சுடச் சுடச் செய்திகள்

‘கொரோனா தொற்றை குணமாக்கும் மூலிகை மைசூர்பாகு’ என்ற விளம்பரத்துடன் விற்ற இனிப்பகத்தின் உரிமம் ரத்து

கோயம்புத்தூரில் ‘கொரோனாவை கொல்லும் மூலிகை மைசூர்பாகு’, என்று கூறி கிலோ ரூ.800 விலையில் மைசூர்பாகு விற்பனை செய்த ‘ஸ்ரீராம் விலாஸ் நெல்லை லாலா கடை’க்கு சீல் வைத்துள்ளது உணவு பாதுகாப்புத் துறை. 

இதன் உரிமையாளர் பெயர் ஸ்ரீராம். பல கிளைகள் இந்த இனிப்பகத்திற்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கடையின் சார்பில், ‘ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் மைசூர்பாகு’ என துண்டு பிரசுரம் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டது.

மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மைசூர்பாகை  இலவசமாகத் தர முன்வருவதாகவும் அந்தப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக கிடைத்த தகவலையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழு, இனிப்பகத்தில் ஆய்வு நடத்தியது. 

உரிமையாளர் சரியாக பதில் கூறவில்லை என்பதால் அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டு, இனிப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. கடையில் இருந்த 120 கிலோ மைசூர்பாகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006 இன் பிரிவு 53 (தவறான விளம்பரத்திற்கான அபராதம்) மற்றும் 61 (தவறான தகவல்களுக்கான தண்டனை) போன்றவற்றின்கீழ் உரிமையாளர் ஸ்ரீராம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, திரிபலா, மஞ்சள், முருங்கை இலை, அகத்தி இலை, கற்பூரவல்லி இலை ஆகியவை உள்ளடங்கிய 19 மூலிகைகள் தாங்கள் தயாரித்த மைசூர்பாகில் உள்ளதாக ஸ்ரீராம் கூறியுள்ளார்.

 “மூலிகை மசூர்பாகு தயாரிப்பில் மூலிகைகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், சித்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு அரசிடம் முறைப்படி அனுமதி பெற்றிருக்க வேண்டும்,” என்று சித்த மருத்துவ ஆய்வாளர் கீதா கூறியுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon