கொவிட்-19: முன்னெச்சரிக்கையுடன் நகரும் வாழ்க்கை

இந்திய ஊழியர்கள் ஒன்றுகூடும் பிரபல இடங்களில் ஒன்றான சந்தர் ரோடு ‘தமிழ்நாடு ஸ்பெ‌‌ஷல் - குடை கேன்டீன்’ உணவுக் கடையில் இந்திய ஊழியர்கள் வழக்கம்போல் மாலை வேளையில் அங்கு திரண்டிருந்தனர்.

கொவிட்-19 கிருமித்தொற்று பரவி வந்தாலும் இந்திய ஊழியர்களில் பெரும்பாலானோர் இயல்பு வாழ்க்கையைத் தொடர்வதாகத் தெரிவித்தனர்.

பணியிடங்களிலும் ஊழியர் தங்குவிடுதிகளிலும் அன்றாடம் தங்களது உடல் வெப்பநிலை கண்காணிக்கப்படுவதாக அவர்கள் கூறினர்.

“வேலையிடத்தில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அப்படியே கொரோனா கிருமி என்னைத் தொற்றினாலும் அதிலிருந்து குணமாகிவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனெனில் சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பு அதனை திறம்பட சமாளித்துவிடும்,” என்றார் பத்தாண்டுகளாக இங்கு கட்டுமானத் துறையில் பணிபுரிந்து வரும் திரு குமரகுரு கிருஷ்ணன், 33.

ஜூரோங் தீவில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியரான 34 வயது மணிகண்டன் வீரப்பன், நண்பர்களைச் சந்திக்கவும் மளிகைப் பொருட்களை வாங்கவும் மாதம் ஒருமுறையேனும் லிட்டில் இந்தியாவிற்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

கிருமித்தொற்றைக் கண்டு அச்சம்கொள்ளத் தேவையில்லை எனக் கூறும் அவர், கட்டுப்பாட்டு, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதால் கிருமித்தொற்றைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று திடமாக நம்புகிறார்.

“இதுவரையிலும் இந்திய ஊழியர் எவரையும் கொரோனா கிருமி தொற்றவில்லை. ஆதலால், வழக்கம்போல் வார இறுதிகளில் லிட்டில் இந்தியாவுக்கு வந்துவிடுகிறேன்,” என்றார் பொது ஊழியரான திரு சேகர் விக்னே‌ஷ், 33.

தம் உடல்நலத்தைப் பேணிக் காக்க அவர், வாரம் இருமுறையாவது தமது தங்குவிடுதியில் நிலவேம்புப் பொடியைக்கொண்டு கசாயம் செய்து அருந்தி வருகிறாராம்.

சிதம்பரத்தில் இருந்து வந்து இங்கு பணியாற்றும் ஊழியரான 32 வயது மாசிலாமணி சங்கர், கிருமித்தொற்றுச் சூழல் குறித்து அக்கறை கொண்டுள்ள தம் குடும்பத்தினர், தம்மை எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியதாகவும் பதிலுக்கு அவர்களிடம் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகத் தாம் கூறியதாகவும் சொன்னார்.

“போதுமான பாதுகாப்புடன்தான் பணியாற்றி வருகிறோம். எங்களது வேலையிடத்தில் நாள்தோறும் மூன்று முறை உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. அத்துடன், முகக்கவசம் அணிந்துகொண்டு தான் வேலை செய்கிறோம்,” என்றார் கட்டுமானத் தளமொன்றில் பாதுகாப்பு மேலாளராகப் பணியாற்றும் திரு சங்கர்.

தீவின் வெவ்வேறு பகுதிகளில் இவர்கள் வேலைசெய்து வந்தாலும் ஒன்றுகூடல் என்று வரும்போது லிட்டில் இந்தியாவை இவர்கள் தவிர்ப்பதாக இல்லை.

இந்திய ஊழியர்களைப் பொறுத்தவரை, இயல்பு வாழ்க்கை எப்போதும்போல் தொடர்கிறது.


