பச்சைக் கண்களுடன் ஒரு கறுப்புப் பூனை2

சென்ற வாரத் தொடர்ச்சி

அவள் பார்ப்பதை உணர்ந்தவர் உடனே “இந்தப் புத்தாண்டுக்கு பூக்கள்தான் ஃபேஷன்!” என்றார்.

அவள் தனது மடிக்கணினியில் கவனத்தைச் செலுத்தியபடி, “நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?” என்று கேட்டாள்.

“பூனைகள் காணாமல்போன பொருட்களைக் கண்டுபிடிக்கும்,”

“உண்மையாகவா?”

“ஆமாம். என்னுடைய பூனை என் கணவன் ஒளித்துவைக்கும் பியரையும் பணத்தையும் எப்படியும் கண்டுபிடித்துவிடும்.”

“சரி. இப்போது உங்கள் பிரச்சினை என்ன?”

“இந்தப் பச்சைக்கண் கறுப்புப் பூனை வந்ததிலிருந்து என் வீட்டிலிருந்து ஒவ்வொன்றாகக் காணாமல் போகிறது.”

“முதலில் கண்டுபிடிக்கும் என்றீர்கள். இப்போது காணாமல் போகிறது என்கிறீர்கள். என்னதான் சொல்ல வருகிறீர்கள்?”

“பூனைகள் காணாமல்போன பொருளைக் கண்டுபிடிக்கும். பொருள்களைத் திருடிக்கொண்டும் போகும். இது திருட்டுப் பூனை.”

“நீங்கள் போலிசில்தான் புகார் செய்ய வேண்டும்.”

“இங்கே உள்ள போலிஸ் ஸ்டேஷனில் மெஷின்தான் இருக்கிறது. எனக்கு வயதாகிவிட்டது. மெ‌ஷினிடம் வயதானவர்கள் பேச முடியாது.”

“மெஷின் வயது பார்ப்பதில்லை.”

“அதனால்தான் அதோடு பேச முடியாது என்றேன். அதற்கு மரியாதை தெரியாது. நீங்கள்தான் உதவவேண்டும்.”

பொருள்கள் காணாமல் போவதாக இதுவரை நான்கு மூதாட்டிகள் புகார் சொல்லிவிட்டார்கள். என்ன காணாமல் போனது என்று அவள் கேட்கவில்லை. அவர்களும் சொல்லவில்லை.

“வேறு என்ன, ஜேட், தங்கம், முத்து, பணம்தான் போயிருக்கும். வெளியில் சொல்லாதுகள்,” என்பது அவளின் சக ஊழியரான லிம்மின் முடிவு.

“இவர்களைப் பார்த்தால் ஜேடும் முத்தும் வைத்திருப்பவர்களைப் போலவா இருக்கிறது லிம்?”

“உனக்கென்ன தெரியும் அனா. பார்க்கத்தான் இப்படி இருக்கிறார்கள். வீடு இருக்கிறது. அரசாங்கமும் இவர்களுக்கு சலுகைகளை வாரிக் கொடுக்கிறது. வயதானாலும் மேசை துடைக்கிறேன், அட்டைப் பெட்டி சேகரிக்கிறேன் என்று வேலை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இரண்டு வார இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்று எல்லாருக்கும் ஆசை. நிறைய பணம் சேர்த்து வைத்திருப்பார்கள். தலைமுடியைச் சுருட்டி, டை அடித்துக்கொண்டிருக்கிறார்கள் பார். இதற்கு நூறு வெள்ளியாவது ஆகியிருக்கும்.”

“உனக்கு உன் அம்மா காசு கொடுக்கவில்லை என்று கோபம். அதற்காக எல்லாரிடமும் காசு இருக்கும் என்று நினைக்காதே. அது இருக்கட்டும், இந்தப் பச்சைக்கண் கறுப்புப் பூனையை என்ன செய்வது?”

“அனா, எனக்கு புறா பிரச்சினையே தலைக்கு வெளியே பிதுங்குகிறது. உன் பூனைப் பிரச்சினைக்குள் என்னை இழுக்காதே!”

