சி­யும் பெற்றதாக கல்வி அமைச்சும் சிங்­கப்­பூர் தேர்வு மதிப்­பீட்டுக் கழகமும் தெரிவித்தன.

அதே தொடக்கக் கல்லூரியில் பயின்ற ஒற்றைப் பெற்றோர் குடும்பத்தைச் சேர்ந்த கவினேஷ் ஜெயசரவணன், சிரமமான குடும்பச் சூழ்நிலையிலும் கல்வியில் சிறந்து விளங்கினார்.

மேல்நிலைத் தேர்வுக்கு ஒரு வாரம் முன்னர், வசிப்பிடம் இல்லாமல் அவர் தவித்தார். நிதி நெருக்கடி காரணமாக அவர் இருந்த வீட்டை தாயார் விற்க நேரிட்டது. நண்பரின் வீட்டுக்கு தாயார் இடமாற, வேறு வழியின்றி உறவினரின் வீட்டில் தஞ்சம் புகுந்தார் கவினேஷ்.

“மனத்தளவில் தாக்குப்பிடிப்பது சிரமமாக இருந்தது. இத்தனை நாள் உழைப்பு வீணாகிவிடுமோ என்ற அச்சமும் இருந்தது. சிறந்த தேர்ச்சி பெற்று முன்னேறவேண்டும் எனும் இலட்சியத்தை நான் எப்போதும் நினைவுபடுத்திக்கொண்டேன்,” என்றார் தற்போது தேசிய சேவையில் உள்ள கவினேஷ், 18.

பதினொரு வயதில் அவரின் பெற்றோரின் மணமுறிவுக்குப் பின்னர் கவினேஷின் உலகம் தலைகீழாக மாறியது. கல்வியில் ஆர்வமும் நம்பிக்கையும் இழந்த அவரால் தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வில் சிறப்பாக தேர்ச்சியடைய இயலவில்லை.

பின்னர், சாதாரண நிலையில் பயின்ற அவர், தொடர்ந்து மேம்படும் தீவிரத்தோடு கடுமையாக உழைத்து விரைவுநிலைக்கும் அதனையடுத்து தொடக்கக் கல்லூரிக்கும் தேர்வானார். அப்போதும், சாதாரண கல்விப் பின்னணியிலிருந்து வந்த அவருக்குத் தொடக்கக் கல்லூரி பாடங்களுக்கு ஈடுகொடுப்பது சிரமமாக இருந்தது. 

கல்விப் பயணம் நெடுக இத்தகைய பிரச்சினைகளாலும் மனவுளைச்சலாலும் ஆட்கொள்ளப்பட்ட கவினேஷுக்கு உறுதுணையாக இருந்தது ஓவியக்கலை. அக்கலையோடு, அவரை ஈர்த்த புவியியல், கணிதப் பாடங்களை ஒன்றிணைக்கும் கட்டடக்கலை அல்லது நகர்ப்புறத் திட்டமிடல் படிப்பை மேற்கொள்ள கவினேஷ் திட்டமிட்டுள்ளார். 

தனிப்பட்ட வாழ்க்கைத்தொழில் ஆலோசனைக்கு தங்களின் ஆசிரியர்களையோ, கல்வி, வாழ்க்கைத்தொழில் வழிகாட்டிகளையோ (ஈசிஜி) மாணவர்கள் நாடலாம்.

கல்வி அமைச்சின் ஈசிஜி மையம் மார்ச் 16ஆம் தேதி வரை இணைய அல்லது தொலைபேசிவழி ஆலோசனை சேவைகளை வழங்கும். 

கல்வி அமைச்சின் கோர்ஸ்ஃபைண்டர்: https://www.moe.gov.sg/coursefinder

மைஸ்கில்ஸ்ஃபியூச்சர்: https://go.gov.sg/mysfpreu

கல்வி அமைச்சின் ஈசிஜி சேவை: https://go.gov.sg/moe-ecg-centre

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!