இருவித மனநிலை, என்ன முடிவெடுக்கலாம் என யோசனை

கடந்த மாதம் லிட்டில் இந்தியாவில் தங்கியிருந்த சில பங்ளாதே‌ஷ் ஊழியர்களை கொரோனா கிருமி தொற்றியது பரவலாகப் பேசப்பட்டது. அதனால் வெளிநாட்டு ஊழியர்களின் நடமாட்டம் குறைந்து விடுமோ என லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் ஐயம் கொண்டனர்.
தமிழ் முரசு செய்திக்குழு கடந்த வாரயிறுதி நாட்களில் பங்ளாதே‌ஷ் ஊழியர்கள் அதிகம் கூடும் லெம்பு, டெஸ்கர், ரோவெல் சாலைகளுக்குச் சென்று பார்த்தபொழுது, அங்கு ஆள் நடமாட்டம் ஓரளவு இருந்ததைக் காண முடிந்தது.
ஆனால், கடைக்காரர்களைப் பொறுத்தமட்டில் அது வழக்கமான கூட்டம் இல்லை.


“சீனப் புத்தாண்டிற்குப் பிறகு தாய்நாடு திரும்ப நிறைய பங்ளாதே‌ஷ் ஊழியர்கள் எங்களிடமிருந்து விமானப் பயணச்சீட்டுகளை வாங்கினர். ஆனால் மறுவாரமே குறைந்தது 40 விழுக்காட்டினர் அந்தப் பயணச் சீட்டுகளை ரத்து செய்துவிட்டனர்,” என்று கூறினார் லெம்பு சாலையில் டென்மோய் சுற்றுலா முகவை நிறுவனத்தை நடத்தும் திரு சுமோன், 46.
லெம்பு, டெஸ்கர், ரோவெல் சாலைகளில் அமைந்துள்ள உணவகங்களும் கடந்த மாத தொடக்கத்திலிருந்து சிக்கலான காலகட்டத்தை எதிர்கொண்டு வருகின்றன.
“கிருமி தொற்றும் அபாயமிருப்பதால் சில கட்டுமான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வெளியே செல்ல அனுமதிப்பதில்லை என்று கேள்விப்பட்டோம். பங்ளாதே‌ஷ் ஊழியர்கள், வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் ஆகியோரின் வருகை குறைந்துவிட்டதால் எங்களது வியாபாரமும் 50% சரிந்துவிட்டது,” என்றார் ரோவெல் சாலையில் அமைந்துள்ள கானா பாஸ்மதி உணவகத்தின் மேலாளர் திரு கமால், 42.
பங்ளாதே‌ஷ் ஊழியர்கள் பலரும் கூடும் லெம்பு சாலை திறந்த வெளியில் சிலரிடம் பேசினோம்.
கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக இங்கு வேலை செய்து வரும் 25 வயதான சம்சூர், கிருமித்தொற்று குறித்து சிலரிடையே அச்சம் நிலவுவது உண்மைதான் என்றாலும் தம்முடைய இயல்பு வாழ்க்கையில் அது பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் அதற்காக அஞ்சி லிட்டில் இந்தியாவிற்கு வந்து, சக நண்பர்களைச் சந்திப்பதை நிறுத்தப்போவதில்லை என்றும் சொன்னார்.
அதேவேளையில், முகக்கவசம் அணிந்திருந்த கட்டுமான ஊழியர் ஒருவர், தமது எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக உள்ளதென்றார்.
“என் நண்பர்கள் சிலர் கிருமித்தொற்றுக்கு அஞ்சி தாயகம் திரும்பிவிட்டனர். எனக்கும் அது தொற்றிவிடுமோ என சிறிது அச்சமாகத்தான் இருக்கிறது. ஆகையால், தொடர்ந்து இங்கு வேலை செய்வதா அல்லது தாயகம் திரும்பிவிடலாமா என்று இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்,” என்றார் 13 ஆண்டுகளாக இங்கு கட்டுமான ஊழியராகப் பணியாற்றி வரும் திரு ரூப் குமார், 36.
இவரின் இருப்பிடம் லிட்டில் இந்தியாவில்தான் உள்ளது.
தமது உடல்நலத்தைக் கருதி, வெளியே செல்லும்போது அடிக்கடி முகக்கவசத்தை அணிந்து செல்வதாகவும் கைகளை அடிக்கடி சவர்க்காரம் கொண்டு கழுவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


நிலவேம்புக் குடிநீர், நண்டு ரசம்: உணவகங்களின் புதுவித உத்திகள்

கொரோனா கிருமி சிங்கப்பூரையும் எட்டிப் பார்த்ததையடுத்து, லிட்டில் இந்தியா கடைக்காரர்களும் சற்று மந்தமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். அடிக்கடி வரும் வாடிக்கையாளர்களைக் காண முடிவதில்லை என மளிகைக் கடைக்காரர்கள் அங்கலாய்க்கின்றனர். வார நாட்களில் தேக்கா சந்தை உணவங்காடி நிலையத்தின் பரபரப்பு மங்கிவிட்டது.
ஆனாலும், நோய் எதிர்ப்பாற்றலைக் கூட்டும் என்ற நம்பிக்கையில் மூலிகைப் பொடிகளின், தாளிப்புப் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளதாகக் கடைக்காரர்கள் கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக நிலவேம்புப் பொடியின் விற்பனை அமோகமாக இருக்கிறதாம்.
பஃப்ளோ சாலை, ‘ஸ்ரீ லெவண்டர் மல்டி மார்ட்’ கடைக்கு வெளியே 40க்கும் மேற்பட்ட பொடி வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. நிலவேம்பு, மஞ்சள் பொடிகளை அதிகமானோர் வாங்கிச் செல்வதாகக் கூறுகிறார் சிராங்கூன் சாலை, சதீ‌ஷ் டிரேடிங் அண்ட் என்டர்பிரைஸ் மளிகைக் கடையின் உரிமையாளர் திரு மாரிமுத்து துரைசாமி, 62.
ஆள்நடமாட்டம் குறைந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில் வாடிக்கையாளர்களைக் கவர லிட்டில் இந்தியாவில் உள்ள சில உணவகங்கள் நூதன முயற்சிகளில் இறங்கியுள்ளன.
நிலவேம்புக் குடிநீரை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது 76, சிராங்கூன் சாலை என்ற முகவரியில் இயங்கும் கோமள விலாஸ் சைவ உணவகம். “வாடிக்கையாளர்கள் தங்களது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்துக்கொள்ளும் எண்ணத்துடன் இதைத் தொடங்கினோம். சிறிய குவளையில் வாடிக்கையாளர்கள் தாங்களாகவே நிலவேம்புக் குடிநீரை நிரப்பிக்கொள்ளலாம்,” என்றார் அவ்வுணவக இயக்குநர் திரு ராஜகுமார் குணசேகரன்.
கடந்த சனிக்கிழமை சையது ஆல்வி சாலையில் அமைந்திருந்த ஆனந்த பவன் சைவ உணவகத்திற்குச் சென்றிருந்தபோது, நிலவேம்புக் குடிநீர் அங்கு ஒரு வெள்ளிக்கு விற்கப்பட்டதைக் காண முடிந்தது.
சகுந்தலாஸ் உணவகம் கடந்த சில வாரங்களாக தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக நண்டு ரசம் வழங்கி வருகிறது .


நிலவேம்பு பலன் தருமா? மருத்துவர்கள் கருத்து

நிலவேம்புக் குடிநீர் சூரணத்தை குடிநீராக்கிப் பருகுவதினாலேயே சிறந்த பலன்களைப் பெற முடியும் - சித்த மருத்துவர்

பஞ்ச நிம்பங்களில் ஒன்றான நிலவேம்பு என்ற மூலிகையில் சுரம் குறைக்கும் வேதிப்பொருள்கள் உள்ளன. அந்த வேதிப்பொருட்கள் சுரத்தையும் ‘வைரஸ்’ கிருமியினால் ஏற்படும் நோயின் தீவிரத்தையும் குறைப்பதோடு நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கூட்டும் தன்மையும் கொண்டிருப்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. முதலில் நிலவேம்புப் பொடியும் நிலவேம்புக் குடிநீரும் ஒன்றல்ல என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

நிலவேம்புக் குடிநீரில் நிலவேம்பு, வெட்டிவேர், சுக்கு, மிளகு, பற்படாகம், விலாமிச்சை வேர், சந்தனம், பேய்ப்புடல், கோரைக்கிழங்கு என ஒன்பது மூலிகைகள் கலந்துள்ளன. டெங்கி, பறவைக் காய்ச்சல், சிக்குன்குனியா போன்ற பலவகைப்பட்ட சுரங்கள், சுவாச நோய்கள், கைகால் வலி, வீக்கம் உட்பட பல நோய்களுக்கும் தற்போதைய கொரோனா கிருமித் தொற்றுக்கும் சித்த மருத்துவர்களால் நிலவேம்புக் குடிநீர் பரிந்துரைக்கப் படுகிறது. நிலவேம்புப் பொடியினை மட்டுமே தனித்துக் குடிநீராக்கிப் பருகுவதை விடுத்து, நிலவேம்புக் குடிநீர் சூரணத்தை குடிநீராக்கிப் பருகுவதினாலேயே சிறந்த பலன்களைப் பெற முடியும். கர்ப்பிணிகளும்
ஒரு வயது நிரம்பாத குழந்தைகளும் ஏற்கெனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோரும் இதைத் தவிர்க்க வேண்டும்.

- ம.குணமதி எழில்வேந்தன், சித்த மருத்துவர்


நிலவேம்புக் குடிநீர் பயனளிக்காமல் போகலாம் - ஆயுர்வேத மருத்துவர்

கொரோனா கிருமி ஒரு சளிக்காய்ச்சல் கிருமி. இது நுரையீரலைப் பாதித்து, தும்மல், இருமல், சுவாச அழற்சி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். சுற்றுப் புறத்தில் பலவிதமான நுண்ணுயிரிகள் இருந்தாலும் அவை எல்லாரையும் பாதிப்பது கிடையாது. சிறு குழந்தைகள், வயதானவர்கள், நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர்கள், ஏற்கெனவே நுரையீரல் நோய்களால் அல்லல்படுவோர் போன்றவர்களையே அதிகம் பாதிக்கிறது. கொரோனா கிருமியால் அதிகமாக நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருவதால் நிலவேம்புக் குடிநீர் பயனளிக்காமல் போகலாம். அதற்குப் பதிலாக, தொண்டையில் ஏற்படும் பிரச்சினைகளைச் சரிசெய்ய அதிமதுரம் எனும் மூலிகையை உட்கொள்ளலாம். அதனைப் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன. அதனை அன்றாடம் எடுத்துக்கொள்வதன் மூலம் சளிக்காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.
- வி.சி.அஜித் குமார், ஆயுர்வேத மருத்துவர்


♦♦♦ நிலவேம்பின் மருத்துவ குணங்கள் குறித்து போதிய தகவல்கள் இல்லாததால்
தமிழ் முரசு அணுகிய உள்ளூர் மருந்தகங்கள், மருத்துவமனைகளின் மருத்துவர்கள் அது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கவில்லை.
ஆயினும், தகுந்த மருத்துவ நிபுணர் ஒருவரின் ஆலோசனைக்குப் பிறகே எந்த மூலிகையையும் உட்கொள்ள வேண்டும் என்றும் ஏனெனில் அவற்றால் வேறு பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!