சிங்கப்பூரர்களின் வேலை வாய்ப்பு அதிகரிப்பு

கடந்த பத்து ஆண்டுகளில் சிங்கப்பூரர்களுக்கான வேலை வாய்ப்பு விகிதம் அதிகரித்து வந்துள்ளது. இதில் ‘பிஎம்இடி’ எனும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் ஆகியோரும் உள்ளடங்கியிருக்கின்றனர்.

சிங்கப்பூரில் நிரந்தரவாசிகள் உட்பட ஒட்டுமொத்த ஊழியர் அணியுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூரர்களின் இடைநிலை வருமானமும் அதிவேகத்தில் வளர்ச்சி கண்டுள்ளது. சிங்கப்பூரர்களின் வேலையின்மை விகிதமும் குறைவாகவே இருந்து வருகிறது.

சிங்கப்பூர் ஊழியர் அணியில் சிங்கப்பூர் குடிமக்கள் தொடர்ந்து 85 விழுக்காடு பங்கு வகிப்பதால் அவர்களுடைய வேலை வாய்ப்பு பற்றி அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது.

2019ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி மொத்த ஊழியர் அணியில் 2.33 மில்லியன் பேர் வேலை செய்கின்றனர். இவர்களில் 1.97 மில்லியன் பேர் சிங்கப்பூரர்கள். 360,000 பேர் நிரந்தரவாசிகள் என்று மனிதவள அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்த ஊழியர் அணியுடன் ஒப்பிடுகையில் குடிமக்களுக்கான வாய்ப்பு சிறந்த நிலையில் இருந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது. கடந்த ஆண்டு மட்டும் சிங்கப்பூரர்களுக்கான வேலை வாய்ப்பு விகிதம் 63.6 விழுக் காட்டுக்கு அதிகரித்ததாக அறிக்கை மேலும் தெரிவித்தது.

இது, 2009ஆம் ஆண்டில் அறுபது விழுக்காடாக இருந்தது. இந்த உயர்வுக்கு ஊழியர் அணியில் இடம்பெற்ற 65 வயதுக்கு மேற்பட்ட முதிய ஊழியர்களே காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த பத்து ஆண்டுகளில் குடியிருப்பாளர்களின் வேலை விகிதம் 1.4 முதல் 1.6க்குள்ளாகவே இருந்தது. 2009 ஆம் ஆண்டில் 61.6 விழுக்காடாக இருந்த இந்த உயர்வு கடந்த ஆண்டு 65.2 விழுக்காட்டுக்கு அதிகரித்தது.

சிங்கப்பூரர்களில் 25 வயது முதல் 65 வயது வரையிலானவர்களின் வேலை வாய்ப்பு விகிதம் அதே காலகட்டத்தில் 80.5% அதிகரித்தது. இது, முன்னைய 75.6 விழுக்காட்டி லிருந்து கூடியுள்ளது.

வேலை செய்யும் வயதுள்ள சிங்கப்பூரர்கள் 27 விழுக்காட்டினர் 55 வயது முதல் 65 வயது வரை யிலான பிரிவைச் சேர்ந்தவர்கள்.

வேலை செய்யும் சிங்கப்பூரர்களில் பிஎம்இடியின் பங்கு கடந்த ஆண்டு 55.8 விழுக்காட்டுக்கு அதிகரித்தது. இது, கடந்த பத்து ஆண்டுகளில் 47.4 விழுக்காடாக இருந்தது என்று மனிதவள அமைச்சு கூறியது.

2015க்கும் 2018க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவான 60,000 புதிய வேலை வாய்ப்புகளில் 83% சிங்கப்பூரர்களுக்கு கிடைத்துள்ளது.

#தமிழ்முரசு #வேலைவாய்ப்பு #சிங்கப்பூரர்