மொழிபெயர்ப்பு அவசியம்: டான் கியட் ஹாவ்

சிங்கப்பூர்ச் சமுதாயத்திற்கு மொழிபெயர்ப்பு மிக அவசியம், அது பல இனத்தவர்களை ஒன்றிணைக்கும் பாலம் என்று தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் தலைவருமான திரு டான், குழுவின் பத்தாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தொடர்பு, தகவல் அமைச்சு வளாகத்தில் புதன்கிழமை (மார்ச் 27) காலையில் இடம்பெற்ற அமர்வில் செய்தியாளர்களிடம் இவ்வாறு சொன்னார்.

“‘சமூகங்களை என்றென்றும் ஒன்றிணைக்கும் மொழிபெயர்ப்பு’ என்ற முழக்கத்துடன் ஆண்டுவிழா கொண்டாடப்படுகிறது. மக்களிடம் சொற்களை எளிதில் கொண்டுசேர்க்க மொழிபெயர்ப்பு தேவை,” என்ற அவர், அதற்குத் தொழில்நுட்பம் ஒரு சிறந்த கருவி என்பதையும் குறிப்பிட்டார்.

கொவிட்-19 தொற்றுப் பரவல் காலத்தை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட திரு டான், அப்போது புதிய மருத்துவச் சொற்கள் அதிகமாக வந்ததால் தொழில்நுட்பம் மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பெரிதும் கைகொடுத்தாகச் சுட்டினார்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் மொழிபெயர்ப்பாளர்களின் பணிகள் கைவிட்டுப் போகாது என்று உறுதியளித்த அமைச்சர், இளம் தலைமுறையினரை அத்துறைக்கு வரவேற்க தேசிய மொழிபெயர்ப்புக் குழு அதிக முயற்சிகளை எடுத்து வருவதாகவும் கூறினார்.

மொழிபெயர்ப்பு ஒருவரின் மரபுடனும் கலாசாரத்துடனும் பின்னிப் பிணைந்திருப்பதால், வரும் ஆண்டுகளில் இத்துறைக்கு அதிகமானோரை ஈர்க்க முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் திரு டான் சொன்னார்.

மாணவர்களுக்கு கூடுதலாக உபகாரச் சம்பளம் வழங்குவது, கல்வி அமைச்சுடன் இணைந்து மொழிபெயர்ப்பு மீதான ஆர்வத்தை பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களிடம் விதைப்பது போன்ற அம்சங்களை அமைச்சர் குறிப்பிட்டார்.

பத்தாண்டுகளில் தேசிய மொழிபெயர்ப்புக் குழு கண்ட வளர்ச்சியைப் பற்றி விளக்கிய அவர், இனி வரும் ஆண்டுகளில் செயல்படுத்தப் போகும் திட்டங்களையும் பகிர்ந்துகொண்டார்.

மொழிபெயர்ப்பில் குடிமக்கள் திட்டப்பணியின்கீழ் அதிகமான குடிமக்களை ஈர்ப்பதும் அவற்றில் ஒன்று. இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் மாநாட்டில் மேல் விவரங்கள் பகிரப்படும்.

அமர்வில் அமைச்சருடன் தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் தமிழ், சீன மற்றும் மலாய் வளக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அவர்களின் பங்களிப்பைப் பாராட்டிய அமைச்சர், சிங்கப்பூரின் மதிப்புமிகு மொழிபெயர்ப்பாளர் ஆ.பழனியப்பனையும் குறிப்பிட்டார்.

மொழிபெயர்ப்பு ஒருவரின் பணியில் முக்கியப் பங்காற்றுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், சிங்கப்பூரில் மொழிபெயர்ப்புக்கான தேவை இருக்கிறது என்றும் அதற்கு வலுவான அடித்தளத்தை அமைக்க பணியாளர்கள் தேவை என்றும் வலியுறுத்தினார்.

தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் தமிழ் வளக் குழுவில் மூவாண்டுகளாக உறுப்பினராக இருக்கும் திருமதி மரியா பவானி தாஸ், 46, தமது பங்களிப்புகளைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.

திருமதி மரியா பவானி தாஸ் (இடமிருந்து இரண்டாவது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“மக்களிடம் மொழிபெயர்ப்பைக் கொண்டு சேர்க்கும்போது தமிழ்மொழியை நாம் சரியாக கொண்டுபோய்ச் சேர்க்கிறோமா என்பதைக் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில் எங்கள் முக்கியப் பணி, இளைய மொழிபெயர்பாளர்களை உருவாக்குவதுதான்.

“பயிற்சிகள், வாய்ப்புகள், வளங்கள் ஆகியவற்றின் மூலம் நாங்கள் இளையர்களை ஈர்க்கிறோம். மாணவர்களுக்கான பயிலரங்குகளும் பாடத்திட்டம் வழியாக எவ்வாறு மாணவர்களிடம் மொழிபெயர்ப்பைக் கொண்டுசேர்க்கலாம் என்பதற்காக ஆசிரியர்களுக்கான பயிலரங்குகளும் உள்ளன.

“அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்து, மொழிபெயர்ப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய ஆதரவு அளிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு மற்றொரு தூண்டுகோலாக இருப்பது, தொடர்பு, தகவல் அமைச்சு வழங்கும் உபகாரச்சம்பளங்களும் வேலைப் பயிற்சித் திட்டங்களும். எந்தப் பணிக்கும் மொழிபெயர்ப்பு மிக முக்கியம்,” என்று திருமதி மரியா விளக்கினார்.

வெளிநாட்டு ஊழியர்கள் நிலையத்தின் மூத்த வல்லுநர் கனர்தீபன் மதியழகு, 29, மொழிபெயர்ப்பில் குடிமக்கள் திட்டப்பணியில் இருக்கும் தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

“கொவிட்-19 பரவல் காலத்தில் வெளிநாட்டு ஊழியர்களின் தங்குவிடுதியில் பணியாற்றியபோது பொதுச் சுகாதார எச்சரிக்கைகளை தமிழில் மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. நாங்கள் அதிகமாக கூகல் மொழிபெயர்ப்புக் கருவியைத்தான் பயன்படுத்தினோம். ஆனால், அவை சிங்கப்பூர்ச் சூழலுக்குப் பொருந்தவில்லை.

“அந்நேரத்தில் எஸ்ஜி கூட்டு மொழிபெயர்ப்பு இணையவாசல் இருந்தது. அந்த இணையவாசலுக்கு பங்களிக்க ஆர்வம் வந்தது. மொழிக்குப் பங்களிக்கிறேன் என்பதைவிட, தமிழ் தெரிந்தவர்களுக்கு நான் உருவாக்கும் சொற்களும் தகவல்களும் சென்றடைய வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது,” என்றார் கனர்தீபன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!