தமிழ்க் காவியத்தின் வெற்றி

மிகுந்த எதிர்­பார்ப்­பு­களை ஏற்­ப­டுத்தி உள்ள ‘பொன்­னி­யின் செல்­வன்’ திரைப்­ப­டத்­தின் முதல் பாகம் நேற்று சிங்­கப்­பூ­ரில் ஷா, கெத்தே, கோல்­டன் வில்­லேஜ், கார்­னி­வெல் சினிமா ஆகி­ய­வற்­றின் எல்லா திரை­ய­ரங்­கு­க­ளி­லும் வெளி­யீடு கண்­டது. வேலைநாளாக இருந்­த­போ­தும் அத்­தனை காட்­சி­களுக்கும் அரங்­கம் நிறைந்த கூட்­டம். படம் பார்க்க வந்­த­வர்­கள் பல­ரும் இளை­யர்­கள். பெற்­றோ­ருக்­கும் டிக்­கெட் வாங்கி அழைத்து வந்­த­னர் பலர்.

தமிழ்ப் பதிப்பு மட்­டுமே, இந்த வார­யி­று­தி­யில் ஒவ்­வொ­ரு­நா­ளும் 280க்கும் அதி­க­மான காட்­சி­கள் சிங்­கப்­பூர் அரங்­கு­களில் இடம்­பெறு­கின்­றன. இந்­தி பதிப்பு வேறு உள்ளது. இத்­தனை அதி­க­மான அரங்­கு­களில், இவ்­வ­ளவு காட்­சி­கள் இடம்­பெ­றும் முதல் தமிழ்ப்­ப­ட­மாக ‘பொன்­னி­யின் செல்வ’னே இருக்­கலாம்.

‘பொன்­னி­யின் செல்­வன்’ தமிழ் சினி­மா­வின், தமிழ் மக்­க­ளின் கன­வுப் படம். கிட்­டத்­தட்ட 70 ஆண்டு ­க­ளுக்கு முன்­னர் கல்கி எழு­திய ஐந்து பாகத் தொடர்­க­தை­யைப் பட­மாக எடுக்க எம்­ஜி­ஆ­ரும் கம­லும் முயன்று, இப்­போது இயக்­கு­நர் மணி­ரத்­னம் சாத்­தி­ய­மாக்­கி­யுள்­ளார்.

ஜெய­மோ­கன், கும­ர­வேல், மணி­ரத்­னம் ஆகி­யோ­ரின் திரைக்­கதை பெரும் நாவலை கச்­சி­த­மான திரைக் காவி­ய­மாக்­கி­யுள்­ளது.

திரைக்காவியமாக மாறிய கற்­பனை கலந்த வரலாற்றுக் கதை

அரி­யணை ஏறவேண்­டிய மன்னன், முடியை இன்­னொ­ரு­வனுக்­குச் சூட்­டி­விட்டு 14 ஆண்­டு­கள் கட­லோடி நாடு­கள் பிடிக்­கி­றான். சோழப் பேர­ரசை விரி­வாக்­கு­கி­றான். உலக வர­லாற்­றில் எங்­குமே காண முடி­யாத பெரும் கதை இது.

இந்த ஒற்றை வரி­யைக் கொண்டு, 10ஆம் நூற்­றாண்­டில் தென்­கி­ழக்­கா­சியா வரை படை­யெடுத்து சோழப்­பே­ர­ரசை விரி­வாக்­கிய இரா­ச­ராச சோழ­னின் கதையை கற்­பனை கலந்து கல்கி வடித்த கதா­பாத்­தி­ரம், பொன்­னி­யின் செல்­வன்.

சோழ மன்­ன­ராக இருந்த சுந்­தர சோழ­ருக்கு மூன்று பிள்­ளை­கள். பட்­டத்து இள­வ­ர­சர் மூத்த மகன் ஆதித்த கரி­கா­லன், இரண்­டா­வ­தாக மகள் குந்­தவை, இளைய மகன் அருண்­மொழி வர்­மன். இதில் ஆதித்த கரி­கா­லன் இராஷ்­டி­ர­கூடர்­க­ளுக்கு எதி­ராக போர் புரிந்து அதில் வெற்­றி­யும் பெறு­கி­றார்.

தனது தந்­தைக்­கும் சோழ நாட்­டிற்­கும் எதி­ராக சதி நடக்­க­வி­ருப்­பதை அறிந்த ஆதித்த கரி­கா­லன், தனது நண்­பன் வந்­தி­யத்­தே­வனை தஞ்­சைக்கு ஒற்­ற­னாக அனுப்­பி­வைக்­கி­றார்.

வந்­தி­யத்­தே­வ­னின் பய­ணம் வழி­யாக நாவல் நக­ரும். ஆனால் திரைப்­ப­டம் அப்­படியில்லை.

வீரம், அன்பு, பாசம், நட்பு, காதல், துரோ­கம், வஞ்­ச­கம், போட்டி, பொறாமை என அனைத்­தும் நிறைந்த ஒரு நாவலை இரண்டு பாகங்­களில் திரைப்­ப­ட­மாக எடுக்க முடிந்­தி­ருப்­ப­தும் தமிழ் கதைக்கு உலக மக்­க­ளி­டம் இத்­தனை எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தும் முதல் வெற்றி.

கதாபாத்திரங்கள் வெற்றி

கல்­கி­யின் ‘பொன்­னி­யின் செல்­வன்’ பதின்ம வயது இளை­ஞன். பெரி­ய­வர்­களை மதிப்­ப­வன். அமை­தி­யும் அன்­பும் நிதா­ன­மும் நிறைந்­த­வன். போர்த் திறத்­தில் வல்­ல­வன், கலைகளை ரசிப்­ப­வன், யானை­மொழி அறிந்­த­வன்.

நெற்­றி­யில் நீறும், சண்­டை­யில் தீர­மும் பேச்­சி­லும் செய­லி­லும் நிதா­ன­மும் நிறைந்­த­வ­னாக, அருண்­மொழி வர்­மன் பாத்­தி­ரத்­துக்கு உயிர்­கொ­டுத்­துள்­ளார் ஜெயம் ரவி.

வந்­தி­யத்­தே­வ­னா­கவே மாறி­விட்­டார் கார்த்தி. துறு­து­று­வென்று படம் முழுக்க ஓடு­கி­றார், சண்­டை ­போடு­கி­றார், பார்க்­கும் பெண்­களி­டம் காதல் வசப்­ப­டு­கி­றார், ஆழ்­வார்க்­க­டி­யானை வம்­பி­ழுக்­கி­றார், அவ­சரப்­போக்­கால் மாட்­டிக்­கொள்­கி­றார், நகைச்­சு­வை­யா­கப் பேசி படத்தை கல­க­லப்­பாக்­கு­கி­றார்.

ஆதித்த கரிகாலனாக சில காட்சிகளில் மட்டுமே தோன்றும் விக்ரம், கோபத்தையும் தீரத்தையும் உணர்ச்சி ததும்ப வெளிப்படுத்தி உள்ளார். ‘ராவணன்’ படத்தை நினைவூட்டுகிறார்.

வஞ்­ச­மும் கோப­மும் நிறைந்த பேர­ழகி நந்­தி­னி­யாக ஐஸ்­வர்யா ராய், அரச குடும்­பத்தை வழி­நடத்­தும் இள­வ­ரசி குந்­த­வை­யாக த்ரிஷா, விக்­ரம், சரத்­கு­மார், பார்த்­தி­பன், பிர­காஷ் ராஜ், கிஷோர், ஐஸ்­வர்ய லட்­சுமி என்று அனை­வரும் கல்­கி­யின் பாத்­தி­ரங்­க­ளுக்கு உயி­ரூட்­டி­யுள்­ள­னர். சிறு பெண்­ணாக மயங்கி மயங்கி விழும், மென்மை நிறைந்த கொடும்­பா­ளூர் இள­வ­ரசி வானதி பாத்­தி­ரத்­தில் வரும் சோபிதா துலிபாலா­ பெரும் ஏமாற்­றம்.

‘ஐமேக்ஸ்’ தொழில்­நுட்­பத்­தில் எடுக்­கப்­பட்­டுள்ள முதல் தமிழ்ப் படம் இது.

கிரா­ஃபிக்ஸ் தொழில்­நுட்­பத்தை மட்­டுமே அதி­கம் பயன்­படுத்­தா­மல், நேரடி இடங்­களில் நடத்­தப்­பட்ட படப்­பி­டிப்­பி­லும் தோட்டா தர­ணி­யின் மிகப் பெரும் அரங்­கங்­கள் வழி­யா­க­வும் 10ஆம் நூற்­றாண்­டைக் கண்முன் கொண்டு வந்­தி­ருக்­கி­றார்­கள்.

ரவிவர்­ம­னின் ஒளிப் ­ப­தி­வும் தோட்டா தர­ணி­யின் கலை இயக்­க­மும் ஸ்ரீகர் பிர­சாத்­தின் படத்­தொ­குப்­பும் மிகச் சிறப்பு. ஏ.ஆர் ரஹ்­மா­னின் பின்­னணி இசை, பாடல்­கள் இன்­னும் ஈர்க்­கும் வித­மாக அமைந்­தி­ருக்­க­லாம்.

அச்­சர சுத்­த­மான நீண்ட தமிழ் வச­னங்­களில் வரலாற்றுப் படங்­களைப் பார்த்து வளர்ந்­த­வர்­க­ளுக்கு இசைக்­குள் அமுங்கிவிடும் சுருக்­க­மான பேச்­சும் சில­ரது தமிழ் உச்­ச­ரிப்­பும் பாடல் வரி­களும் வருத்­தத்­தைத் தர­லாம்.

ஏற்­கெ­னவே பல தமிழ், பிற மொழிப் படங்­களில் பார்த்த அதே போர்க் காட்­சி­களை மீண்­டும் மீண்­டும் திரை­யில் காண்­பது கொஞ்­சம் அலுப்­பூட்­ட­லாம். கிரா­ஃபிக்­கி­லும் காட்­சி­ய­மைப்­பி­லும் இன்­னும் சிறிது கவ­னம் செலுத்­தி­யி­ருந்­தால் போர்க் காட்­சி­களில் ஏற்­பட்ட சொதப்­ப­லைத் தவிர்த்­தி­ருக்­க­லாம்.

தேவராட்டம் அருமை. கம்­சன் வதம் நட­னக்­காட்­சி­யையும் வடமொழி மந்திரங்களுடான பூரண கும்ப மரியாதையையும் காட்­டி­ய­வர்­கள், சிவ­பக்­தர்­க­ளாக வாழ்ந்த சோழர்­களை ஒரு தேவா­ர­மா­வது முழுமையாக பாட வைத்­தி­ருக்­க­லாமே என்ற ஆதங்கம் ஏற்பட்டால் அது நியாயமானதே.

தமிழர் சிறப்புகளில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்

துணைப் பாத்திரங்களைப் போலவே, முக்கிய பெண் பாத்திரங்கங்களும் மாநிறத் தமிழ் முகங்களாக இருந்திருந்தால் படம் இன்னொருபடி உயர்ந்திருக்கும். பாண்டியர்களுக்கு கருப்பும் சோழர்களுக்கு வெள்ளையும் என்பது போன்ற குறியீடுகள் பொருந்தாதவை. படத்தில் சீனர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் வரலாற்றுக்கு மாறாக அதிகமாகவே உள்ளது.

அனைத்திந்­தி­யப் பட­மாக உல­கெங்­கும் பல மொழி­களில் வெளி­யீடு கண்­டுள்ள இப்­ப­டத்­தில் அன்­றைய தமி­ழர்­க­ளின் கோயில், குடி­யி­ருப்பு உணவு, பானங்­க­ளை­யும் காட்­டி­ தமிழின் தனிச் சிறப்பைக் காட்டியி­ருக்­க­லாம். ஒரு பொதுத்­தன்மையே அவற்­றில் இருந்­தது.

நாவ­லின் சுருக்­கத்­தை­யும் கதைக் களத்­தை­யும் வரை­ப­டம் வழி­யாக படத்­தின் தொடக்­கத்­தில் கூடு­த­லாக விவ­ரித்­தி­ருந்­தால் நாவ­லைப் படிக்­கா­த­வர்­க­ளுக்கு கதை­யைப் புரிந்­து­கொள்ள உத­வி­யாக இருந்­தி­ருக்­கும். பார்வையாளர்கள் நாவ­லின் கதைச் சுருக்­கத்­தை­யா­வது படித்­து­விட்­டுச் சென்­றால் படத்தை முழு­மை­யா­கப் புரிந்­து­கொண்டு பார்க்க முடி­யும்.

கல்­கி­யின் நாவல், பாகு­பலி போன்ற படங்­கள் ஆகி­ய­வற்­று­டன் ஒப்­பீ­டு­க­ளைச் செய்­யா­மல் இருந்­தால் உல­கப் பெரும் மன்­னர்­களில் ஒரு­வ­னான ராஜ­ராஜ சோழ­னின் சிறு­வ­ய­துக் கதையை உல­கத்­துக்கு எடுத்­துச் சொல்­லும் பொன்­னி­யின் செல்­வன் சிறந்­த­தொரு படம்.

70 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு கல்­கி­யின் நாவ­லுக்கு புத்­து­யிர் ஊட்டி, உல­கெங்­கும் வாழும் தமி­ழர்­களை மீண்­டும் தமிழ் வாசிக்க வைத்­தி­ருப்­பது இப்­ப­டத்­தின் மற்­றொரு வெற்றி. சோழ­ரின் புலிக்­கொ­டியை உல­க­மெங்­கும் பெரும் வர­வேற்­பு­டன் பறக்­க­விட்­டி­ருப்­பது தயா­ரிப்­பா­ளர் சுபாஸ்­க­ரன், இயக்­கு­நர் மணி­ரத்­னம் ஆகிய இருவரின் மாபெ­ரும் முயற்சி.

எனினும், தமிழர் சிறப்பை தமிழரும் உலகமும் அறியச் செய்வது இலக்கென்றான் அதை இப்படம் அடையவில்லை என்றே சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட 430 ஆண்டுகள் தமிழகத்தின் நிலப்பரப்புகளுக்கும் அப்பால், கடல்கடந்தும் விரிந்திருந்த பிற்காலச் சோழ வல்லரசின் தொடக்ககால கதை. தமிழரின் ஆடல், பாடல், ஓவியம், கட்டடக் கலைகள் சிறந்திருந்த காலம்.

குடத்துக் ஓலையில் பெயர் எழுதிப் போட்டு தலைவரைத் தேர்ந்தெடுக்கும் குடவோலை முறைமூலம் உலகத்திற்கு வாக்குச்சீட்டு முறையை உலகத்திற்கு அறிமுகம் செய்தவர்கள். கல்லணையும் வீராணம் ஏரியும் கட்டி, மிகச் சிறந்தொரு நீர்பாசன முறையை

உருவாக்கியவர்கள். வீரமும், கலைகளையும், அறிவும் நிர்வாகமும் சிறந்து தழைத்திருந்த தமிழரின் சிறப்பைச் சொல்லாலோ, காட்சியாலோ காட்ட இந்தப் படம் முனையவில்லை.

கதையைச் சொல்லிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திலிருந்த படக்குழுவினர் தங்கள் வேரையும் அடையாளத்தையும் காட்சியாகப் பார்த்துப் பூரிக்க வரும் மக்களை மறந்துவிட்டார்கள்.

புலவர்களையும் சமயக்குரவர்களையும் கலைஞர்களையும் அறிஞர்களையும் போற்றி வளர்த்தவர்கள் தமிழ் மன்னர்கள். பழைய கருப்பு வெள்ளைத் தமிழ்ப் படங்களில் வருவதுபோல் இப்பெருமக்களை ஒரு காட்சியிலாவது அரசவையில் அமரவைத்து அழகுபார்த்திருக்கலாம். ஆதித்த கரிகாலனின் போர் வெறியையும் குடியாட்டத்தையும் காட்டியவர்கள், பொன்வேய்ந்த அவனது காஞ்சி மாளிகையையும் காட்டியிருக்கலாம்.

புத்தரின் பிரம்மாண்டத்தைக் காட்டியதுபோல், சோழர்களின் மாடக்கோயில்களையும் கற்கோயில் சிறப்புகளையும் காட்டியிருக்கலாம். பல கோயில்களை எழுப்பிய செம்பியன் மாதேவியின் சிவ வழிபாட்டைக் காட்டியிருக்கலாம். திருமுறையில் இடம்பெற்றிருக்கும் கண்டராதித்தின் ஒரு பாட்டைச் சொல்லியிருக்கலாம். கட்டியவீட்டுக்குக் குறைசொல்வது நோக்கமல்ல.

சினிமா எனும் பெரும் சக்தி வாய்ந்த ஊடகத்தில் வாரதுவந்த மாமணிபோல பல ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழரின் வரலாற்று பேசப்படும்போது, அது தமிழ் மக்களையும் மற்றவர்களையும் அசைத்துப் பார்க்கத் தவறிவிட்டதோ என்ற ஆதங்கம்தான். வழக்கம்போல இது மணிரத்னம் படம் என மௌனமாகப் போய்விட முடியவில்லை.

துணைப் பாத்­தி­ரங்­க­ளைப் போலவே, முக்­கிய பெண் பாத்­தி­ரங்­கங்­களும் மாநி­றத் தமிழ் முகங்­க­ளாக இருந்­தி­ருந்­தால் படம் இன்­னொ­ரு­படி உயர்ந்­தி­ருக்­கும். பாண்டி­யர்­க­ளுக்கு கருப்­பும் சோழர்­க­ளுக்கு வெள்­ளை­யும் என்­பது போன்ற குறி­யீ­டு­கள் பொருந்­தா­தவை. படத்­தில் சீனர்­கள் சம்­பந்­தப்­பட்ட காட்­சி­கள் வரலாற்றுக்கு மாறாக சற்று அதி­க­மா­கவே உள்­ளது. இதை ஒரு கற்­ப­னை­கள் நிறைந்த கதை­யின் திரைப்­ப­ட­மாக ரசிப்­ப­தோடு நிறுத்­திக்­கொள்ள வேண்­டும். உண்மை வர­லா­றாக உணர்ச்சி பொங்­கத் தேவை­யில்லை.

இப்­ப­டத்­தின் வர்த்­தக வெற்றி, மேலும் பல தமிழ்க் கதை­கள் பெரும் திரைப்­ப­டங்­க­ளாக வழி­வ­குக்­கும். இதன்­மூ­லம் தமிழ் சினி­மா­வும் தமிழ்ச் சிந்­த­னை­யும் வளர்ச்­சி­யைக் காணும்.

ரூ.450 கோடி, 120 நாள்கள்

தமிழ்ச் சினி­மா­வின் அண்­மைய பிரம்­மாண்­டப் படைப்­பு­க­ளைத் தயா­ரித்­துள்ள லைக்கா நிறு­வ­னம்­தான் ‘பொன்­னி­யின் செல்­வன்’ படத்­தை­யும் தயா­ரித்­துள்­ளது.

இப்­ப­டத்­தின் மொத்த செலவு 450 கோடி ரூபா­யில் அடங்­கி­விட்­டது என்று கூறப்படுவது ஒட்­டு­மொத்த இந்­திய திரை­யு­ல­கை­யும் அசர வைத்­துள்­ளது.

120 நாள்­களில் மொத்த படத்­தை­யும் இரு பாகங்­க­ளாக எடுத்து முடித்­துள்­ளார் இயக்கு­நர் மணி­ரத்­னம். ‘பாகு­பலி’ படத்­துக்கு இதை­விட அதிக செல­வும் கால­மும் ஆன­தாக சிலர் சுட்டிக்­காட்­டு­கின்­ற­னர்.

தமி­ழ­கத்­தில் உள்ள பெரும்­பா­லான திரை­ய­ரங்­கு­களில் நேற்று ‘பொன்­னி­யின் செல்­வன்’ படம் வெளி­யீடு கண்­டது. முதல் நாள் வசூல் ஐம்­பது கோடி ரூபாய் என்­கி­றார்­கள்.

முதல் பாகத்­தின் மொத்த வசூல் 700 கோடி ரூபா­யாக இருக்­கும் என்று கணிக்­கப்­பட்­டுள்­ளது. இரண்­டாம் பாக­மும் வசூலை அள்­ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!