சாம்ராஜ்: அனுபவமே கவிதையின் சாரம்

ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்

தேசிய கலைகள் மன்றத்தின் ஆதரவுடன் தமிழ் முரசு நடத்தும் வளரும் படைப்பாளர்களுக்கான விசை படைப்பிலக்கியத் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பயிலரங்கின் கவிதைப் பயிலரங்கு கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்றது. தற்கால முன்னணித் தமிழ்ப் படைப்பிலக்கியவாதிகளில் ஒருவரான கவிஞர் சாம்ராஜ் பயிலரங்கை நடத்தினார்.

இயற்கையை எதிர்த்து தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பதுதான் மனிதர்களுடைய இயல்பு. 

https://www.facebook.com/163335113676864/videos/726649914824107

இந்த வாழ்வு ஒரு குறுகிய காலம்.  பரந்து விரிந்த உலகில் விசாலமாக வாழ வேண்டுமாயின் பலதரப்பட்ட அனுபவம் தேவைப்படுகிறது. கதை, கவிதை, கட்டுரை என எதுவாக இருந்தாலும் அவற்றை வாசிப்பதன் மூலம் பலதரப்பட்ட அனுபவத்தைப் பெறலாம் என்பது கவிஞர் சாம்ராஜ் முன்வைக்கும் கருத்து. 

அந்த அனுபவங்களின் தோல்களிலிருந்து தாம் வாழ்க்கையைப் பார்ப்பதாகக் கூறிய கவிஞர் சாம்ராஜ், வாசிப்பின் அனுகூலங்களை எடுத்துக்கூறினார்.

இலக்கிய வாசிப்பு, அதிலும் கவிதை வாசிப்பு எவ்வாறு உலகை  புதிய கோணத்தில் பார்க்கவும்  உள்நோக்கிச் சிந்திக்கவும் உதவுகிறது என அவர் விவரித்தார்.

தமிழகத்தில் மதுரையைச் சேர்ந்தவர் சாம்ராஜ். 47 வயதாகும் இவர் இளம் வயதிலிருந்தே கவிதை, கதை, கட்டுரை என்று பல தளங்களில் எழுதி வருபவர். 

பத்திரிகை, திரைப்படத் துறைகளிலும் ஈடுபாடுள்ள இவர், திரைப்பட இணை இயக்குநராக பணிபுரிகிறார்.

பயிலரங்கில் பங்கேற்பாளர்கள் கவிதைகள் எழுத ஊக்குவிக்கப்பட்டனர். பங்கேற்பாளர்கள் ஏற்கெனவே எழுதிய கவிதைகளையும் அவருக்கு அனுப்பிவைத்திருந்தனர். 

பங்கேற்பாளர்களின் கவிதைகள் விவாதிக்கப்பட்டு அதுகுறித்த கருத்துகளையும் அவர் முன்வைத்தார்.

பயிலரங்கில் கவிதைகளை எப்படி சுவையாக எழுதமுடியும் என்று கற்றுக்கொண்டதாகக் கூறினார் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் 17 வயது உமாபதி சங்கர் பிரவீணா.

“வாசிப்பிற்காக கொடுக்கப்பட்ட கவிதைகளில் புரியாத  சிலவற்றை பயிலரங்கில் பங்கேற்ற சிலர் எடுத்துக்கூறி விளங்க வைத்தனர். அது மிக உதவிகரமாக இருந்தது,” என்றார் உமாபதி. 

“கவிஞர்கள் என்ன மனநிலையில் கவிதைகளை எழுதுகிறார்கள் என்று புரிந்து கொண்டால், அவற்றை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்,” என்றும் அவர் சொன்னார்.

அதே பள்ளியைச் சேர்ந்த ரோஷன் சாம், 18, கவிதைகளை மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்க கற்றுக்கொண்டதாகக் கூறினார்.

“எழுத்தாளர் சாம்ராஜுடனான கலந்துரையாடல் அங்கம் என்னை வெகுவாகக் கவர்ந்தது,” என்ற அவர், “எங்களது தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பாடத்தில் கவிதைகளும் உண்டு. நாங்கள் வகுப்பில் படிக்கும் தலைப்புகளும் இப்பயிலரங்கில் பேசப்பட்டவையும் ஒன்றாக இருந்தன,” என்றார்.

“எழுத்தாளர் சாம்ராஜ் எங்களுக்கு வகுப்பில் அறிமுகமான கவிஞர்களைப் பற்றியும் பேசினார். நானும் கவிதைகள் எழுத முயற்சி செய்வேன்,” என ரோஷன் கூறினார்.

“கவிதை எழுதுவது தொடர்பான ஆழமான கருத்துகள் பயிலரங்கில் பகிர்ந்துகொள்ளப்பட்டன.  சிறந்த கவிதை எழுதுவதற்கான குறிப்புகள் பயனுள்ளவையாக இருந்தன,” என்று கூறினார் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரிஜெயக்குமார் அரவிந்த், 17. 

எது கவிதை, எது கவிதை அல்ல என்பது குறித்து கவிஞர் சாம்ராஜ் விளக்கியது கவிதை குறித்த பார்வையைத் தந்ததாக மாணவர் ராகவேந்திர பிரசாத், 17, குறிப்பிட்டார்.

“தற்காலத்தில் யார், என்ன எழுதுகிறார்கள் எனத் தெரிந்து கொள்ள இப்பயிலரங்கு உதவியது. ஒவ்வொருவருடைய பார்வையும் வேறுபடும். பல்வேறுபட்ட படைப்பாளர்களின் பார்வைகளைத் தெரிந்துகொள்ள இது நல்ல தளமாக இருந்தது,” என்றார்  படைப்பாளர் பாரதி மூர்த்தியப்பன், 42. 

“தமிழ் இலக்கியத்தில் கவிதைகளின் வரலாறு மிகவும் நீளமானதும் ஆழமானதும் ஆகும். அதனால், இன்றைய பயிலரங்கு அந்த ஆழத்தையும், தற்காலத்தில் கவிதைகள் எதை நோக்கி பயணிக்கின்றன என்பதையும், நமது பாரம்பரியம், மொழி தற்போது எப்படி இருக்கிறது என்பதையும்  தெரிந்துகொள்ள உதவியது,” என்றார் மற்றொரு படைப்பாளரான எம் கே குமார், 40.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon