லங்காவி: மலேசியாவின் லங்காவித் தீவுக்கு வரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்துலகப் பயணிகள் வரும் நவம்பர் 15ஆம் தேதி முதல் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை என்று மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
மலேசிய சுகாதார அமைச்சு, வெளியுறவு அமைச்சு, குடிநுழைவுத் துறை ஆகியவற்றால் அனுமதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு லங்காவித் தீவு தனது கதவுகளைத் திறந்துவிடுகிறது.
இந்த முன்னோடித் திட்டம் நவம்பர் 15ஆம் தேதி தொடங்கி மூன்று மாதங்களுக்கு இடம்பெறும்.
லங்காவித் தீவுக்குப் புறப்படுவதற்கு 72 மணிநேரத்திற்கு முன்பும் லங்காவிக்கு வந்திறங்கிய இரண்டாவது நாளிலும் பயணிகள் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
குறைந்தது 80,000 அமெரிக்க டாலர் (S$107,616) மதிப்பிலான காப்பீடு வைத்திருப்பதும் அவர்கள் லங்காவியில் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் தங்கியிருக்க வேண்டியதும் அவசியம்.
இந்த முன்னோடித் திட்டத்தை ஆராய்ந்த பிறகு, இது மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று பிரதமர் இஸ்மாயில் சொன்னார்.