சுடச் சுடச் செய்திகள்

நியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு; ஐவர் உயிரிழப்பு, பலர் காயம்

நியூசிலாந்தின் ‘ஒயிட் ஐலண்ட்’ எரிமலை வெடித்ததில் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் உட்பட குறைந்தது ஐவர் உயிரிழந்தனர்; 18 பேர் காயமடைந்தனர். இன்னும் பலரைக் காணவில்லை.
எரிமலை வெடிப்பதற்குச் சிறிது நேரத்திற்குமுன் அதன் வாய்ப் பகுதியினுள் சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்றதாகக் கூறப்பட்டது.
இதுவரை 23 பேர் மீட்கப்பட்டதாகவும் அவர்களுள் ஐவர் மாண்டுபோனதாகவும் நியூசிலாந்து போலிஸ் தெரிவித்தது.
ஆனாலும் எரிமலையில் இருந்து வெளியாகும் புகையும் சாம்பலும் மீட்புப் பணிகளுக்கு இடையூறை ஏற்படுத்துவதாக போலிஸ் குறிப்பிட்டது. மீட்புப் பணிகளில் போலிசுக்கு அந்நாட்டு ராணுவம் கைகொடுத்து வருகிறது; ராணுவ விமானமும் ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்னும் எத்தனை பேர் அங்கு சிக்கியுள்ளனர் எனத் தெளிவாகத் தெரியவில்லை என்று போலிஸ் துணை ஆணையர் ஜான் டிம்ஸ் சொன்னதாக ‘பிபிசி’ செய்தி கூறியது. அதே நேரத்தில், அங்குள்ள சுற்றுப்பயணிகளுள் வெளிநாட்டவர்களும் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
முன்னதாக, கிட்டத்தட்ட 50 சுற்றுப்பயணிகள் அங்கு இருந்ததாக போலிஸ் கூறியிருந்தது. எரிமலை புகையையும் சாம்பலையும் கக்கத் தொடங்கியபோது அவ்விடத்தில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணிகள் 24 பேர் இருந்ததாக ‘நைன் நியூஸ்’ செய்தி தெரிவித்தது.
உள்ளூர் நேரப்படி நேற்றுப் பிற்பகல் 2.11 மணிக்கு எரிமலை வெடிப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, அந்த எரிமலையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் எனக் நியூசிலாந்து குடிமைத் தற்காப்புப் படை எச்சரித்துள்ளது.
இதனிடையே, எரிமலை வெடிப்பு காரணமாக எந்த விமான சேவையும் தாமதமடையவில்லை, ரத்து செய்யப்படவில்லை என்று ‘ஏர் நியூசிலாந்து’ நிறுவனம் அறிவித்தது.
எரிமலை வெடிப்பு குறித்து கவலை தெரிவித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டன், சிக்கியுள்ளவர்களை மீட்க தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் போலிஸ் மேற்கொண்டு வருவதாக அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon