சுடச் சுடச் செய்திகள்

தமிழ் இலக்கிய முன்னோடிகளை கொண்டாடும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழா

இந்த ஆண்டு சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் இலக்கிய முன்னோடிகளாக மூத்த தமிழ் எழுத்தாளர்களான பி.கிரு‌ஷ்ணன், 88 மா.இளங்கண்ணன், 82, இராம.கண்ணபிரான், 76, மூவரும் சிறப்பிக்கப்படுகின்றனர்.

சிங்கப்பூரின் முன்னோடி எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் ‘இலக்கிய முன்னோடி கண்காட்சி’ ஒவ்வோர் ஆண்டிலும் எழுத்தாளர் விழாவின் முக்கிய அங்கமாக இடம்பெற்று வருகிறது.

முன்னோடித் தமிழ் எழுத்தாளர்களைப் பெருமைப்படுத்தும் ‘இலக்கிய முன்னோடி கண்காட்சி’ மெய்நிகர் கண்காட்சியாக இடம்பெறுகிறது. முதல் முறையாக மூன்று எழுத்தாளர்கள் இந்நிகழ்வில் இடம்பெறுகின்றனர்.

‘நெருக்கம்’ (Intimacy) என்ற இவ்வாண்டு விழாவின் கருப்பொருளுக்கு ஏற்ப, முன்னோடி எழுத்தாளர்களின் உருவாக்கங்களையும் வாழ்வையும் இணையம்வழி இக்கண்காட்சி ஆராய்கிறது என்று கூறினார் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ள ‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’ நிறுவனத்தின் திட்ட நிர்வாகியான திரு ஸ்ரீதர் மணி.

“தமிழ் அறியாதவர்கள் பலரும் தமிழ் முன்னோடி எழுத்தாளர்களைப் பற்றி அறியாமல் இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பிறந்த எழுத்தாளர்கள், அக்காலகட்ட உணர்வுகளைச் சித்திரிப்பார்கள். குறிப்பாக, சிங்கப்பூர் உருமாறி வந்த காலம், 1970களின் தொழிற்துறை உருவாக்கம் போன்றவற்றை இந்த மூன்று எழுத்தாளர்களும் தங்களது படைப்புகள் வழி காட்சிப்படுத்தியுள்ளனர். சிங்கப்பூர் சமூகத்தின் தனித்த அடையாளத்தை வெளிப்படுத்துவது முக்கியம்,” என்றார் ஸ்ரீதர்.

இந்த மூன்று எழுத்தாளர்களும் சிறுகதை, புதினம், கவிதை, வானொலி நாடகம் போன்ற பல வகையான எழுத்து வடிவங்களை உருவாக்கியுள்ளனர். தமிழிலும் ஆங்கிலத்திலும் நிகழும் இந்த மெய்நிகர் கண்காட்சி பார்வையாளர்களும் பங்கேற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 30 முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை நிகழும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழா இந்த ஆண்டு மெய்நிகர் விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 130க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளைக் கொண்ட இவ்விழாவின் நுழைவுச்சீட்டு விற்பனை நேற்று முன்தினம் (21 செப்டம்பர்) தொடங்கியது.

செப்டம்பர் 21 - ஆக்டோபர் 9 வரையில் முன்கூட்டியே நுழைவுச் சீட்டுகளை வாங்கினால் $12.00 சலுகை விலையில் பெறலாம். அக்டோபர் 20ஆம் தேதியிலிருந்து நுழைவுச்சீட்டு கட்டணம் $20.00.

விருது பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளரான ஸேடி ஸ்மித், அமெரிக்க கேலிச் சித்திர ஓவியர் ஆர்ட் ஸ்பிகல்மென், சீன அறிவியல் புனைவு எழுத்தாளரான லியூ ஸிசின் போன்ற அனைத்துலக எழுத்தாளர்கள் இந்த ஆண்டு விழாவில் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தின் பிரபல கவிஞரான பெருந்தேவியும் விருதுகள் பெற்ற ஈழத்துப் படைப்பாளரான சயந்தனும் இந்த ஆண்டு விழாவின் தமிழ் நிகழ்ச்சிகளைச் சிறப்பிக்கின்றனர். மேலும் உள்ளூர் எழுத்தாளர்கள் கமலாதேவி அரவிந்தன், சூரிய ரத்னா, இந்திரஜித், யூசோப் ரஜீத், அழகுநிலா, சுபா செந்தில்குமார் உள்ளிட்டோருடன் அருண் மகிழ்நனும் பங்கேற்கிறார். ராம் பிரசாத், ஈவ்லின் சோனியா ரயன், ஜெகன்நாத் ராமானுஜம், பிருந்தா மேனன் ஆகிய சித்திரக் கலைஞர்கள் பங்கேற்கும் இரு மொழி அமர்வும் உண்டு.

அதிகாரத்துவ மொழிகள் தவிர்த்து, இவ்வாண்டு ஹிந்தி மொழி கவிதை வாசிப்பு அங்கமும் இடம்பெறுகிறது.

13 முதல் 18 வயதுக்கு உட்பட்ட இளையர்களுக்கான நிகழ்ச்சி சிங்கப்பூர் புத்தக மன்றத்தின் பங்காளித்துவத்துடன் நடைபெறுகிறது. இணையத்தோடு மக்கள் எப்படி தொர்புகொள்கிறார்கள் என்பதைக் இந்த அங்கம் விவரிக்கும்.

விழாக் காலத்தில் ‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’ வளாகம் ‘நைட் ஸிபின் 182.7’ ஒலி, ஒளிப் பதிவு இணையத் தொடர்களை இரவு 8 முதல் 11 மணி வரை ஒலி/ஒளி பரப்பும். கிரேஸ் கலைச்செல்வி, எடித் பொடேஸ்டா, தி செகண்ட பிரேக்ஃப்ஸ்ட் நிறுவனம் போன்றோரின் வானொலி நாடகங்கள் இடம்பெறும்.

கடந்த ஆண்டுகளின் நேரடி விழாக்களுக்கு இணையான சமூக உணர்வை இவ்வாண்டு விழா பங்கேற்பாளர்களுக்கு வழங்க முனைவதாக கூறினார் விழா இயக்குநர் பூஜா நேன்சி.

சிங்கப்பூர் எழுத்தாளர் விழா குறித்த மேல் விவரங்களை www.singaporewritersfestival.com என்ற இணையத்தளத்தில் காணலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon