மரங்களைப் பாதுகாக்கும் வித்தியாசமான தொழில் கொண்ட ஹலீமா

இயற்கைப் பிரியர்கள் காடுகளிலும் பூங்காக்களிலும் தங்கள் நேரத்தை அதிகம் செலவிடுவார்கள். 29 வயது ஃபாத்திமா ஹலீமா முகம்மது அன்சாரி முழுநேரப் பணியாக பெரும்பாலான நேரங்களில் அவ்விடங்களில் மரங்களைச் சோதித்துக்கொண்டிருப்பதை நாம் காணலாம்.

மனிதர்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்கள் மருத்துவரை நாடுவார்கள். விலங்குகள் நோய்வாய்ப்பட்டால் கால்நடை மருத்துவர் உதவிக்கு வருவார். சிங்கப்பூர் ‘தோட்ட நகரம்’ என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. தாவரங்கள் செழிப்பாக நிற்கும் நம் நாட்டில் அவற்றைப் பாதுகாக்கவும் யாரேனும் இருக்க வேண்டும்.

குறிப்பாக மரங்கள் நோய்வாய்ப்பட்டால் ஹலீமா போன்றவர்கள் கைகொடுக்க முன்வருவார்கள். கடந்த ஏழு ஆண்டுகளாக ‘அர்போரிஸ்ட்’ எனும் மரங்களின் நலனைக் காக்கும் மருத்துவராகவும் தோட்டக்கலை நிபுணராகவும் பணியாற்றி வருகிறார் ஹலீமா.

மரங்களின் நலனைக் காக்கும் இந்த வித்தியாசமான தொழிலைத் தேர்ந்தெடுத்துள்ள ஹலீமா, இதுபோன்ற ஒரு வேலை சிங்கப்பூரில் இருக்கிறதா என்று பலர் தன்னிடம் வினவியுள்ளதாகப் பகிர்ந்துகொண்டார். வேலையில் அடங்கியுள்ள நுணுக்கங்கள் பெரும்பாலும் ஆண்களை ஈர்ப்பதாகக் கூறிய அவர், இத்துறையில் பெண்களும் அவர்களுக்கு நிகராக திறம்பட சாதிக்கலாம் என்றார்.

இந்தத் தனித்துவமான துறையில் இருக்கும் ஹலீமா பள்ளிப் பருவத்தில் கால்நடை மருத்துவராக வேண்டுமென்று விரும்பினார். ஹலீமாவின் தந்தைக்குத் தாவரங்கள் என்றால் மிகவும் பிரியம். வீட்டில் ஹலீமா கால்நடை மருத்துவர் ஆக விரும்புவதாகக் கூறியபோது யாரும் பெரிதளவில் ஆதரவு அளிக்கவில்லை. அதன் காரணமாக அவர் தோட்டக்கலை, நிலத்தோற்றத்தில் பட்டயம் பெற்றார்.

மரத்தைப் பார்த்தவுடன் சட்டென்று அதன் பெயர், இனம், ஆரோக்கிய நிலை போன்றவற்றைக் கண்டறிய ஹலீமாவுக்கு ஐந்து ஆண்டுகள் ஆகின. பட்டயம் பெற்றவுடன் மரத்தின் நலனைப் பாதுகாக்கும் மருத்துவர் ஒருவரின்கீழ் பயிற்சி மேற்கொண்ட ஹலீமா, வேலையின் நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்தார்.

சிங்கப்பூரில் இருக்கும் நூற்றுக்கணக்கான மரங்களின் இனம், அவற்றின் பெயர் ஆகியவற்றைக் கரைத்துக் குடித்துள்ள ஹலீமா, வேலை காரணமாக அடிக்கடி காடுகளுக்குச் செல்வதுண்டு. அங்கு இருக்கும் பாம்புகளும் பூச்சிகளும் இவருக்குப் பீதியை ஏற்படுத்தியதில்லை என்றார்.

மரத்தில் பூத்திருக்கும் பூக்கள், அதன் இலைகள், பட்டை போன்றவற்றை வைத்து மரங்களை அடையாளம் காணும் ஹலீமா அதே காரணிகளை வைத்து ஒரு மரத்தைப் பார்த்தவுடன் சோதனையும் செய்கிறார். பூச்சித் தொல்லை, பூஞ்சை காரணமாக ஒரு மரத்தின் ஆரோக்கியம் கெடும்.

இருப்பினும், இயற்கையாகவே குணமடையும் ஆற்றல் மரங்களுக்கு உள்ளது. அதையும் தாண்டி ஹலீமாவின் கரங்கள் சில நேரங்களில் தேவைப்படுகின்றன.

“பூச்சிக்கொல்லி, பூஞ்சைக்கொல்லி ஆகியவற்றை மரங்களின் மீது மூன்று மீட்டர் வரைதான் தெளிக்க முடியும். உயரமான மரங்களைக் கத்தரிப்பது (pruning) தான் தீர்வு,” என்றார் ஹலீமா.

சாதாரண நாளில் பூங்காக்களிலும் காடுகளிலும் வலம்வரும் ஹலீமா மழை பெய்யும் நேரத்தில் அவசரமாகச் செயல்பட வேண்டும். மழை பெய்யும் நேரத்தில் மரம் வீழ்வதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால் ஹலீமா மரத்தில் பழைய கிளைகள் இருக்கிறதா என்று கூர்ந்து கவனிக்க வேண்டும்.

விரைவுச்சாலையில் தீடீரென மரங்கள் வீழ்வது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்கு ஹலீமாவைப் போன்றவர்களின் பணி இன்றியமையாதது. நேராக நின்று, வேர்கள் பரந்து காணப்படும் மரம் ஆரோக்கியமாக இருக்கும் என்று எண்ணினாலும் மரத்தைக் கரையான்கள் அழிக்கக்கூடும்.

அதனால் ஒரு மரம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று எளிதில் கூறிவிட முடியாது. நீக்குப்போக்கான வேலையாக இருந்தாலும் மரத்தின் அழுகிய வேரைக் கண்டறிவது, ஒத்துழைக்காத வானிலையில் வேலை பார்ப்பது போன்றவற்றைச் சமாளிப்பது ஹலீமாவுக்குச் சவாலாக உள்ளது.

வேலை மீதான ஆர்வத்தைப் பறைசாற்றும் விதத்தில் ஹலீமா துறையில் கால் எடுத்து வைத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் ‘யூனிவேர்சல் லாண்ட்ஸ்கேப் அண்ட் கான்ஸ்டருக்ஷன்’ (Universal Landscape and Construction) எனும் நிறுவனத்தை நிறுவி 13 பேரைப் பணியில் அமர்த்தியுள்ளார்.

பூங்காக்களிலும் காடுகளிலும் மட்டுமின்றி ஹலீமா தனியார் வீடுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் வளர்க்கும் செடிகளையும் மரங்களையும் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபடுகிறார்.

தற்போது வேளாண்மைத் துறையில் பகுதிநேரப் பட்டயம் பயின்று வரும் ஹலீமா, “சிங்கப்பூரில் இந்தத் துறையில் சாதிக்க வாய்ப்புகள் உண்டா என்று எனது உறவினர்கள் பலர் வினவியதுண்டு. சுற்றுச்சூழலுக்கும் நீடித்த நிலைத்தன்மைக்கும் அதிக முயற்சிகள் மேற்கொண்டு வரும் இந்தக் காலகட்டத்தில், இத்துறை முக்கியத்துவம் பெற்றுவருகிறது என்பதை அனைவரும் உணரவேண்டும்,” என்று அறிவுறுத்தினார் ஹலீமா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!