தொழில்நுட்பம், தொழில் மேம்பாட்டுத் துறைகளுக்கு அதிக தேவை

2023ல் காலியிடங்களில் கிட்டத்தட்ட பாதி புதிய பதவிகளுக்கானவை

வளர்ச்சி கண்டு வரும் சிங்கப்பூர் பொருளியலால் புதிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட பதவிகள், 2023ஆம் ஆண்டின் அனைத்து காலியிடங்களிலும் 47.3 விழுக்காடாக அதிகரித்திருந்தது.

இது 2022ஆம் ஆண்டின் 38.7 விழுக்காட்டைவிட அதிகம். 2018ஆம் ஆண்டில் மனிதவள அமைச்சு புதிதாக உருவாக்கப்படும் பதவிகளின் எண்ணிக்கையைக் கண்காணிக்கத் தொடங்கியதிலிருந்து ஆக அதிகமாகும்.

தொழில்நுட்ப நிறுவனங்களில் மறுசீரமைப்பும் ஆட்குறைப்பும் இடம்பெற்றபோதிலும், 2023ஆம் ஆண்டில் தொழில்நுட்பத்தை இலக்காகக்கொண்ட வேலைகளுக்கான தேவை வலுவாக இருந்தது என்று மார்ச் 25 அன்று (திங்கட்கிழமை) அமைச்சு தெரிவித்தது.

பிஎம்இடி எனப்படும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள்,தொழில்நுட்பர்கள் பிரிவில், மென்பொருள், இணையம், பல்லூடக மேம்பாட்டாளர்கள் ஆகியோருக்கான தேவை அதிகமாக இருந்தது. 2022ஐ போலவே, 2023லும் பிஎம்இடி காலிப் பணியிடங்களுக்கு இவர்களின் தேவை அதிகளவில் பங்களித்தது.

கணினி ஆய்வாளர்களுக்கான காலியிடம், பிஎம்இடி காலியிடங்களில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்தது.

நடப்பிலுள்ள மற்றும் புதிய செயல்பாடுகளில் தொழில் விரிவாக்கம் காரணமாக, பெரும்பாலான புதிய பதவிகள் ஏற்படுத்தப்பட்டதாக, முழு ஆண்டுக்கான வேலைக் காலியிடம் அறிக்கையுடன் இணைப்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் அமைச்சு குறிப்பிட்டது.

“இது சிங்கப்பூர் பொருளியலின் பரிணாம வளர்ச்சியையும் மனிதவளத் தேவையில் ஏற்படும் மாற்றங்களையும் பிரதிபலிக்கிறது,” என அமைச்சு கூறியது.

ஒட்டுமொத்தமாக, ஊழியர் சந்தை இறுக்கமாக இருந்தது. வேலை வாய்ப்புகள் தொடர்ந்து வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்தன.

வேலை தேடும் ஒவ்வொரு 100 பேருக்கும் 2023 டிசம்பரில் 174 வேலைக் காலியிடங்கள் இருந்தன. இது 2023 செப்டம்பரின் 164 காலியிடங்களைவிட அதிகம்.

பிஎம்இடி பணிகளுக்கான காலியிடங்களின் விகிதம் தொடர்ந்து உயர்ந்து, 2023ல் 57.2 விழுக்காட்டை எட்டியது. இது 2022ல் 56 விழுக்காடாகவும், 2013ல் 39.2 விழுக்காடாகவும் இருந்தது.

குறிப்பாக தகவல் தொடர்பு, நிதி காப்பீட்டுச் சேவைகள், தொழில்முறைச் சேவைகள், சுகாதாரத்துறை, சமூக சேவைகள் போன்ற துறைகளில் திறமையான ஊழியர்களுக்கு இந்தப் பத்தாண்டுகளில் அதிக தேவை ஏற்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு கூறியது.

