‘எஸ்ஐஏ இலவச பயணச்சீட்டு மின்னஞ்சல் பொய்’

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தன்னுடைய 70வது ஆண்டு விழாவையொட்டி இலவச விமான பயணச் சீட்டுகளைக் கொடுக்கிறது என்று சொல்லும் மின்னஞ்சல் உங்களுக்கு வந்தால் அதை நம்பாதீர்கள். இத்தகைய செய்திகளைத் தில்லுமுல்லு பேர்வழிகள் கடந்த வியாழக்கிழமை முதல் பரப்பி வருகிறார்கள் என்று எஸ்ஐஏ பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அத்தகைய செய்தி எதையும் அனுப்பவில்லை. அப்படி கூறும் மின்னஞ்சல் வந்தால் அதை அலட்சியப்படுத்திவிடுங்கள் என்று பேச்சாளர் விளக்கினார். அத்தகைய போலி மின்னஞ்சல் பற்றி பொதுமக்களுக்கு எச்சரித்து எஸ்ஐஏ நிறுவனம் தன்னுடைய இணையத்தளத்திலும் தனது சமூக ஊடகத்திலும் விளம்பரங்களை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. தில்லுமுல்லு பேர்வழிகள் மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். அல்லது தொலைபேசி வழி பேசி இலவச பயணச்சீட்டு கிடைக்கும் என்று சொல்லி ஆசை காட்டுகிறார்கள் என்று அந்தப் பேச்சாளர் விளக்கினார்.