உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்

சிங்கப்பூர் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு மற்றும் தேசிய நூலகத்தின் ஆதரவுடன் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டி இம்மாதம் 11ஆம் தேதி தேசிய நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்தப் போட்டியில் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 130 மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களது பெற்றோர் பலரும் இதில் பங்கேற்றனர். 

மொழிபெயர்ப்புக்காக சிங்கப்பூரின் வரலாற்று ரீதியான பனுவல் தரப்பட்டது.

முதல் பிரிவில் உயர்நிலை 1, 2 மாணவர்களும் இரண்டாம் பிரிவில் உயர்நிலை 3, 4, 5 மாணவர்களும் பங்குபெற்றனர். 

ஒவ்வொரு பிரிவுக்கும் முதல் மூன்று பரிசுகளுடன் ஐந்து ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. அதோடு, சிராங்கூன் டைம்ஸ் மாத இதழுக்கான ஆண்டுச் சந்தாவும் வழங்கப்பட்டது. 

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 18) நடைபெற்ற பொங்கல் சிறப்புப் பட்டிமன்ற நிகழ்ச்சியின்போது இப்பரிசுகள் வழங்கப்பட்டன. 

இந்த நிகழ்ச்சியில் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு மனோகரன் சுப்பையா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 

“இன்றைய இளையர்களிடம் பெரிதும் வலியுறுத்த வேண்டியது படிப்பா? பண்பாடா?” என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்திற்கு நகைச்சுவை நாவரசர் புலவர் மா.இராமலிங்கம் நடுவராக செயல்பட்டார். 

'படிப்பே' என்ற அணியில் திரு சரீஃப், கார்த்திகேயன், பார்கவி ஆகியோரும் 'பண்பாடே' என்ற அணியில் முனைவர் ராஜிஸ்ரீநிவாசன், சுசூகி தர்மராஜ், விஷ்ணுவர்தினி ஆகியோரும் பேசினர். செய்தி: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்