“புறாவுக்கு உணவு போட்டால் அபராதம் என்று போர்ட் வைத்துவிடு. உன் பிரச்சினை தீர்ந்துவிடும். பூச்சிக் கட்டுப்பாட்டாளர்களை போன வாரம் கூப்பிட்டாயே. ஏற்கெனவே நிறைய புறாவைக் கொன்றுவிட்டாய். இன்னும் என்ன பிரச்சினை லிம்?”

“நீ ஒருநாள் அந்தப் பூனைக்குத் தெரியாமல் அதன் பின்னால் போ. அது என்ன செய்கிறது என்று பார். பிறகு என்ன செய்வது என்று யோசிப்போம்.”

‘லிம் சொன்னதை சீரியஸாக எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். பூனையைப் பின் தொடர்ந்திருந்தால் கதை எழுதுவது எளிமையாகியிருக்கும். மேலும் வேறுவழியில்லாமல் லிம் உடன் வந்திருப்பான்,’ என்று அனா யோசிக்கத் தொடங்கியது, “இன்னும் இரண்டு மாதங்கள்தான் இருக்கின்றன. கதைகளை முடித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்,” என்று ஷீலிங் வாட்ஸ்அப் செய்த பிறகுதான்.

அனா பூனையைப் பின்தொடரத் தொடங்கியது, ஷீலிங் கொடுத்த முன்பணம் அனைத்தும் காலியானதும்தான்.

பச்சைக்கண் கறுப்புப் பூனை கண்ணில்படும்போதெல்லாம் அதைத் தொடர்ந்து செல்ல அனா முயற்சி செய்வாள். அது எப்படியோ மறைந்துவிடும். ஒருவேளை கிழவிகள் சொல்வதுபோல அது மந்திரக்காரப் பூனையாக இருக்கலாம் என்று அனா நினைத்துக்கொள்வாள். அவள் அப்படி நினைப்பதற்கு ஏற்பதான் சம்பவங்களும் நடந்தன.

அன்று ஒருநாள் காதில் கடிபட்ட பூனையைத் தூக்கிக்கொண்டு வந்தார் ஒரு குடியிருப்பாளர். அதை அவள் முகத்துக்கு அருகே நீட்டி “பாருங்கள் எப்படிக் கடித்திருக்கிறது,” என்றார்.

அனா சட்டென்று பின்பக்கமாக நகர்ந்ததில், நகரும் நாற்காலியிலிருந்து நழுவிக் கீழே விழுந்துவிட்டாள்.

“ஏன் என்னிடம் காட்டுகிறீர்கள்?”

“நான் பத்திரிகையில் செய்தி கொடுக்கப் போகிறேன். இந்தக் காரியத்தைச் செய்த மிருகத்தைக் கண்டுபிடிக்காமல் ஓயமாட்டேன்.”

“பச்சைக்கண் கறுப்புப் பூனைதான் இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும்,” மனதுக்குள் நினைத்துக்கொண்டாள். காதறுந்த பூனை தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதாக அவளுக்குத் தோன்றியது. “நல்லது. நான் வகுப்புக்குப் போகவேண்டும். நேரமாகிவிட்டது,” என்று பையைத் தோளில் மாட்டியபடி கிளம்பிவிட்டாள்.

பச்சைக்கண் கறுப்புப் பூனை அவளது வட்டாரத்தைச் சேர்ந்த பூனையல்ல. கடந்த ஆண்டு அடுக்குமாடிகளுக்கு நடுவே இருந்த சிறிய திடலில் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடந்தது. சிறப்பு விருந்தினரை வரவேற்க சிங்க நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது எதிரே இருந்த மாடியிலிருந்து தாவிக் குதித்து நேராக சிங்கத்தின் தலையில் பந்து பொம்மைபோல வந்து அமர்ந்தது. கொஞ்சம் கூட தடுமாறவில்லை. சிங்கத்தின் தலையில் கிரீடம்போல உட்கார்ந்துகொண்டு, கூட்டத்தை நோட்டம் விட்டது. பிறகு கீழே குதித்து வலது கால்களையும் இடது கால்களையும் முன்னும் பின்னும் வைத்து ஆடியது. அப்போதுதான் அதை முதன்முதலில் குடியிருப்பாளர்கள் பார்த்தார்கள். கொண்டாட்டத்திற்கு வந்திருந்த அந்தத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அங்கிருந்த அனைவரும் அது நடனத்தின் ஒரு பகுதி என்றே நினைத்து ரசித்தார்கள். ஊடகங்களிலும் பூனையுடன் கூடிய சிங்க நடனம் என்று செய்தி வெளிவந்தது. அது புலி ஆண்டு. புலி ஆண்டில் வந்த பூனை என்று ஒவ்வொருவரும் அதைச் சொந்தம் கொண்டாட நினைத்தார்கள். ஆனால், பிரம்புக்கோலுடன் சுற்றும் ‘ரோத்தான்’ கிழவரைத் தவிர வேறு யாராலும் அதனிடம் அணுக்கமாக முடிந்ததில்லை.

