சிங்க நடனத்தில் அசத்தும் தமிழர்

சிங்க நடனத்தின்மீது இந்தத் தமிழர் கொண்டுள்ள ஆர்வம், சிலருக்கு வித்தியாசமாகவும் சிலருக்கு வேடிக்கையாகவும் இருக்கலாம். ஆனால் 32 வயது கவிகுமார் பிரேம்குமாரின் வாழ்க்கையுடன் இந்தச் சீனப் பாரம்பரியக் கலை இரண்டறக் கலந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

சிங்கப்பூர் வென் யோங் கடல்நாக, சிங்க நடனக்குழுவில் உறுப்பினராக மட்டுமல்லாமல், சீன, மலாய் இளையர்களுக்கும் இந்த நடனத்திற்கான வழிகாட்டியாக கவிகுமார் இருக்கிறார்.

“இந்தக் குழுவில் இருக்கும் அனைவரும் ஒரே குடும்பம்போல பழகுகிறோம். இதில் இன, சமய வேறுபாடுகளுக்கு இடமே இல்லை,” என்று கவிகுமார் கூறியபோது, அவரது முகத்தில் பெருமை கலந்த மகிழ்ச்சி தெரிந்தது.

இந்த ஆர்வம் மூன்று வயதாக இருந்தபோதே ஏற்பட்டதாக இவர் பகிர்ந்துகொண்டார். “என் ஆர்வத்தை உணர்ந்த என் பெற்றோர் அப்போது எனக்கு ஒரு சிங்க நடன உடையை வாங்கினர். அதை அணிந்துகொண்டு நான் என் அண்டைவீட்டார் முன்னால் விளையாட்டுத்தனமாக ஆடினேன். ஆடிய பிறகு எனக்கு அவர்கள் ‘ஹோங்பாவ்’ அன்பளிப்பு கொடுத்தனர்,” என்று நினைவுகூர்ந்தார் கவி.

சிறு வயதிலேயே பெற்ற இந்த ஊக்கமே, அதைத் தொடர ஊக்கமளித்தது. பதின்மூன்று வயதில் ஹோங் யாங் சிங்க நடனக் குழுவில் சேர்ந்தார் கவி. “இதுவரை வேடிக்கையாகப் பார்த்த சிங்க நடனத்தினை முறைப்படி கற்றுக்கொள்ள சென்றேன். என்னை அவர்கள் ஏற்றுக்கொண்டபோதும் சிலர் என்னைச் சற்று வித்தியாசத்துடன் பார்த்தனர்,” எனத் தெரிவித்தார். அப்போதுதான் தாம் சற்று ஒதுக்கப்பட்டதாக உணர்ந்ததாகக் கூறினார். 

சில மாதங்கள் அக்குழுவுடன் கற்றுக்கொண்டபோதும் குடும்பப் பொறுப்புகளால் நடனப் பயிற்சியைத் தொடர முடியாத சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது. நடைமுறைக்கு ஒத்துவராது என எண்ணி அவர் தமது ஆசையைக் கைவிட எண்ணினார். 2008ல் சில நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் அவர் உறுமி மேளத்தில் சேர்ந்தார். ஆனால் அதில் ஆர்வம் ஏற்படவில்லை. “சாதாரண பொழுதுபோக்கோ அல்லது வாழ்க்கைத் தொழிலோ, ஆர்வம் இருந்தால்தான் அது நிலைக்கும்,” என்று அவர் கூறுகிறார்.

இந்து சமயம் மட்டுமின்றி சீனப் பாரம்பரிய வழிபாட்டின்மீதும் ஈடுபாடு கொண்ட கவிக்கு, 2015ஆம் ஆண்டில் சீனக் கோயில் ஒன்றைச் சேர்ந்தவர்கள் சிங்க நடனக் குழுவில் சேர அழைப்பு விடுத்தனர்.

“முன்பு பதின்ம வயதில் இருந்ததைக் காட்டிலும் அதிகத் தன்னம்பிக்கை பெற்றுவிட்ட நிலையில் நான் சிங்க நடனக் குழுவில் சேர்ந்தேன். எனக்கு வேறு எந்த வேலைப்பளு இருந்தாலும் நான் சிங்க நடனக் கலையைக் கைவிடப் போவதில்லை என்ற உறுதியும் அப்போது என் மனதில் இருந்தது,” என்றார்.

இந்தப் புதிய குழு சற்றும் தயங்காமல் கவியை ஆரத்தழுவியது. கவியும் அவரது குழுவினரும் ஒருவரையொருவர் ‘அண்ணன்’, ‘தம்பி’ என்று தமிழில் செல்லமாகக் கூப்பிடும் அளவுக்கு அவர்களின் பந்தம் வளர்ந்ததாம். கேலி கிண்டல்களுடன் அவ்வப்போது சின்னஞ்சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் அனைவரும் ஒரு குடும்பம்போல் ஒற்றுமையாக இருப்பதாக கவி தெரிவித்தார்.

குழுவில் இந்திய உணவை விரும்பும் சகாக்களுக்காக தாமும் தம் மனைவியும் சமைத்துத் தருவதாகவும் அவர் கூறினார். அதே சமயம் அடிக்கடி சபரிமலை யாத்திரைக்குச் செல்லும் சமயங்களில் அவர் சைவமாக இருக்கும்பொழுதெல்லாம் நடனக் குழுவினர் புரிந்து நடந்துகொள்வர் என்றும் அவர் தெரிவித்தார்.

சீனாவின் வெவ்வேறு பகுதிகளுக்கு ஏற்ப சிங்க வடிவம், ‘வடக்கு சிங்கங்கள்’ என்றும் ‘தெற்கு சிங்கங்கள்’ என்றும் பிரிக்கப்பட்டுள்ளதாக கூறிய கவி, தென் சிங்க வகைகள், குறிப்பாக ‘ஹெஷான்’ சிங்கங்கள் சிங்கப்பூரில் ஆகப் பிரபலமாகப் பயன்படுத்தப்படுபவை என்றார். சிங்கப்பூர் சீனர்களில் பெரும்பாலானோர் சீனாவின் தென்மாநிலங்களைப் பூர்வீகமாகக் கொண்டுள்ளது இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. 

அத்துடன் சிங்க நடனத்திலும் கடல்நாக நடனத்திலும் உள்ள நுணுக்கங்கள் சிலவற்றையும் கவி பகிர்ந்துகொண்டார். ஒரு தமிழரிடமிருந்து இத்தகவல்களைப் பெற்றுக்கொள்வது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

ராஜூ இறுதிச் சடங்கு நிறுவனத்தில் தமது உறவினருடன் பணிபுரியும் இவர், சிங்க நடனத்தில் உள்ள தம் கலை ஈடுபாட்டுடன் தம் வேலையையும் குடும்பத்தையும் சமாளிக்க வேண்டியிருக்கும் சவாலையும் எடுத்துக்கூறினார். 

சீனப் புத்தாண்டு போன்ற விழாக்காலங்கள் அல்லாத நேரங்களில் வாரத்திற்கு இருமுறை வேலை முடிந்து பயிற்சி செய்வாராம். ஆனால் விழாக்காலத்தின்போது வேலையிலிருந்து விடுப்பு எடுத்து பயிற்சிக்கு அதிக நேரத்தை ஒதுக்கவேண்டியுள்ளதாகத் தெரிவித்தார். சீனப் புத்தாண்டு காலக்கட்டத்தில் 25 முதல் 30 நடனங்கள் வரை அவர் ஆட நேரிடும் என்றார். 

“எனது அனைத்து வேலைகளையும் சீராகச் செய்து முடிக்க சில வேளைகளில் அதிக களைப்பு ஏற்பட்டாலும் என் கலை ஆர்வத்தால் நான் எப்படியாவது சமாளித்துவிடுவேன். உடல்நலம் சரியில்லாமல் போனாலும் நடனமாடிவிட்டு இடையிடையே ஓய்வெடுப்பேன். ஆர்வம் உள்ளவருக்குத் துன்பமும் துயரமும் ஒரு பொருட்டல்ல,” என்றார்.

பல ஆண்டுகளாகத் தன் காதலியாக இருந்த பெண்ணைக் கடந்தாண்டு கைபிடித்தார் கவி. இனி வரும் காலத்தில் தங்களுக்குப் பிறக்கப்போகும் பிள்ளைகளையும் சிங்க நடனக் கலையில் ஈடுபடுத்த விரும்புவதாக தெரிவித்தார். 

“எனக்குத் தெரிந்த பல தமிழர்கள், சிங்க நடனத்தைக் கற்றுக்கொள்ள தங்கள் பிள்ளைகளை என்னிடம் அனுப்ப முன்வருகின்றனர். முன்பெல்லாம் இத்தகைய மனப்போக்கை நான் தமிழர்களிடையே பார்த்ததில்லை. இந்த மாற்றத்தைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.

மனம் வைத்தால் எதையும் செய்ய முடியும் எனக் கூறிய கவிகுமார், விரும்பியதைச் செய்ய நாம் என்றுமே தயங்கக்கூடாது என்பது தமது வாழ்க்கையின் தாரக மந்திரம் என்று வலியுறுத்திச் சொன்னார்.