வெயிலோ மழையோ இனி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் நாட்டின் தண்ணீர் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் நான்காவது உப்புநீக்க நீர் ஆலை அதிகாரபூர்வமாக இங்கு திறக்கப்பட்டுள்ளது.
கடல் நீரையும் நீர்த்தேக்க நீரையும் சுத்திகரிக்கும் ஆற்றலைக் கொண்ட ஒரே இடமாகப் புதிய கெப்பல்-மரினா ஈஸ்ட் உப்புநீக்க நீர் ஆலை விளங்குகிறது.
சென்ற ஜூன் மாதம் முதல் செயல்பாடுகளைத் தொடங்கிய இவ்வளாகத்தை பிரதமர் லீ சியன் லூங் இன்று (பிப்ரவரி 4) திறந்து வைத்தார்.

சிங்கப்பூரின் நான்கு தேசிய தண்ணீர்க் குழாய்களில் உப்புநீக்கம் அதாவது கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும் ஒன்று என்று குறிப்பிட்டார் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் தலைமை நிர்வாகி இங் ஜூ ஹீ.
இறக்குமதியான நீர், மழைநீர், மறுபயனீடு செய்யப்பட்ட நீர் ஆகிய மற்ற மூன்று தேசிய தண்ணீர்க் குழாய்களை ஒப்பிடும்போது, கடல் என்பது எல்லையற்ற ஒரு வளம் என்றார் அவர்.
ஒரு நாளில் 30 மில்லியன் கேலன் தண்ணீரைச் சுத்திகரிக்கும் திறன் பெற்றது இப்புதிய வளாகம். சிங்கப்பூரின் ஒரு நாள் தண்ணீர் தேவையின் ஏழு விழுக்காட்டுக்கு இது சமமாகும்.

தற்போது சிங்கப்பூருக்கு மலேசியாவின் ஜோகூர் ஆற்றிலிருந்து தண்ணீர் இறக்குமதியானாலும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வானிலை மாற்றங்கள் நீர்வளங்களின் மீள்திறனைப் பாதிக்கலாம்.
இதனால், பாதிப்புக்குள்ளாகாத தன்மை பெற்ற உப்புநீக்க முறையின் பக்கம் சாய்ந்துள்ளது சிங்கப்பூர். பெருமளவில் கட்டப்பட்ட இப்புதிய நீர் ஆலை, பல ஆண்டு சோதனை, ஆராய்ச்சியின் பலனாக விளைந்துள்ளது.