அமெரிக்காவில் டாக்சி ஓட்டும் முன்னாள் காற்பந்துப் பிரபலம்

துருக்கி காற்பந்து அணிக்காக 112 அனைத்துலகப் போட்டிகளில் விளையாடி 51 கோல்களை அடித்து, ஒரு காலத்தில் புகழ்பெற்ற தாக்குதல் ஆட்டக்காரராகத் திகழ்ந்த ஹாக்கான் சுக்குர், 48, இப்போது அமெரிக்காவில் ‘ஊபர்’ வாடகை டாக்சி ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.

துருக்கி அதிபர் எர்துவானின் அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த சுக்குர், அவருடனான மோதலை அடுத்து இப்போது அங்கு தேச துரோகியாகப் பார்க்கப்படுகிறார்.

ஆட்சியைக் கவிழ்க்கும் சதியில் இடம்பெற்றதாக 2016ல் இவர் மீது கைதாணை பிறப்பிக்கப்பட்டது.

“என் மனைவியின் கடை தாக்கப்பட்டது. வீதிகளில் நடந்துசென்றபோது என் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டனர். அறிக்கைவிட்டபோதெல்லாம் நான் மிரட்டப்பட்டேன். ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் என் பங்கு என்னவென்பதை எவராலும் விளக்க முடியவில்லை. சட்டவிரோதமாக நான் எதையும் செய்யவில்லை. நான் துரோகியும் இல்லை, பயங்கரவாதியும் இல்லை,” என்றார் சுக்குர்.

அமெரிக்காவில் முதலில் காப்பிக்கடை நடத்தி வந்த இவர், இப்போது டாக்சி ஓட்டியும் புத்தகம் விற்றும் வாழ்க்கையை ஓட்டுகிறார்.

#தமிழ்முரசு