'கொவிட்-19 தடுப்பு மருந்து சிங்கப்பூருக்கு கிடைக்க அடுத்த ஆண்டு இறுதிவரை ஆகலாம்'

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு மருந்து போதுமான அளவுக்கு, அடுத்த ஆண்டு இறுதிவாக்கில்தான் கிடைக்கும் என சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகளுக்கான இயக்குநர் கென்னத் மாக் கூறியுள்ளார்.

தடுப்பு மருந்து உருவாக்குபவர்கள், மருந்தக நிறுவனங்கள், ஆய்வுக் கழகங்கள் ஆகியவற்றுடன் கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான முயற்சிகளில் சிங்கப்பூர் முனைப்புடன் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

தடுப்பு மருந்து தயாரானதும் அது சிங்கப்பூரர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வது தொடர்பான விவாதங்கள் ஏற்கெனவே தொடங்கி விட்டதாக இன்று (ஜூலை 24) நடைபெற்ற மெய்நிகர் கலந்துரையாடலில் அவர் தெரிவித்தார்.

பல நிறுவனங்கள் தடுப்பு மருந்து தயாரிப்பில் மூன்றாவது கட்டத்தை எட்டியிருப்பதாகக் கூறினாலும், அவை பாதுகாப்பான, செயல்திறன் மிக்க தடுப்பு மருந்தை உருவாக்குவதில் தவறக்கூடும் என்றார் இணைப் பேராசிரியர் மாக்.

ஆனால், நடைமுறை நிலவரப்படி பார்த்தால் கொவிட்-19க்கான தடுப்பு மருந்து அடுத்த ஆண்டில்தான் கிடைக்க வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“அந்த மருந்துக்கு உலக அளவில் இருக்கும் தேவையைக் கணக்கில் கொண்டு பார்த்தால், போதிய அளவுக்குத் தயாரிக்கப்பட்டு சிங்கப்பூருக்கு விநியோகிக்க அடுத்த ஆண்டு இறுதிவாக்கில் ஆகும்,” என்றார் அவர்.