'ரஜினி விட்டுச்செல்லும் முதலிடத்தை விஜய் உடனே நிரப்புவார்'

தமிழ்ச் சினிமா கதாநாயகர்களில் யாருக்கு முதலிடம் என்பதில் எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்தே ஒரு மறைமுகப் போட்டி இருந்து வருகிறது. 

சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும்தான் என்று சொல்வதை இதுவரை யாரும் எதிர்த்ததாகத் தெரியவில்லை. 

இந்நிலையில் வசூல் ரீதியில் யாருக்கு முதலிடம் என்று கேள்வி எழுப்பினால் விஜய் என்பதே பொருத்தமான பதிலாக இருக்கும் என்கிறார்கள் அவரது ரசிகர்கள். 

உச்ச நட்சத்திரம் என்ற தகுதியைப் பெறுவதற்கு விஜய்க்கு 28 ஆண்டு கால உழைப்பு தேவைப்பட்டிருக்கிறது. திரைக்களத்தில் விஜய்க்கும் அஜித்துக்கும்தான் நேரடிப் போட்டி. ரஜினி-கமல் இடையே போட்டி என்று கடந்த சில ஆண்டுகளாக ஏதுமில்லை. 

இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான ‘விஸ்வாசம்’ வசூலில் அசத்தியது.

தன் திரைவாழ்வில் புதிய மைல் கல்லை எட்டிப் பிடித்தார் அஜித். 

ஆனால் ‘பிகில்’ படம் ரஜினி, அஜித் படங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது. 

சுமாரான படம், பல படங்களின் கதையை மாற்றியமைத்துப் பயன்படுத்தி உள்ளனர், திரைக்கதை மோசம் என்று ‘பிகில்’ பற்றி சில தரப்பினர் எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்தனர். 

ஆனால், அவற்றையும் கடந்து வந்து 300 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது இப்படம். இதை வருமான வரித்துறையே ஒப்புக் கொண்டுள்ளது. 

இதையடுத்து சம்பளம், சினிமா வியாபாரம், ரசிகர்களின் எண்ணிக்கை என்று அனைத்திலுமே விஜய்தான் ‘நம்பர் 1’ நடிகர் என்று கொண்டாடுகிறார்கள் அவரது ரசிகர்கள். 

ரஜினி இருக்கும்வரை அவருக்குத்தான் முதலிடம் என்று அவரது தரப்பு சொல்வதையும் விஜய் ரசிகர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். 

“ரஜினி கடந்த 1995ஆம் ஆண்ட்டு ‘பாட்ஷா’வில் நடித்தார். அப்போது அவருக்கு வயது 45. பெரும் வசூலை ஈட்டிய அந்தப் படம் ரஜினியின் சினிமா வாழ்க்கையில் அரசியல் குறுக்கிட காரணமாக அமைந்தது. 

“அதேபோல் ‘பிகில்’ படத்தில் நடித்தபோது விஜய்க்கு வயது 45. கூட்டிக் கழித்துப் பார்த்தால் ரஜினி வழியிலேயே விஜய்யும் நடைபோடுகின்றார் என்பது தெளிவாகிறது,” என்று ரசிகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். 

ரஜினி பேசுவதெல்லாம் தலைப்புச் செய்திகளாகின்றன. அதேபோல் விஜய் தெரிவிக்கும் கருத்துகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. அவரையும் அரசியலுக்கு இழுக்கிறார்கள். 

கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதும் அதிமுகவுக்கு தனது மக்கள் இயக்கம் அணில் போல் உதவியதாக அறிக்கை விட்டார் விஜய். இதன்மூலம் தனக்கு அரசியல் ஆசை இருப்பதை அவர் வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் விஜய்யின் அடுத்தகட்ட வளர்ச்சி எப்படியிருக்கும் என்பது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் தாணு.

“ரஜினிக்கு 7 முதல் 70 வயது வரையிலான ரசிகர்கள் உள்ளனர். எப்போதுமே வெற்றியைத் தலைக்கு ஏற்றிக்கொள்ள மாட்டார். அதேபோல் விஜய்க்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களாக உள்ளனர். எப்பொழுதுமே பணிவாக இருப்பார். 

“தமிழ்ச் சினிமாவில் முதல் இடம் என்ற நாற்காலி ரஜினிக்குதான் என்பது உண்மை. எனினும் தற்போது அவர் அரசியலுக்குச் செல்கிறார். எனவே, சினிமாவில் அவர் விட்டுச் செல்லும் இடத்தை அடுத்த நிமிடமே விஜய் பூர்த்தி செய்வார்,” என்கிறார் தாணு.

இதற்கிடையே ‘மாஸ்டர்’ படம் எதிர்பார்த்ததைவிட அதிக வசூல் காணும் என்று தயாரிப்புத் தரப்புக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாம். கதை மிகவும் பிடித்துப் போனதாக மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்து வருகிறாராம் விஜய்.

#விஜய் #நடிகர் #தமிழ்முரசு