லிம் இந்த விவரங்களைச் சொன்னபோது, “எத்தனையோ பூனைகள் இங்கே இருக்க, இந்த பச்சைக்கண் கறுப்புப் பூனைக்கு மட்டும் ஏன் ரோத்தான் கிழவர் உணவு கொடுக்கிறார்? அதுவும் ஏன் அவர் கொடுப்பதை மட்டுமே தின்கிறது?” எனக் கேட்டாள் அனா.

அவன் வழக்கம்போல, “வசிப்போர் குழுவுக்கு வரும் கிழவிகள் சொன்னார்களா?” என்று கேட்டு சிரித்துவிட்டுப் போய்விட்டான்.

அதற்குப்பிறகுதான் ரோத்தான் கிழவரைப் பின்தொடர்ந்து தானே அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள அனா முடிவெடுத்தாள்.

புளோக் 29ன் 10வது மாடி, எண் 38இல் இருக்கும் அவரது ஈரறை வீடு எப்போதும் பூட்டியே இருக்கும். உள்ளே என்ன இருக்கிறது, யார் இருக்கிறார்கள் என்பது ரோத்தான் கிழவருக்கு உதவி செய்யும் ஒரே ஆத்மாவான குடியிருப்பாளர் குழுத் தலைவருக்குக்கூடத் தெரியாது. ஒரு கொசுகூட தன் வீட்டுக்குள் நுழையக்கூடாது என்று வீட்டின் அத்தனை துவாரங்களையும் வலைபோட்டு மூடி வைத்திருக்கிறார். ஒரு பகல் முழுவதும் மாடிப்படியில் உட்கார்ந்தபடி அந்த வீட்டைக் கண்காணித்தாள். கதவு, சன்னல்கள் எல்லாமே மூடியபடியே இருந்தன. வாசனைகூட வெளியே வரவில்லை. ரோத்தான் கிழவர் வீட்டிலில்லை என்று முடிவுசெய்து அனா கிளம்பினாள்.

மின்தூக்கி ஐந்தாவது மாடியில் நின்றபோது, மூக்கைப் பிடித்தடி அவசரமாக உள்ளே நுழைந்த பெண், தலையை ஆட்டி “இப்படியெல்லாம் கொடுமை நடக்குமா?” என்றார்.

மூடப்போன மின்தூக்கிக் கதவை வலிந்து திறந்து, வெளியே பாய்ந்தாள் அனா.

கழுத்தை இறுக்கக் கட்டிக்கொண்டு அழுதுகொண்டிருந்த சிறுமியை தூக்கிக்கொண்டிருந்தார் ஒரு மாது. கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தார். மிகுந்த பதற்றத்துடன் “உடனே வா” என்று யாரையோ கூப்பிட்டுக்கொண்டிருந்தார். கேவியபடி, சிறுமி தலையை லேசாகத் தூக்கி அரைக்கண்ணால் இடதுபக்கம் பார்த்தாள். சிறுமியின் பார்வைபோன திசையை நோக்கின அனாவுக்கு கால்கள் நடுங்கின. கழுத்து கடித்துக் குதறப்பட்ட நிலையில் சாம்பல் நிறக் குட்டிப் பூனை. கால்கள் நாற்புறமும் விரிந்து. மல்லாந்தநிலையில் கோரமாகக் கிடந்தது. கண்கள் மேல்நோக்கித் திறந்திருந்தன. உறைந்தும் உறையாமலும் இருந்த ரத்தம், சிறிது நேரத்துக்கு முன்னர்தான் அச்சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்தியது.

