'சிறையில் கொவிட்-19 கண்டறியப்பட்ட நபர், சட்டவிரோதமாக சிங்கப்பூரில் தங்கியவர்'

சிங்கப்பூரில் நேற்று முன்தினம் கிருமித்தொற்று கண்டறியப்பட்ட 142 பேரில் ஒருவர் மட்டுமே சமூகத்தில் இருப்பவர். 

இலங்கை நாட்டவரான அந்த 21 வயது ஆடவர் தற்போது சிறையில் இருக்கிறார். 

சுற்றுப் பயண வருகை அனுமதி முறையில் ஜனவரி மாதம் 10ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்த அவர், சாங்கி சிறை வளாகத்தில் ஜூன் 6ஆம் தேதி அனுமதிக்கப்பட்டதிலிருந்து மற்ற கைதிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

சட்டவிரோதமாக நீண்ட நாட்களுக்குத் தங்கியிருந்த குற்றத்திற்காக இம்மாதம் 12ஆம் தேதி, அவருக்கு 4 வாரச் சிறைத்தண்டனையும் 3 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. 

அவர் சிறையில் அனுமதிக்கப்பட்ட அதே நாளில் சிறைக்குச் சென்ற வேறு இருவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த 21 வயது ஆடவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. அவருக்கு பிரம்படி கொடுக்கப்படும் முன்பு, கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு அவர் மருத்துவரீதியாக   உடல் தகுதியுடன் இருக்கிறாரா என அவரது உடல்நலம் சோதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சமூகத்தில் கிருமித்தொற்று ஏற்படுபவர்களின் சராசரி எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. 

வெள்ளிக்கிழமை நிலவரப்பட்டி இதுவரையில் 33,449 பேர் கிருமித்தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.
    

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online