இனி நான் அரசியல்வாதியாக இருக்க முடியாது: பாலியல் காணொளியில் இடம்பெற்றதாக ஒப்புக்கொண்டவர்

வருங்காலத்தில் அரசியல்வாதியாக உயர ஆசைப்பட்ட ஹசிக் அப்துல்லாவின் கனவுகளைத் கலைத்துள்ளது ஒரு பாலியல் காணொளி. அந்தக் காணொளியில் இருந்த ஆடவர்களில்  ஒருவர் தாம் என்றும் மற்றொருவர் பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி என்றும் ஹசிக் கூறியது மலேசியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

பக்கத்தான் ராக்யாட் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவராக இருந்த ஹசிக், தொடக்கநிலை தொழில்துறை அமைச்சரின்  மூத்த தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றினார். அந்தப் பொறுப்பிலிருந்து அவர் இப்போது நீக்கப்பட்டுள்ளார்.

“இப்போதைக்கு நான் அரசியல்வாதி ஆவது பற்றி மறந்தாகவேண்டும்,” என்று ஹசிக், ‘த ஸ்டார்’ பத்திரிகையிடம் அளித்த பேட்டியின்போது கூறினார்.

தான் செய்தது தவறுதான் என்று ஹசிக் கூறியபோதும், தான் மட்டும் தவறு செய்யவில்லை என்பதை வலியுறுத்தினார். “காணொளியில் இருந்ததை ஒப்புக்கொண்ட எனக்கு மட்டும்தான் தண்டனை,” என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்தார். இது குறித்து தமது குடும்பம் ஆழ்ந்த வருத்தத்தில் இருப்பதாக ஹசிக் தெரிவித்தார். ஆனாலும் பொய் சொல்வது தமது இயல்பல்ல என்றும் அவர் கூறினார். ஹசிக் தமது வீட்டைவிட்டு வெளியேறியிருப்பதாகவும் குடும்பத்தினருடன் தொடர்பில் இல்லை என்றும் அவரது தந்தை அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

அமைச்சர் அஸ்மின் அலி காணொளியில் இருப்பது தான் அல்ல என்றும் இந்த விவகாரம் தனக்கு எதிரான சதி என்றும் கூறுகிறார்.