தென்கொரியாவில் கிருமித்தொற்று எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது

தென்கொரியாவில் கொரோனா கிருமித் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571 என்று இன்று (பிப்ரவரி 28) தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து தென்கொரியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,337 ஆகியுள்ளது என கொரிய  நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் தெரிவித்தது.

புதிதாக கிருமித்தொற்று ஏற்பட்டவர்களில் 90 விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் டேகு நகர், அதன் அருகில் உள்ள நார்த் கையேங்சாங் மாகாணம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது.

கிருமித்தொற்றால் தென்கொரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 என்ற நிலை தொடர்கிறது.

தென்கொரியாவின் பெரும்பாலான கிருமித்தொற்று சம்பவங்களுடன் தொடர்புடைய ‘ஷின்சோன்ஜி சர்ச் ஆஃப் ஜீசஸ்’ எனும் தேவாலயத்தின் 212,000 உறுப்பினர்களின் பட்டியல் பெறப்பட்டுள்ளதாக அரசாங்கத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் காய்ச்சல், சுவாச நோய்கள் இருப்போரை உள்ளூர் அதிகாரிகள் அடையாளம் காண்பதுடன் அவர்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தி வருவதாக அந்நாட்டு துணை சுகாதார அமைச்சர் கிம் கேங்-லிப் கூறினார்.

தற்போது 40 நாடுகளில் பரவியுள்ள கொரோனா கிருமித்தொற்று தோன்றிய நாடான சீனாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி அங்கு புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 327 என அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் இன்று தெரிவித்தது. அதற்கு முந்திய நாள் இந்த எண்னிக்கை 433ஆக இருந்தது.

இதனையடுத்து, சீனாவில் கிருமித்தொற்றால் மொத்தம் 78,824 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று கிருமித்தொற்றால் அங்கு 44 பேர் உயிரிழந்ததையடுத்து,  சீனாவில் இந்த கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,788 ஆக உயர்ந்துள்ளது.

#கொரோனா #தென்கொரியா #சீனா #தமிழ்முரசு