தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுநோய் உள்ளது என அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த விடுதியில் அனைத்து ஊழியர்களுக்கும் நோய்த்தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டது.
செந்தோசா தீவுக்கு வடக்கே உள்ள பிராணி டெர்மினல் அவென்யூவில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் 1,500க்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் யாருக்கும் தொற்று இல்லை.
தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த விவரங்களைப் பகிர்ந்துகொண்ட போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங், பாதிக்கப்பட்ட ஊழியர் குறித்த மேல்விவரங்களை வெளியிட்டார்.
பாதிக்கப்பட்ட ஊழியர் இந்தியாவிலிருந்து வந்தவர் என்றும் அவர் கப்பல்துறையில் 'லேஷிங்' வேலை செய்பவர் என்றும் தெரிவித்த அமைச்சர் ஓங், அவருடன் நெருக்கத்தில் இருந்த 156 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் என்றும் கூறினார். அவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் எவருக்கும் கிருமித்தொற்று பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது.
"தங்குவிடுதியில் வழக்கமாக நடத்தப்படும் பரிசோதனையில் இந்திய ஊழியர் ஒருவருக்கு கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.
பாதிக்கப்பட்ட ஊழியருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. அவர் தடுப்பூசிகளை முறையாகப் போட்டுக்கொண்டவர்.
தடுப்பூசி போட்டவர்களும் கிருமித்தொற்றால் பாதிக்கப்படலாம் என்பதை இச்சம்பவம் நினைவுபடுத்துகிறது. என்றாலும், நோயின் கடுமையான தாக்கத்தில் இருந்து பாதுகாக்கத் தடுப்பூசிகள் உதவும்," என்றார் அமைச்சர் ஓங்.
தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பாதிக்கப்பட்ட நபர் மற்றவர்களுக்கு நோய்த்தொற்றைப் பரப்புவது குறைவாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமை உத்தரவை நிறைவேற்றி முடிக்கும் தருணத்தில் மீண்டும் பரிசோதிக்கப்படுவர் என்றும் அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.