கனத்த மழையையும் பொருட்படுத்தாமல் இன்று (15 டிசம்பர்) அதிகாலை 5 மணியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கியோங் செய்க் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு விழாவைக் காணத் திரளாகக் கூடியிருந்தனர்.
செட்டியார்கள் கோயில் குழுமம் ஏற்பாடு செய்த இவ்விழாவை கிட்டத்தட்ட 15,000 பக்தர்கள் கண்டுகளிக்க, கிட்டத்தட்ட 1,000 பேர் தொண்டூழியத்தில் ஈடுபட்டனர்.
இரவு முழுவதும் பெய்த மழை காலை 9 மணி அளவில் குறைந்தது. காலை 9.50 மணிக்கு திருக்குட நீருடன் மழை நீரும் கலந்து ராஜகோபுரத்தின் குடமுழுக்கு குறிப்பிடப்பட்ட நேரத்தில் நடைபெற்றது.
கல்வி அமைச்சர் ஓங் யி காங் சிறப்பு விருந்தினராகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோன் பெரேரா, முரளி பிள்ளை ஆகியோர் சிறப்பு வருகையாளர்களாகவும் கலந்துகொண்டனர்.
“இந்த ஆலயத்திற்கு ஒரு சிறப்பு உள்ளது. அன்றாடம் இந்தக் கோயிலுக்குப் பல பக்தர்கள் வருகிறார்கள். இந்த ஆலயம் இன, சமய நல்லிணக்கத்திற்கு ஓர் அற்புதமான சின்னம்,” என்றார் புக்கிட் பாத்தோக் தொகுதி நாடளுமன்ற உறுப்பினரான திரு முரளி பிள்ளை.
சைனாடவுன் வட்டாரத்தில் அமைந்திருக்கும் இக்கோயில், இந்துக்களுக்கு மட்டுமில்லாமல் ஒரு பெரிய சமூகத்திற்கே சேவை யாற்றுகிறது என்றும் வசதி குறைந்தவர்களுக்கு பற்பல உதவிகளும் இக்கோயிலால் வழங்கப்பட்டு வருகிறது என்றும் மேலும் குறிப்பிட்டார் திரு முரளி.
மக்களை மழையிலிருந்து பாதுகாக்க கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு மழை அங்கிகளை வழங்கியது. தடையரண்கள், போலிஸ் அதிகாரிகள், கோயில் தொண்டூழியர்கள் ஆகியவற்றால் கூட்ட நெரிசல் நிர்வகிப்பட்டது.
ஒரே நேரத்தில் 1,000 பேர் வரை உண்ணக்கூடிய அன்னதானக் கூடம் ஊட்ரம் பார்க் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகில் உள்ள திறந்தவெளித் திடலில் அமைக்கப்பட்டது. அவர்களுக்குப் பரிமாற கிட்டத்தட்ட 500 தொண்டூழியர்கள் பணியாற்றினர் என்று குறிப்பிட்டார் செட்டியார்கள் கோயில் குழுமத்தின் தலைவர் திரு ராம. முத்தையா.
“அரசாங்கத்தால் வகுக்கப்பட்ட பாதுகாப்பு வட்டார பகுதியில் இக்கோயில் அமைந்திருப்பதால் புதிதாக எதையும் சேர்க்க முடியாது. இருப்பதையே மேம்படுத்த முடியும்,”
“புதிய கழிவறைகளைச் சேர்த்துள்ளோம். பிரகாரத்தை 108 முறைகள் சுற்றி வருவதற்கு இந்தக் கோயில் பிரசித்திப்பெற்றது. இதை செய்ய ஒரு நாளுக்கு ஏறக்குறைய 5,000 பேர் வருகிறார்கள். அதற்கான வசதிகளை மேம்படுத்தியுள்ளோம்,” என்றார் திரு முத்தையா.

குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக வழிபாடுகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்றும் இந்நிகழ்ச்சிகளில் மலேசியாவையும் இந்தியாவையும் சேர்ந்தப் பிரபல கலைஞர்கள் இடம்பெறுவார்கள் என்றும் கூறினார் திரு முத்தையா.
95 ஆண்டு கால வரலாறு படைத்த இக்கோயிலைப் புதுப்பிக்க $1 மில்லியன் செலவாகியுள்ளது. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு முன் திட்டங்கள் தீட்டப்பட்டு, புதுப்பிப்பு பணிகளுக்கு ஏழு மாதங்கள் எடுத்தன.
“இங்குள்ள ஸ்ரீ விநாயகரை முதலில் பார்ப்பது சீன இனத்தை சேர்ந்த ஒரு தீவிர பக்தர். தினமும் காலையில் கோயில் கதவுகள் திறக்கப்படும்போது தவறாமல் நிற்கும் முதல் பக்தர் அவர். இதுபோல் நிறைய சீன பக்தர்கள் இருப்பதால் இவர்களுக்குத் தேவையான தகவல்களை எடுத்துகூற நம்மிடம் மொழிபெயர்ப்பாளர்களும் உள்ளனர்,” என்றார் திரு முத்தையா.
கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் இக்கோயிலில் பிரகாரத்தை 108 முறை சுற்றி வரும் பக்தரான 39 வயது திரு கலைச்செல்வன் மாணிக்கம், நேற்று மூலவருக்கு எண்ணெய் சாத்துதலையும் செய்தார்.
“கோயிலின் கோபுரம் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. முன்னதாக தெரியாத சில அம்சங்கள் இப்போது தெளிவாகத் தெரிகின்றன. புதுப்பிப்புப் பணிகள் கோயிலுக்கு மெரூகூட்டியுள்ளது,” என்றார் திரு கலைச்செல்வன்.
கடந்த 42 ஆண்டுகளாக ஒவ்வொரு வாரமும் இந்த விநாயகர் கோயிலுக்கு வரும் பக்தர் திருமதி பரமேஸ்வரி நாதன்.
“கோயில் வரிசைகள், பக்தர்களின் வழிபாடு என்ற அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக அமைந்தன. தரிசனத்தை சுமூகமாக முடித்துவிட்டேன்,” என்றார் திருமதி பரமேஸ்வரி, 60.

குடமுழுக்கு விழாவின்போது கோயில் நிர்வாகத்தினரும் தொண்டூழியர்களும் கூறும் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் பொறுமையுடன் வழிபாடுகளைச் செய்வது மேலும் சுமூகமான நிகழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் சொன்னார் திரு ப.பழனிவேல், 52.
“நமது பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதற்குக் குடமுழக்கு விழா போன்ற நிகழ்ச்சிகள் முக்கியம். இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்வதால் மேலும் சிறப்பு பெறுகிறது. பழமைவாய்ந்த இக்கோயிலின் வரலாற்றுப் பெருமைகளை நினைவூட்டவும் இது ஒரு தளமாகவும் அமைகிறது,” என்று கருத்துரைத்தார் செட்டியார்கள் கோயில் குழுமத்தின் தொண்டூழியர் திரு சுப்பு அடைக்கலவன், 24.