சிங்கப்பூரில் மேலும் 262 பேருக்கு கொவிட்-19; சமூகத்தில் 9 சம்பவங்கள்

சிங்கப்பூரில் இன்று (ஜூன் 21) நண்பகல் நிலவரப்படி புதிதாக 262 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,095 ஆகியுள்ளது.

இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 9 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் மூவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்; மற்ற அறுவரும் வேலை அனுமதிச் சீட்டுடன் இருப்பவர்கள்.

மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.

இதன் தொடர்பிலான கூடுதல் விவரங்களை அமைச்சு பின்னர் வெளியிடும்.

நேற்றிரவு சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவலின்படி, ஒருவர் மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி அதிகபட்சமாக 32 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தனர். அப்போது முதல் இந்த எண்ணிக்கை குறைந்து வந்துள்ளது.

நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட, உள்ளூர் சமூகத்துடன் வசிக்கும் இருவருக்கும் அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்கம் மேற்கொள்ளும் பரிசோதனைகளில் அவர்களுக்கு முன்பு கிருமித்தொற்று இருந்திருக்கலாம் என்று கண்டறியப்பட்டது.

அவர்களில் ஒருவர் 34 வயதான பங்ளாதேஷ் நாட்டவர். கிருமித்தொற்று கண்ட நால்வருடன் தொடர்பில் இருந்தவர். அவர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

கிருமித்தொற்று கண்டறியப்பட்ட மற்றவர் 46 வயது இந்திய நாட்டவர். கிருமித்தொற்று கண்ட மற்றவர்களுடன் அவர்களுக்கு தொடர்பு இல்லை.

உள்ளூர் சமூகத்தினரிடையே கிருமித்தொற்று  ஏற்படுவது கடந்த வாரத்தில்  சராசரியாக 4ஆக குறைந்துள்ளது; அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 8ஆக இருந்தது.

அதே போல, முந்தைய சம்பவங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் சராசரி எண்ணிக்கை கடந்த வாரத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஆகியுள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 3ஆக இருந்தது.

சிங்கப்பூரில் இதுவரை 26 பேர் கொவிட்-19ஆல் உயிரிழந்தனர். கிருமித்தொற்று கண்டு, ஆனால் வேறு காரணங்களால் 10 பேர் உயிரிழந்தனர்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online