பட்ஜெட்: மக்களுக்கு உதவி, நிறுவனத்துக்கு வரிச்சலுகை

குடும்பங்களுக்கு அன்றாடம் ஆகும் செலவுகளை ஈடுசெய்வதற்கான உதவிகளும் நிறுவனங்களுக்கு வரித் தள்ளுபடிகளும் புதிய வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெறும் என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் அறிவித்து இருக்கிறார்.

கொரோனா கிருமிகளைத் துடைத்தொழிக்க சிங்கப்பூர் அரும்பாடுபட்டு வரும் நேரத்தில் அமைச்சரின் இந்த அறிவிப்பு நேற்று காணொளி மூலம் விடுக்கப்பட்டது. கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து ஊழியர்களும் நிறுவனங்களும் மீண்டு வருவதற்கு உதவத் தேவையான அனைத்தையும் அரசாங்கம் செய்யும் என்றார் அவர். 

கொரோனாவைச் சமாளித்து சிங்கப்பூர் மீண்டு வரும் என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை என்றும் கூறினார். 

பொருளியல் நிச்சயமில்லாத காலகட்டத்தில் வாழ்க்கைச் செலவு பற்றிய மக்களின் கவலையைப் போக்குவதற்காக வரவுசெலவுத் திட்டத்தில் ஓர் உதவித்திட்டம் இடம்பெறும் என்று துணைப் பிரதமரான திரு ஹெங் குறிப்பிட்டார். 

உள்ளூர் ஊழியர்களுக்குத் தொடர்ந்து நிறுவனங்கள் வேலை கொடுத்து உதவ சம்பள ஆதரவு திட்டங்களும் வரித் தள்ளுபடிகளும் வாடகைத் தள்ளுபடிகளும் நிறுவனங்களுக்காக வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற்று இருக்கும்.

நிறுவனங்களும் ஊழியர்களும் காலத்திற்கேற்ப மாறிக்கொள்ளவும் பயிற்சி பெறவும் மேம்பாடு காணவும் உதவும் ஆதரவு அம்சங்களும் புதிய வரவு செலவுத் திட்டத்தில் இருக்கும். 

கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ள உணவு மற்றும் பானத்துறை, சில்லறை வர்த்தகத் துறை ஆகியவற்றுக்கு அதிக உதவி கிடைக்கும். 

இவை எல்லாம் இடம்பெறும் என்பதால் இப்போதைய நெருக்கடியில் இருந்து நாம் மீண்டு வருவோம் என்பது உறுதி. இதில் யாருக்கும் அச்சம் அறவே தேவையில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார். 

திரு ஹெங், நேற்று காலாங் தீயணைப்பு நிலையத்தில் தன்னுடைய காணொளியைப் பதிவு செய்தார். 

அங்கு அவர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் முன்னிலை அதிகாரிகளையும் ‘டீம்எஸ்ஜி’ விளையாட்டு வீரர்களையும் சந்தித்தார்.

சிங்கப்பூரில் 2003ல் சார்ஸ் கிருமி பாதித்தது. அதற்குப் பிறகு நாட்டின் ஆற்றல் பல துறைகளிலும் மேம்பட்டு இருக்கிறது என்பதைத் துணைப் பிரதமரின் செய்தி சுட்டிக்காட்டியது. 

தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையம் அமைக்கப்பட்டு இருப்பதும் முன்பைவிட சிறந்த சுகாதாரப் பராமரிப்பு அடிப்படை வசதிகள் மற்றும் தொழில்நுட்பம் இருப்பதும் அந்த மேம்பாடு களில் அடங்கும்.

ஆய்வு உருவாக்கத்தில் அதிக முதலீடுகள் இடம்பெற்றதன் காரணமாக கொரோனா கிருமிகளைத் துடைத்தொழிப்பதில் சிங்கப்பூருக்கு அனுகூலமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்றும் அவர் கூறினார்,