அனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்

இந்திய இசை மற்றும் நடனத்திற்கான மாபெரும் அனைத்துலகப் போட்டியில் வாகை சூடியவர்களில் ஒருவர் கௌஸ்துப் சந்திரமௌலி மணிகண்டன்.

ஷங்கர் மகாதேவன் இசைப்பள்ளி, ரித்விக் மேடைக்கலை அறநிறுவனம் ஆகியவை இணைந்து 11 போட்டிகளை நடத்தின.

ஆகஸ்ட் தொடங்கி இரண்டு சுற்றுகளாக நடந்த இந்தப் போட்டியில் இரண்டாம் சுற்றுக்கு 70 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு 11 பிரிவுகளில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஷங்கர் மகாதேவன் இணைய இசைப்பள்ளியில் இந்துஸ்தானி வாய்ப்பாட்டைக் கற்றுவருகிறார் கௌஸ்துப். இந்தப் பள்ளியின் மூலம் போட்டி பற்றி தெரிய வந்ததாக அவரது தாயார் திருமதி கவிதா தெரிவித்தார்.

தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பல்வேறு கீர்த்தனைகளை இயற்றிய ஊத்தக்காடு வேங்கட சுப்பைய்யரின் கோடி ஜன்மானி (ரீத்திகௌலை), வாஞ்சஸியதி (கல்யாணி ராகம்), மற்றும் கல்யாண ராமா (ஹம்சநாதம்) ஆகிய பாடல்களைப் பாடி முதல் பரிசினைப் பெற்றார்.

பெய் தோங் தொடக்கப்பள்ளியின் தொடக்கநிலை ஐந்து மாணவரான இவர் கோகுல் கிருஷ்ணாவிடம் நான்கு ஆண்டுகள் நேரடியாகவும் மும்பையில் உள்ள விதுஸ்ரீ ராதா நம்பூதிரியிடமிருந்து இணையம் வழியாகவும் கற்று வந்தார். வாய்ப்பாட்டுடன் மிருதங்கம், மாண்டலினுடன் கீபோர்டும் சில காலம் கற்றார் கௌஸ்துப்.

“மிருதங்கத்தைக் கற்பதால் பாடும்போது எனது தாள ஞானம் வளர்கிறது. மாண்டலின் வழியாக இசைக்கப்படும் கமகங்கள் எனது பாட்டுத்திறனை வளர்க்க கைகொடுக்கிறது,” என்றார்.

ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு மணி நேரம் கடினமாக பயிற்சி செய்யும் கௌஸ்தூப் இதுவரை 30 வர்ணங்களையும் 70 வரையிலான சங்கீத பாடல்களையும் கற்றிருக்கிறார்.

சில நேரங்களில் கல்வியையும் சங்கீதத்தையும் சமாளிப்பதில் களைப்பு ஏற்பட்டாலும் ஒவ்வொரு பாட்டையும் கற்கும்போது தமது களைப்பு மறைவதாகக் கூறினார். “அத்துடன் கௌஸ்துப்பின் இசை இலக்குகளுக்கு இவரது பள்ளி ஆசிரியர்கள் ஆதரவு தருகின்றனர்,” என்றார் அவரது தாயார்.

“இந்த வெற்றியின்மூலம் திரு ஷங்கர் மகாதேவனின் சிறப்பு வகுப்பில் எனக்கு இடம் கிடைத்தது. இதற்காக எனது தற்போதைய குருவான விதுஸ்ரீ ராதா நம்பூதிரிக்கும் எனது பெற்றோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,” என்று கௌஸ்துப் தெரிவித்தார்.

“என் முன்னேற்றத்தில் எனது தாய் தந்தையர் மிகவும் அக்கறை கொள்வதால் அவர்கள் சொற்படி நான் நடப்பேன்,” என்று தெரிவித்த கௌஸ்துப், கடினமாக உழைத்து வருங்காலத்தில் இசைத் துறையில் சாதிக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon