சாதனைகளைத் தகர்த்தெறிந்த அகுவேரோ

பர்மிங்ஹம்: ஆஸ்டன் வில்லா காற்பந்துக் குழுவிற்கு எதிராக ஹாட்ரிக் கோல் போட்டு, இரண்டு சாதனைகளைத் தகர்த்துள்ளார் மான்செஸ்டர் சிட்டியின் செர்ஜியோ அகுவேரோ.

நேற்று அதிகாலை நடந்த  இந்த  இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தை 6-1 என வென்றது சிட்டி.

31 வயது செர்ஜியோ அகுவேரோ மொத்தம் 255 இபிஎல் போட்டிகளில் விளையாடி, 177 கோல்கள் போட்டுள்ளார்.

இதன் மூலம் 258 போட்டிகளில் விளையாடி 175 கோல்கள் போட்ட தியரி ஹென்ரியின் சாதனையைத்  தகர்த்து, இபிஎல் போட்டிகளில் ஆக அதிக கோல் போட்ட வெளி நாட்டு வீரர் என்ற பெருமையைத் தனதாக்கினார்.

அட்லெட்டிகோ மட்ரிட் குழுவிற்காக விளையாடி வந்த அகுவேரோ தனது 23வது வயதில் மான் செஸ்டர் சிட்டியுடன் சேர்ந்தார்.

இங்கிலிஷ் விளையாட்டாளர்கள் உட்பட பார்த்தால் இபிஎல் போட்டியில் அதிக கோல் அடித்த  வீரர்கள் பட்டியலில் அகுவேரோ ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

இதுதவிர நேற்றைய ஆட்டத்தில் 12வது ஹாட்ரிக் கோல் போட்டு, ஆலன் ஷியரர் ஹாட்ரிக் சாதனையையும் தகர்த்தெறிந்துள்ளார் அகுவேரோ.

பிரிமியர் லீக் போட்டியில் 11 ஹாட்ரிக் கோல்கள் உட்பட 260 கோல்களுடன் முதல் இடத்தில் உள்ள சௌத்ஹேம்டன், பிளாக்பர்ன், நியூகாசல் குழுக்களுக்காக விளையாடியவர் ஆலன் ஷியரர்.

ஹென்ரியைப் போல் சிறந்தவர் என்று அகுவேரோவைப் பாராட்டினார் சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா.

ஆனாலும் அவர் நிர்வகித்த வீரர்களில் மிகச்சிறந்தவர் யார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு ‘மெஸ்ஸி’ என்று பதிலுரைத்தார்.

“நான் இந்த சாதனைகளை எட்டியதற்குக் காரணம் என் சக வீரர்கள் பந்தை என்னிடம் அனுப்பியதுதான். அவர்களுக்கு என் நன்றி.

“நான் இன்னும் அதிக கோல்கள்  போடுவது, அவர்கள் கையில் தான் உள்ளது,” என்றார் அகுவேரோ.

அகுவேரோவின் ஹாட்ரிக் கோல் தவிர மஹ்ரேசின் இரட்டை கோல், கேப்ரியல் ஜேசுஸ் போட்ட ஒரு கோல் என மொத்தம் ஆறு கோல்களைப் போட்டு வென்றது சிட்டி.

இந்த வெற்றியையடுத்து, லெஸ்டரைப் பின்னுக்குத் தள்ளி 47 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது மான்செஸ்டர் சிட்டி.