“இந்தப் பச்சைக்கண் பூனையை உடனடியாக நீங்கள் ஏதாவது செய்தே ஆக வேண்டும். அது என்ன செய்கிறது தெரியுமா?”

“என்ன செய்கிறது?”

“முன்னர் பதுங்கி பதுங்கி செய்யும். இப்போது துணிச்சல் வந்துவிட்டது...”

“என்ன நடந்தது...”

சற்றும் முற்றும் பார்த்த அந்தக் கிழவி, போனவாரம் பயத்தோடு குசுகுசுத்தது அனாவுக்கு நினைவுக்கு வந்தது.

“அது ஒரு குட்டிச்சாத்தான்! மற்றப் பூனைகளின் கழுத்தைக் கடித்து ரத்தம் குடிக்கிறது....”

“அது கடித்ததை நீங்கள் பார்த்தீர்களா?”

“வேறு யாராக இருக்கமுடியும் என்று நீ நினைக்கிறாய்?” பதில் கேள்வி கேட்ட கிழவிக்கு அன்று அவள் பதில் சொல்லவில்லை.

அனா அதிர்ச்சியோடு மாடிப் படியோரத்தில் கிடந்த பூனையை தள்ளி நின்றபடியே பார்த்தாள். அதன் கழுத்துப்பகுதியில் பற்களின் தடம் ஆழமாகப் பதிந்திருந்தது. ரத்தவாடை குமட்டியது. மின்தூக்கி திறக்கும் சத்தம் கேட்கவும் வேகமாக மின்தூக்கியை நோக்கி நடந்தாள்.

மீண்டும் 10வது மாடிக்குப் போனாள். ரோத்தான் கிழவரின் வீடு பூட்டியே இருந்தது. வீட்டு வாசல் தரையை உற்றுப்பார்த்தாள். சுத்தமாக இருந்தது. குனிந்து வாசல் கதவின் கீழ்ப்பகுதியில் இருந்த மெல்லிய இடுக்கு வழியாகப் பார்த்தாள். கதவில் காதை வைத்துப் பார்த்தாள். சிறு சத்தம்கூட இல்லை. கதவைத் தட்டலாமா என அவள் யோசித்துக்கொண்டிருந்தபோது உர்ர் என உறுமல். பதறியபடி பத்தாவது மாடியிலிருந்து படிகளிலேயே இறங்கி கீழே ஓடினாள்.

அந்தக் காலத்தில் சீனாவிலிருந்து படகில் வந்த எத்தனையோ சீனர்களில் ரோத்தான் கிழவரும் ஒருவர். என்றாலும் கொஞ்சம் வித்தியாசமானவர். அவரின் பெயர் இதுவரையில் நாடாளுமன்ற உறுப்பினருக்குக்கூடத் தெரியாது. அடையாள அட்டையை வெளியில் எடுக்கவேமாட்டார். பெயரைக்கூட சொல்லாமல் ஒருவர் இந்த ஊரில் இருப்பது அறவே சாத்தியமில்லை என்பது உண்மை என்றாலும், அப்படி ஒருவர் இதுகாலம் வரையிலும் வாழ்வதுதான் உண்மையான உண்மை என்பது லிம் அவளுக்கு மறுவாரம் கொடுத்த தகவல்.

பூனையைத்தானே தேடுகிறோம், ஏன் கிழவர் பின்னால் சுற்றுகிறோம் என்று அவளுக்குத் திடீரென்று சந்தேகம் வரவும் பச்சைக்கண் பூனையை மட்டுமே இனிக் கவனிக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

அவள் பச்சைக்கண் கறுப்புப் பூனையைத் தேட தேட புதிது புதிதாக பிரச்சினைகளும் வந்தன. அவளது வீட்டிலும் அவளது அடுக்குமாடியிலுள்ள பல வீடுகளிலும் ஒற்றைக் காலணி காணாமல் போவது அதிகரித்தது. அதில் சில இரண்டு அடுக்குமாடிக் கட்டடங்கள் தள்ளி உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் கீழ்த்தளத்தில் கிழிந்து கிடந்தன. அதுபோல அவளது வீட்டின் முன்பும் காணாமல் யார் யாருடைய ஒற்றைக் காலணிகளோ இருக்கத் தொடங்கவும் அச்சம் ஏற்பட்டது.

எப்போதும் தன் வீட்டு வாசலில் நசுங்கிப்போன நத்தையைக் கொண்டு வந்து போட்டுச் செல்வது பச்சைக்கண் கறுப்புப் பூனைதான் என அவள் நம்பத் தொடங்கிய அன்றுதான் மின்தூக்கியின் குறுக்கே அது சென்றது. பூனை இடம் வலமாகச் சென்றால் அதிர்ஷ்டம் என்பதை அவள் இணையத்தில் அறிந்திருந்தாள். ஆனால், எது இடது பக்கம், எது வலது பக்கம் என்று அந்தக் கணத்தில் அவளால் யோசிக்க முடியவில்லை. அம்மா அவளை கால்படாத இடத்திலிருந்து அருகம்புல் பிடுங்கி வரச் சொல்லியிருந்தார். அனா புல்லில் நடப்பதில்லை. யாரும் நடந்தும் அவள் பார்த்தில்லை. அதனால் அவளது அடுக்குமாடிக்குக் அருகேயிருக்கும் புல்தரையிலேயே அருகம்புல் பிடுங்கிக்கொள்ளலாம் என எண்ணினாள்.

நாலடி நடந்திருப்பாள். யாரோ தன்னை பின்புறமிருந்து உற்றுப்பார்ப்பதாகத் தோன்றியது. திரும்பிப் பார்த்தாள். எவருமில்லை. யோசனையோடு புல் பிடுங்கக் குனிந்தபோது, உர்ரென்ற உறுமல். பயந்து தடுமாறிக் கீழே விழுந்துவிட்டாள். விழுந்த நிலையிலேயே உறுமல் வந்த திசையைப் பார்த்தாள். வரிசையாக இருந்த குரோட்டன் செடிகளுக்கு பின்னால் அசைவு தெரிந்தது. உற்றுப் பார்த்தாள். சரியாக எதுவும் புலப்படவில்லை. செடிகளுக்குள் ஏதோ அசைவது மட்டும் தெரிந்தது. அது மிக மெதுவாக அசைந்து அசைந்து, சட்டென அதிவேகமாக உயரப் பாய்ந்தது. அலறியபடி புல்தரையில் தலைகுப்புறப்படுத்துக்கொண்டாள். அதன்பிறகு என்ன நடந்தது என்று அனாவுக்கு தெரியாது.

“என்ன... என்ன.. என்ன நடந்தது...” அவளைச் சுற்றி ஒரு கூட்டம் கூடியிருந்தது.

“டைகர்... டைகர்...”

“இங்கே எங்கே டைகர் இருக்கிறது? கடைசி டைகர்வரை வேட்டையாடிக் கொன்றுவிட்டார்களே. டைகர் பியர்தான் இருக்கிறது. நீ என்ன பியர் குடித்துவிட்டு விழுந்து கிடக்கிறாயா?”

“ஆமாம், ஆமாம் ஒரு காலத்தில் புலி நிறைய இருந்தது. புலி பிடித்த கூலி இந்தியர் பரம்பரையில் வந்துவிட்டு இப்படிப் பயப்படுகிறாயே...” யாரோ சொல்லிவிட்டுச் சிரிக்கவும் மற்றவர்களும் சிரித்தார்கள்.

“ஒருவேளை இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக நீந்தி வந்த புலியாக இருக்குமோ...?” ஒரு தமிழ் இளைஞன் கிண்டல் செய்தான்.

அவள் ஒன்றும் தன்னை பாதிக்காததுபோல துடைத்துக்கொண்டு எழுந்து சென்றாலும் ரோத்தான் கிழவரையும் பச்சைக்கண் பூனையையும் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். சட்டவிரோதமாக ரோத்தான் கிழவர் பூனை வளர்க்கிறார் என்று புகார் செய்வது என்று முடிவெடுத்தாள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!