வெளிநாட்டு ஊழியர் தீர்வை கழிவுக்காக $320 மில்லியன் ஒதுக்குகிறது அரசாங்கம்

கட்டுமானம், கடற்துறை கப்பல் பட்டறை, பதனீடு போன்ற   கொவிட்-19ஆல் பெரிதும் பாதிக்கப்பட்ட தொழில்துறைகள், அவற்றின் ஊழியர் செலவினங்களைச் சமாளிக்க உதவி பெற உள்ளன.

வெளிநாட்டு ஊழியர் தீர்வையை அந்த நிறுவனங்கள் இன்னும் ஒரு மாதத்துக்கு செலுத்தத் தேவையில்லை என மனிதவள அமைச்சு இன்று (ஆகஸ்ட் 1) தெரிவித்தது.

இந்த ஆதரவுத் தொகுப்புக்காக $320 மில்லியன் ஒதுக்கப்படும் என மனிதவள அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

கடந்த ஜூன் 27 அன்று அறிவிக்கப்பட்ட கட்டுமான ஆதரவுத் தொகுப்பான $1.36 பில்லியனுக்கு மேல் இந்த புதிய உதவித் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துறைகளைச் சேர்ந்த 15,000 நிறுவனங்களில் பெரும்பாலானவை, கொவிட்-19 சூழல் காரணமாக பணிகளைத் தொடங்க முடியாமல், பொருளியல் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. 

அனைத்து ஊழியர் தங்கும் விடுதிகளும் முழுமையாக கொவிட்-1லிருந்து மீட்கப்பட்டு, ஊழியர்கள் படிப்படியாக பணிக்குச் செல்ல அனுமதிக்கப்படும்வரை இந்தச் சூழல் தொடரும் என அமைச்சு குறிப்பிட்டது.

முன்பு அறிவிக்கப்பட்ட வலிமைக்கான வரவுசெலவுத் திட்டத்தின்கீழ், இந்தத் துறைகளைச் சேர்ந்த அனைத்து நிறுவனங்களும் ஜூன் மாத வெளிநாட்டு ஊழியர் தீர்வையிலிருந்து முழுமையாக விலக்கு பெற்றன; ஜூலை மாதத்துக்கான தீர்வையில் 50% கழிவு பெற்றன.

இன்று அறிவிக்கப்பட்ட புதிய விரிவாக்கத்தின்படி, இந்தத் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வெளிநாட்டு ஊழியர் தீர்வையிலிருந்து முற்றிலும் விலக்கு பெறுகின்றன.

ஊழியர்கள் பணிக்குத் திரும்பி, நிலைமை மேம்படும்போது, இந்தத் தீர்வை ஆதரவு படிப்படியாகக் குறைக்கப்படும். நிறுவனங்கள் செலுத்தும் வெளிநாட்டு ஊழியர் தீர்வையில், அக்டோபர் மாதத்தில் 75%, நவம்பரில் 50%, டிசம்பரில் 25% கழிவு வழங்கப்படும்.

வலிமைக்கான வரவுசெலவுத் திட்டத்தின்கீழ், வேலை அனுமதிச் சீட்டு அல்லது எஸ் பாஸ் அட்டை வைத்திருக்கும் ஊழியர் தீர்வையில் ஜூன் மாதத்தில் $750 கழிவும் ஜூலை மாதத்தில் $375 கழிவும் வழங்கப்பட்டன.

அத்துடன், $375 கழிவு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது.

ஏற்கெனவே நடப்பில் இருக்கக்கூடிய, வேலை அனுமதிச்சீட்டு வைத்திருப்போருக்கான $90 கழிவுக்குப் பதிலாக இது ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடப்புக்கு வரும்.

ஆனால், அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை $90 கழிவை அந்த நிறுவனங்கள் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.