சிங்கப்பூரின் ஆய்வுக்குரல் ஓய்ந்தது

சிங்கப்பூரின் தலைசிறந்த ஆய்வாளர்களில் ஒருவரும் தமிழ் ஊடகவியலாளருமான திரு ந.பாலபாஸ்கரன் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 19) காலை தமது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 82.

எவரையும் வசீகரிக்கும் குரல் வளத்தினாலும் எல்லாத் தரப்பினரையும் ஈர்க்கும் எளிமையான எழுத்தாலும் வானொலி, தொலைக்காட்சித்துறையில் கோலோச்சியவர். சீரிய ஆய்வுகளாலும் சீண்டும் கூர்மையான விமர்சனங்களாலும்  தமிழ் ஆய்வு, இலக்கியத்துறையில் தடம் பதித்தவர். முனைவர் அ.வீரமணி குறிப்பிடுவதைப் போல், “சிங்கப்பூருக்கு வந்தோம், வேலை செய்து பொருளீட்டினோம் என்றில்லாமல் சிங்கப்பூர் தமிழ் மொழி, இலக்கியம், ஆய்வுத் துறையில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்.”

பாண்டிச்சேரியில் 1941ஆம் ஆண்டு பிறந்த திரு பாலபாஸ்கரன் 10 வயதில் மலேசியாவுக்கு குடிபெயர்ந்தார்.  அவரது தந்தை கெடா மாநிலத்தில் துணி வணிகம் செய்ததால் குடும்பம் அங்கு இடம்பெயர்ந்தது. 

மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறையில் இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். 1963ல் ரேடியோ மலாயாவில்  வேலையில் சேர்ந்த அவர், முதுநிலைப் படிப்பின்போது பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பணியை மேற்கொண்டார். வானொலிப் பணி பகுதிநேரமானது. அவருடன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவரும் நீண்டகால நண்பருமான முனைவர் சுப.திண்ணப்பன், “புதையுண்ட செய்திகள், கருத்துகளைத் தேடித் தரும் சிறந்த ஆய்வாளர்,” எனப் போற்றினார்.  

1982ல் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த அவர், சிங்கப்பூர் தொலைக்காட்சி தமிழ்ச் செய்திப் பிரிவில் சேர்ந்து, 2000வது ஆண்டு ஓய்வுபெறும் வரையில் அங்கு மூத்த செய்தியாசிரியராகப் பணிபுரிந்தார்.

பாலபாஸ்கரனுடன் ஏறக்குறைய 20 ஆண்டுகள் பணிபுரிந்தவரும்  தமிழ்ச் செய்திப் பிரிவின் முன்னாள் துணைத்தலைவரும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவருமான திரு நா.ஆண்டியப்பன், “வானொலி நாடகம், செய்தி வாசிப்பு, நிகழ்ச்சித் தயாரிப்பு என அனைத்திலும் தன்னிகரற்றவர். தன் குரல் வளத்தால் மலேசியா, சிங்கப்பூரில் ஏராளமான ரசிகர்களைப்  பெற்றவர்,” என்றார். மலேசிய வானொலியில் அவர் பணியாற்றிய காலத்திலிருந்தே அவரை அறிந்தவரான ஆண்டியப்பன், கடைசி காலத்தில் அவர் குரலை எழுந்தது பெரும் இழப்பு என வருந்தினார்.

“பரந்த அறிவாற்றலும் எந்தச் செய்தியையும் எளிமையாக எழுதும் தேர்ந்த எழுத்தாற்றலும் கொண்ட பாலபாஸ்கரனிடம் இருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன்,” எனக்கூறினார் வசந்தம் தமிழ்ச் செய்திப் பிரிவின் முன்னாள் தலைவர் திரு மு.கார்மேகம்.

ஓய்வுபெற்ற பின்னர் மெகாஸ்டார் புரொடக்‌ஷனில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் பாலபாஸ்கரன் மேற்கொண்ட எழுத்துப் பணிகளை நினைவுகூர்ந்த மெகாஸ்டார் புரொடக்‌ஷன் நிறுவனரான திரு வி.கலைச்செல்வன், அவரை ‘கடுமையான திறமைசாலி’ என வர்ணித்தார். “எளிமையான அதேநேரத்தில் ஆழமான எழுத்து அவருடையது. அவர் வேலை செய்வதே அழகு. மூன்றாண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பான ‘30 நிமிடங்கள்’ நடப்பு விவகார நிகழ்ச்சி அவரது முத்திரைப் படைப்பு,” எனக் குறிப்பிட்டார். 

‘தமிழவேள் கோ.சாரங்கபாணியும் தமிழ் முரசும் - இன்றைய பார்வை’ என்ற ஆய்வு நூலுக்காக சிங்கப்பூர் இலக்கியப் பரிசை (2018) வென்ற திரு பாலபாஸ்கரன், ‘மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள்’ (1995), ‘சிங்கப்பூர் - மலேசிய தமிழ் இலக்கியத் தடம் - சில திருப்பம்’ Malayan Tamil short stories 1930-1980 (2006) உள்ளிட்ட ஆய்வுநூல்களையும் எழுதியுள்ளார். கணையாழி விருது, கரிகாற்சோழன் விருது கள் பெற்றவர்.

“இலக்கியத்தில் தான் நம்பும் உண்மையைத் எதற்கும் எவருக்கும் அஞ்சாமல் துணிவுடன் எழுதக்கூடிய நெஞ்சுரம் மிக்கவர் பாலபாஸ்கரன்,” என்று குறிப்பிட்ட, சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர் இராம.கண்ணபிரான், அவர் 50 சிறுகதைகள் எழுதியுள்ளதையும் சுட்டினார்.

அவரது மறைவு சிங்கப்பூரின் இலக்கிய ஆய்வுத்துறைக்கு பேரிழப்பு என்று சிராங்கூன் டைம்ஸ் பத்திரிகை ஆசிரியர் திரு ஷாநவாஸ், செம்மொழி ஆசிரியர் எம்.இலியாஸ் உள்ளிட்ட  ஊடகத்துறையினர், இலக்கியவாதிகள் பலரும் வருத்தம் தெரிவித்தனர்.

பாலபாஸ்கரன் சிங்கப்பூர் இலக்கிய ஆய்வில், தமிழ் ஊடகவியல் ஆய்வில் மிகப் பெரிய பங்காற்றினார். அவரது கூர்ந்த அறிவும் நேரிய பார்வையும் புதிய கதவுகளைத் திறந்தன. அவர் பதிப்பிக்காமல் விட்டுச் சென்ற பதிவுகள் மேலும் பல கதவுகளைத் திறக்கும். அவை பதிப்பிக்கப் படவேண்டும் என்று குறிப்பிட்டார் சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் திரு அருண்மகிழ்நன்.

திரு பாலபாஸ்கரனின் மனைவி திருமதி கிரிஜா சென்ற 2020ல் காலமானார். மகள், இரு மகன்கள், பேரப்பிள்ளை ஆகியோரை விட்டுச்சென்றுள்ளார் அவர்.

அன்னாரின் நல்லுடல் இறுதி அஞ்சலிக்காக 91, தெம்பனிஸ் லிங்கில் உள்ள சிங்கப்பூர் ஃபியுனரல் பார்லரில் நாளை காலை முதல் நாளை மறுநாள் மாலை வரையில் வைக்கப்பட்டிருக்கும். மாலை 5.30க்கு மண்டாய் தகனச் சாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு எரியூட்டப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!