தமிழில் சிந்திக்க, எழுத தமிழ்க் கல்வி ஊக்குவிக்க வேண்டும்

சிங்கப்பூர்க் கல்விக் கொள்கையின் முக்கியக் கூறுகளில் ஒன்று இருமொழிக் கொள்கை. அதன் பயனாக இன்று சிங்கப்பூர் மக்களில் 97.1 விழுக்காட்டினர் இரண்டு அல்லது அதற்கு மேலான மொழிகளில் ஆற்றல் பெற்றுள்ளனர். இந்தியர்கள் மத்தியில் அந்த விகிதம் 98.4%ஆக உள்ளது.

மொழி கற்றலை மகிழ்வுறு அனுபவமாக நம் மாணவர்களுக்கு வடித்துத் தருவதே தாய்மொழிக் கல்வியின் இலக்காக அமைதல் வேண்டுமென அதிபர் தர்மன் சண்முகரத்னம் வலியுறுத்தினார்.

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆசிரியர் தினக் கொண்டாட்ட விருந்து நிகழ்ச்சியில் அதிபர் பேசினார்.

தமிழுக்கு அதிகாரத்துவ மொழி என்ற அங்கீகாரத்தைக் கொடுத்திருப்பதுடன் தமிழைப் படிக்கவும், ஊடகம் முதல் கலை, இலக்கியம் வரை அனைத்து அம்சங்களிலும் தமிழை இடம்பெறச் செய்யவும் பெருமளவு பணத்தையும் வளங்களையும் செலவு செய்யும் நாடு சிங்கப்பூர்.

அரசாங்கத்தின் இந்த முன்னெடுப்புகளும் முயற்சிகளும் இந்த நாட்டில் பிறந்து வளரும் தமிழ்க் குழந்தைகளுக்கு எந்த அளவுக்குப் பயன் அளிக்கின்றன என்பது ஆய்வுக்குரியது.

சிங்கப்பூர் வீடுகளில் தமிழ் பேசுவது ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதை மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 2010ஆம் ஆண்டில் 3.3% வீடுகளில் தமிழ் ஆக அதிகமாகப் பயன்படுத்தப்படும் மொழியாக இருந்தது. அந்த விகிதம் 2.5%ஆக 2020ஆம் ஆண்டில் குறைந்துள்ளது. ஆங்கிலம் அதிகம் புழங்கும் வீடுகளிலும் தமிழ் இரண்டாம் மொழியாகப் பேசும் குடும்பங்களின் விகிதம் 5.1% மட்டுமே.

அதிகமாக கலப்புத் திருமணங்கள் நடைபெற்று வரும் நிலையில், வீட்டில் ஆங்கிலப் புழக்கமே இன்னும் அதிகமாகும். சிங்கப்பூரர் திருமணங்களில் 18% கலப்புத் திருமணங்கள்.

பள்ளியிலும் வேலையிடத்திலும் பொது இடங்களிலும் புழங்கு மொழியாகவும் அலுவல் மொழியாகவும் ஆங்கிலமே உள்ளது.

வழிபாடு, திருமணங்கள் உள்ளிட்ட அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் தாய்மொழியைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளன.

இந்தச் சூழலில் பிறந்து வளரும் பிள்ளைகள் தமிழ் பேச வேண்டும் என்றால், அதிபர் தர்மன் சொல்வதுபோல தாய்மொழியைப் படிப்பதன் நோக்கம் மகிழ்ச்சியான, விருப்பமான, நாட்டமான அனுபவமாக இருந்தால் மட்டுமே முடியும்.

அப்போதுதான், தமிழ் வகுப்புகள் ஆசையோடு, ஆர்வத்தோடு, உற்சாகத்தோடு, எதிர்பார்த்திருக்கும் வகுப்பாக இருக்கும்.

மதிப்பெண் வாங்குவதற்காக மட்டும் தமிழ்ப் பாடநூல்களைப் படிக்கும் பிள்ளைகள் பள்ளிப் படிப்பு முடிந்தபிறகு தமிழ் புழங்கும் வாய்ப்புக் குறைவு.

பிள்ளைகள் மதிப்பெண் வாங்க பெருந்தொகை கொடுத்து துணைப் பாட ஆசிரியர்களை அமர்த்தினால்போதும் என்ற எண்ணமுள்ள வீடுகளில் இயல்பான தமிழ்ப் புழக்கம் அதுவாகவே ஏற்பட்டுவிடுவதில்லை.

தமிழோடு, சீனம், மலாய் உள்ளிட்ட சிங்கப்பூர் மக்களின் தாய்மொழிகள் புழங்குமொழியாகவும் வளரும் மொழியாகவும் இருக்க, தாய்மொழி கற்பித்தலின் நோக்கம் உணர்வுபூர்வமான அனுபவத்தைக் கொடுப்பதாக அமைய வேண்டும்.

ஆங்கிலம் அதிகம் புழங்கும் இன்றைய சூழலில் செய்திகளை அறிந்துகொள்ள தாய்மொழிப் புலமை அவசியமில்லை என்ற ஓர் எண்ணம் நிலவுகிறது.

தாய்மொழி அறிவுள்ள ஒருவருக்கு ஆங்கில மொழி மூலம் பெறும் கல்வியும் தகவல்களும் அவரது சிந்தனையிலும் அறிவாக்கத்திலும் மேம்பாட்டைத் தருகிறது. அல்லது ஒரு மாறுபாட்டைக் கொண்டுவருகிறது என்ற எண்ணமும் இருக்கிறது. இருந்தாலும் உணர்வுரீதியான தொடர்புகளையும் உள்ளார்ந்த, பண்பாட்டு அடிப்படையிலான சிந்தனையையும் ஏற்படுத்துவது தாய்மொழிதான்.

இதுவே ஒருவருக்குத் தனித்துவ அடையாளத்தைத் தருகிறது. இந்த அடையாளமே ஒருவரின் தனிச்சிறப்புகள் மேம்படவும் உதவுகிறது.

தாய்மொழி அறிவு, இருமொழித் திறன் ஆகியவற்றால் கிடைக்கக்கூடிய பயன்கள் பற்றி ஏராளமான ஆய்வுகள் விளக்கியுள்ளன, வலியுறுத்தி உள்ளன.

அதனால் நமக்கு தாய்மொழிக் கல்வி, தமிழ் மொழி அறிவு கண்டிப்பாகத் தேவை. பள்ளியில் தமிழ் படிப்பதும் தேர்வுகளில் மதிப்பெண் வாங்குவதும் மட்டுமே தமிழ் படித்தது ஆகாது.

அன்றாட வாழ்வில் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கேலியாகப் பேசி உரையாடி மகிழும்போதும், நண்பர்கள், உறவினர்கள் ஒன்றுகூடல்களிலும் வீடுகளிலும் தமிழ் புழக்கம் இருக்க வேண்டும்; நிலைக்க வேண்டும். மேம்பட வேண்டும். தமிழில் சிந்திக்கவும் எழுதவும் வேண்டும்.

அதற்கு உறுதுணையாக, ஊக்குவிப்பாக, உந்து சக்தியாக தமிழ்க் கல்வி திகழ வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!