வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் உள்ள தனது 1,400 ஊழியர்களும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டதாக செம்பகார்ப் மரின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 43 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரம் தேசிய நோய்த்தடுப்புப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் குறிப்பிட்டது.
3,420 படுக்கை வசதிகளுடன் ஜூரோங்கில் அமைந்துள்ள அவ்விடுதியில் இப்போது 2,800 பேர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், அவ்விடுதியில் தங்கியிருக்கும் தனது 1,400 ஊழியர்களும் சிங்கப்பூருக்கு வருமுன் தங்களது நாடுகளிலேயே கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டதாக செம்ப்மரின் நிறுவனம் தெரிவித்தது.
“துக்காங் விடுதியில் உள்ள எங்கள் ஊழியர்கள் அனைவரும் அண்மையில் சிங்கப்பூர் வந்தவர்கள். அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதைச் சரிபார்த்து வருகிறோம்,” என்று அந்நிறுவனம் கூறியது.
கடந்த புதன்கிழமை அவ்விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் அவ்விடுதி நிர்வாகத்தினர்க்கும் இடையே மோதல் எழுந்ததை அடுத்து, கலவரத் தடுப்பூசி போலிசார் அழைக்கப்பட்டனர்.
சுகாதாரமும் உணவும் மோசமாக இருப்பதாகவும் கொவிட்-19 தொற்றிய ஊழியர்களை மீட்பு, சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதில் நீண்ட தாமதமும் ஏற்படுவதாக ஊழியர்கள் புகார் கூறினர்.
அவ்விடுதியில் கிட்டத்தட்ட 500 பேரைக் கிருமி தொற்றிவிட்டதை அடுத்து இச்சம்பவம் நிகழ்ந்தது.
இதனிடையே, குறித்த காலத்தில் தங்கள் ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனரா என்பதை நிறுவனங்கள் சரிபார்க்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு நினைவூட்டியுள்ளது.
“இம்மாதம் 16ஆம் தேதிவரை, வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் விடுதிவாசிகளில் 55 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டது சரிபார்க்கப்பட்டுவிட்டது அல்லது தடுப்பூசி போட்டுக்கொண்டுவிட்டனர்,” என்றும் அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.