நாணயங்களின் நண்பன்!

வரலாறு போற்றும் பழைமையான இடங்களையும் தொன்மையான கல்வெட்டுகளையும் பார்த்து வளர்ந்த 38 வயது திரு ரஞ்சித் தனராஜ், கடந்த 28 ஆண்டுகளாக பழங்கால நாணயங் களைச் சேகரித்து வருகிறார். 

தமிழ் வரலாற்றின் மீதான ஆர்வம் இவரது குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. பத்து வயதில் இவருக்கு இந்த ஆர்வம் தொற்றியது. பள்ளிப்பருவம் முதலே வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குச் சென்று நேரத்தைச் செலவிடும் திரு ரஞ்சித், இன்றுவரை அதேபோன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாணயங்களுடன் அஞ்சல்தலைகளையும் சேகரித்துவருகிறார். 

தகவல் தொழில்நுட்பத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள திரு ரஞ்சித், வரலாறுமீதான ஆர்வத்தால் அத்துறையில் முதுகலைப் பட்டமும் தொல்லியல், கல்வெட்டுத் துறையில் டிப்ளோமா பட்டயமும் பெற்றுள்ளார்.

தகவல் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணிபுரியும் இவர், சிங்கப்பூரின் செங்காங் வட்டாரத்தில் 15 ஆண்டுகளாக வசித்துவருகிறார். இங்கும் பழைமையான நாணயங்களைச் சேகரிப்பதை இவர் தொடர்கிறார். 

சேர சோழ பாண்டியர் கால நாணயங்கள்

தம்மிடமுள்ள ஆகப் பழைமையான நாணயம் சங்ககால பாண்டியர் காலத்து வெள்ளி முத்திரைக் காசு என்றார் திரு ரஞ்சித். அது கி.மு. 300 - 400 காலத்தில் வெளியிடப்பட்டிருக்கலாம் என்று இவர் நம்புகிறார்.  

மேலும், கி.மு. 200 - 300 காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாண்டியன் பெருவழுதி ஆட்சிகாலக் காசும் இவரிடம் உள்ளது.

உத்தம சோழர், இராஜராஜ சோழர், இராஜேந்திர சோழர், விக்கிரம சோழர் போன்ற மன்னர்களின் நாணயங்களும் மதுரை சுல்தான் ஜலாலுதீன் அசன் ஷா காலத்தின் இரண்டு அரிய நாணயங்களும் நாயக்க மன்னர்களின் நாணயங்களும் தம்மிடம் உள்ளன என்றும் இவர் குறிப்பிட்டார். 

“ஒவ்வொரு காலகட்டத்திலும் எத்தனைவிதமான நாணயங்கள் இருந்தன என்பதற்கான திட்டவட்டமான குறிப்புகள் இல்லை. அதனால், ஒவ்வொரு நாணயமும் நீண்டகால ஆராய்ச்சிக்கு வழிவகுக்கிறது; பல புதிய தகவல்களைக் கற்றுத் தருகிறது,” என்றார் திரு ரஞ்சித். 

 

நாணயக் கண்காட்சிகள்

இந்தோனீசியா, தாய்லாந்து, ஹாங்காங், மலேசியா போன்ற நாடுகளில் நடைபெற்ற அனைத்துலக நாணயக் கண்காட்சிகளில் பங்குபெற்றுள்ள திரு ரஞ்சித், அங்கும் சில நாணயங்களை வாங்கியும் உள்ளார். 

“பழைமையான பொருள்கள் சேகரிக்கும் மற்றவர்களுடன் பழக இத்தளங்கள் வாய்ப்பளிக்கின்றன. மற்றவர்களிடம் உள்ள பொருள்கள் பிடித்திருந்தால் பணம் அல்லது வேறு வரலாற்று ஆவணங்களைப் பரிமாறிக்கொள்வது வழக்கம்,” என்றார் இவர். 

ஒருமுறை எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஓர் ஏலத்தில் 1,300 ஆண்டுப் பழைமைவாய்ந்த ஒரு தமிழ் வரலாற்று நாணயம் கிட்டியதாக இவர் குறிப்பிட்டார். 

சேகரித்த நாணயங்களை வருங்காலத்தில் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்க அல்லது பழைமையான பொருள்களைச் சேகரிப்பவர்களிடம் விற்க இவர் திட்டமிட்டுள்ளார். 

 

மதுரை வரலாறு - ஆய்வும் நூலும்

தொன்மையான மதுரை நகரில் பிறந்த திரு ரஞ்சித், காலனித்துவ ஆட்சியின்கீழ் இந்தியாவில் வெளியிடப்பட்ட நாணயங்களைச் சேகரிக்கத் தொடங்கினார். தற்போது மதுரை வரலாற்றைச் சார்ந்த நாணயங்களில் அதிக கவனம் செலுத்தி வருவதாக இவர் குறிப்பிட்டார். 

கடந்த ஐந்து ஆண்டுகளாக மதுரை வரலாறு குறித்து ஆராய்ச்சி செய்திருக்கும் இவர், மதுரை வரலாறு, நாணயவியல் குறித்த ஆங்கில நூலை எழுதிவருகிறார். அதனை இவ்வாண்டு வெளியிடத் திட்டமிட்டுள்ள இவர், தமிழிலும் அத்தகைய நூலை வெளியிடும் திட்டமிருப்பதாகச் சொன்னார். 

uponmani@sph.com.sg

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!