கடந்த 2023ஆம் ஆண்டில் தொழில்நுட்ப வேலைகளுக்கான தேவை அதிகரித்ததுடன், நிறுவனங்கள் தொழில் விரிவாக்கத்திலும், செயல்முறைகளின் திறன் மேம்பாட்டிலும் கவனம் செலுத்தியதால் வணிக மேம்பாடு, விற்பனை நிபுணர்களுக்கான வேலை வாய்ப்புகள் உயர்ந்தன.

சுகாதாரப் பராமரிப்புத் துறை தொடர்ந்து விரிவடைந்து வருவதால் பதிவு செய்யப்பட்ட தாதியர், உதவித் தாதியர் (என்ரோல்ட் நர்ஸ்) ஆகியோருக்கான தேவையும் வலுவாக இருந்து வருகிறது.

அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்தப் பதவிகளை நிரப்ப முதலாளிகள் கூடுதல் தொகை செலுத்தத் தயாராக இருப்பதாகவும் அமைச்சு தெரிவித்தது.

அதேவேளையில் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு நிரப்பப்படாத வேலைக் காலியிடங்களின் விகிதம் 2022ன் 27.1 விழுக்காட்டிலிருந்து 2023ல் 23.5 விழுக்காடாகக் குறைந்தது.

2013ம் ஆண்டில் 40.3 விழுக்காடாக இருந்த இந்த விகிதம், குறைந்ததற்கு பிஎம்இடி அல்லாத காலியிடங்கள் குறைந்ததே காரணம்.

வெளிநாட்டு மனிதவளம், தொழில்நுட்பப் பயன்பாடு, வேலை மறுவடிவமைப்பு, திறன் மேம்பாடு, படிப்படியான சம்பள உயர்வு முறை மூலம் ஊதியத்தை உயர்த்துவதற்கான முயற்சிகள் ஆகியவற்றின் மூலம் பிஎம்இடி அல்லாத வேலைகளுக்கான மனிதவள நெருக்கடியைத் தணிக்கும் முயற்சிகளின் பலனை இந்த மாற்றம் பிரதிபலிப்பதாக அமைச்சு குறிப்பிட்டது.

படிப்படியான சம்பள உயர்வு முறை என்பது குறைந்த சம்பளத் துறைகள், தொழில்களில் திறன்கள், உற்பத்தித்திறன் அதிகரிப்புக்கு ஏற்ற ஊதிய உயர்வைக் குறிக்கிறது.

பிஎம்இடி இடங்களை நிரப்பும்போது அதிகமானவர்கள் கல்வித் தகுதிகளுக்கு அப்பால் பார்க்கிறார்கள்.

பணியமர்த்தலில் கல்வித் தகுதிகள் முக்கியமாகக் கருதப்படாத காலியிடங்களின் விகிதம் 2023ல் 74.9 விழுக்காடாக தொடர்ந்து உயர்ந்தது. இது 2022ல் 73.6% ஆகவும், 2017ல் 67.1% ஆகவும் இருந்தது.

வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் பொருத்தமான பணி அனுபவம், திறன்கள் அல்லது நல்ல வேலை மனப்போக்கைக் கொண்டிருந்தால், பதவிக்கு தேவையானதைவிட குறைவான தகுதிகளைக் கொண்டவர்களை நியமிக்கத் தயாராக இருப்பதாக 68.3 விழுக்காட்டு முதலாளிகள் குறிப்பிட்டனர்.

அதிக நீக்குப்போக்குடன், பரவலான திறன்களைப் பெற்றவர்களை பணியமர்த்தத் தயாராக உள்ள முதலாளிகள் தங்கள் காலியிடங்களை நிரப்புவதில் வெற்றிகரமாக உள்ளனர்.

“காலியிடங்களை நிரப்புவதற்கு சிரமப்படும் முதலாளிகள் தங்கள் வேலைகளின் ஈர்ப்புத்தன்மையை மேம்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள். அதன்மூலம் பரந்துபட்ட திறனாளர்களை அவர்கள் அணுக முடியும்,” என்று மனிதவள அமைச்சு கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!